Breaking News

மன்சூர் அலிகானுக்கு ரூ.1 லட்சம் அபராதம்!

 


நடிகர் மன்சூர் அலிகான் அளித்த பேட்டி ஒன்றில் நடிகை திரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கூறியிருந்தார். இதற்கு நடிகை திரிஷா கண்டனம் தெரிவித்தார். தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு, நடிகர் சிரஞ்சீவி ஆகியோரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

மன்சூர் அலிகான் பேசிய கருத்து மிகப்பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்தது. இதனால் பெண்களை இழிவுப்படுத்தி பேசுதல்உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் வழக்கு தொடர்ந்தனர். இதற்கிடையே மன்சூர் அலிகான் தன்னுடைய கருத்துக்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்டார். நடிகை திரிஷாவும் மன்னித்ததாக தெரிவித்தார்.

இத்துடன் பிரச்சனை முடிந்துவிட்டது என்று நினைக்கையில் நடிகர் மன்சூர் அலிகான், நடிகைகள் திரிஷா, குஷ்பு மற்றும் நடிகர் சிரஞ்சீவிக்கு எதிராக மான நஷ்டஈடு கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மூவரும் தலா ஒரு கோடி ரூபாய் வீதம் ரூ.3 கோடி வழங்க உத்தரவிட வேண்டும் என புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து இந்த வழக்கு விசாரணைக்கு வந்ததுபோது இந்த விவகாரத்தில் திரிஷா தான் வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும் என்று கூறியதோடு எங்களுக்கு எதுவும் தெரியாது என்று நினைக்க வேண்டாம் என்று நீதிபதி தெரிவித்தார். மேலும், மன்சூர் அலிகான் மனுவிற்கு பதிலளிக்கும் படி நடிகைகள் திரிஷா, குஷ்பு மற்றும் நடிகர் சிரஞ்சீவிக்கு உத்தரவிட்ட நீதிபதி இந்த வழக்கை டிசம்பர் 22-ஆம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதி நீதிமன்ற நேரத்தை வீணடிக்கும் நோக்கத்திலும், விளம்பர நோக்கத்திற்காகவும் வழக்கு தொடரப்பட்டுள்ளது என்று கூறி நடிகர் மன்சூர் அலிகானுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து வழக்கை தள்ளுபடி செய்தார். மேலும், அபராதத் தொகையை இரண்டு வாரங்களில் சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.