அரசாங்கத்தின் ஆயுட்காலம் இவ்வருடத்துடன் முடிந்து விடும் : சஜித் பிரேமதாச!
அரசாங்கத்தினால் நாட்டு மக்களின் நலன்களை முன்நிறுத்திக்கொண்டு, சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்பாட்டை எட்ட முடியவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
பொலன்னறுவையில் அமைந்துள்ள கதுருவெல, அல்-மினா மகா வித்தியாலத்தில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“வங்குரோத்தான நமது நாட்டில் மக்களை அரசாங்கம் பொருட்படுத்தவில்லை. இன்று நாட்டில் தோல்வியடைந்த அரசாங்கமே ஆட்சியில் இருந்து வருகிறது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் நாட்டு மக்களைக் கொல்லாமல் கொன்று வருகிறது.
இந்த அரசாங்கத்திற்கு மக்கள் பக்கம் இருந்து சர்வதேச நாணய நிதிய உடன்பாட்டை எட்ட முடியவில்லை.
220 இலட்சத்துக்கும் அதிகமான மக்களை பொருட்படுத்தாது பெரும் செல்வந்தர்களையே இந்த அரசாங்கம் பாதுகாக்கின்றது.
சாதாரண மக்களின் பேச்சு சுதந்திரத்தையும் ஜனநாயக சுதந்திரத்தையும் அரசாங்கம் இன்று பறித்துள்ளது.
இணையப் பாதுகாப்புச் சட்டம் மற்றும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் ஆகியவற்றை பயன்படுத்தி மக்களின் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
உண்மையை அறியும் உரிமையைப் பறிக்க முயற்சித்து வருகின்றனர். இவ்வாறான அரசாங்கமொன்றில், நாட்டை ஆளும் ஆட்சியாளர்கள் சொகுசு வாழ்க்கை வாழ்கின்றனர்.
சாதாரண மக்கள் 3 வேளை உணவு உண்பதற்கு சிரமப்பட்டு வருகின்றனர்.
இந்த சாபக்கேடான அரசாங்கத்தின் ஆயுட்காலம் இவ்வருடத்துடன் முடிந்து விடும்” என சஜித் பிரேமதாச மேலும் குறிப்பிட்டார்.