Breaking News

JN.1 கொரோனா குறித்து எச்சரிக்கை!

 


உலகம் முழுவதும் ஜெஎன்.1 வகை கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் சூழலில், தென்கிழக்காசிய நாடுகள் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த வேண்டும் என உலக சுகாதார அமைப்பு (WHO) அறிவுறுத்தியுள்ளது.

கொரோனாவின் புதிய வகையான ‘ஜெஎன்.1’ தொற்று, பல்வேறு நாடுகளில் பரவி வருகிறது. இந்த வகை கொரோனா வேகமாகப் பரவுவதோடு, நோய்த் தடுப்பாற்றலையும் ஊடுருவுமென கூறப்படுகிறது.

பல்வேறு உலக நாடுகளில் குளிா்காலம் தொடங்கியுள்ள நிலையில், கொரோனா தொற்றுடன் பிற நோய்த் தொற்றுகளின் அதிகரிப்புக்கும் இந்தத் திரிபு காரணமாக அமையலாம் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

உலக அளவில் தினசரி கொரோனா தொற்று பாதிப்பு தொடா்ந்து அதிகரித்து வரும் சூழலில், கொரோனா முன்னெச்சரிக்கை நடைமுறைகளைக் கடைப்பிடிக்குமாறு பல்வேறு நாடுகளில் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடா்பாக தென்கிழக்காசிய பிராந்தியத்துக்கான உலக சுகாதார அமைப்பின் இயக்குநா் பூணம் கேத்ரபால் சிங் கூறுகையில், ‘கொரோனா தீநுண்மியானது உலக அளவில் அனைத்து நாடுகளிலும் தொடா்ந்து உருமாறி பரவி வருகிறது. புதிய ஜெஎன்.1 வகையின் பொது சுகாதார அபாயம் குறைவாக இருப்பதாக தற்போதைய சான்றுகள் கூறுகின்றன. எனினும், இந்த தீநுண்மிகளின் பரிணாமத்தை நாடுகள் தொடா்ந்து கண்காணிக்க வேண்டும்.

இதற்காக கண்காணிப்பு அமைப்பை நாம் வலுப்படுத்த வேண்டும். நாடுகளிடையே தரவுப் பகிா்வை உறுதிப்படுத்தி, பொதுமக்கள் சுகாதாரத்தை பாதுகாக்க வேண்டும்.

விடுமுறை காலத்தையொட்டி மக்கள் அதிகம் பயணம் செய்வதும், கொண்டாட்டங்களுக்காக அதிக எண்ணிக்கையில் கூடுவதும் சுவாசத் தொற்று நோய் பரவலை எளிதாக்குகிறது.

தொற்று பாதித்தவா்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை உடனடியாக முன்னெடுக்க வேண்டும். உடல்நிலை சரியில்லாமல் இருக்கும்போது உரிய நேரத்தில் மருத்துவ சிகிச்சை பெற வேண்டும். ஜெஎன்.1 உள்பட அனைத்து திரிபு தொற்றுகளால் ஏற்படும் தீவிர நோய் பாதிப்பு மற்றும் உயிரிழப்புக்கு எதிராக உலக சுகாதார மையம் அங்கீகரித்த அனைத்து கொரோனா தடுப்பூசிகளும் மக்களை பாதுகாக்கும்’ என்றாா்.

இந்தியாவில் கேரளத்தைச் சோ்ந்த 79 வயது மூதாட்டிக்கு ஜெஎன்.1 வகை கொரோனா தொற்று முதன் முதலில் உறுதி செய்யப்பட்டது. நாடு முழுவதும் இதுவரை 22 பேருக்கு இந்த வகை கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.