Breaking News

ராணுவ பட்ஜெட்டை அதிகரிக்கும் கட்டாயத்தில் நடுநிலை நாடு!

 


முதல் மற்றும் இரண்டாம் உலக போர்களில் ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்து, எந்த அணியிலும் சேராமல் நடுநிலை வகித்து வந்தது. இரண்டாம் உலக போர் முடிந்த பிறகும் உலகில் நடைபெற்ற போர்களில், சுவிட்சர்லாந்து எந்த நாட்டிற்கும் ஆதரவான நிலைப்பாட்டை எடுக்கவில்லை.

இதனால் அந்நாடு உலக நாடுகளில் "நியூட்ரல்" சுவிட்சர்லாந்து என அழைக்கப்பட்டது.

அமைதியை விரும்பும் நாடாக போரில் ஈடுபடாமல் தொடர்ந்து இருந்து வந்ததால், ராணுவத்திற்கு இதுவரை சுவிட்சர்லாந்து மிக குறைந்த அளவே செலவு செய்து வந்தது.

சமீப சில வருடங்களாக உலகில் நடைபெறும் போர்களினால் அதிகரித்துள்ள அமைதியின்மை பல நாடுகளுக்கு போர் குறித்த சித்தாந்தங்களில் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த போர்கள் சுவிட்சர்லாந்திலும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

சுவிட்சர்லாந்தின் ராணுவ அமைச்சர் வயோலா அம்ஹர்ட் (Viola Amherd) தெரிவித்ததாவது:

அடுத்த 4 வருடங்களில் ராணுவ செலவினங்களுக்கான பட்ஜெட் 19 சதவீதம் வரை அதிகரிக்கப்பட உள்ளது.

கடந்த 30 வருடங்களாக ராணுவ செலவினங்களை குறைத்து வந்துள்ளதால் நாட்டின் ராணுவத்தின் வலிமை குறைந்துள்ளது. இழந்த வலிமையை மீட்டு எடுக்க சில ஆண்டுகளாகும்.

அடுத்த 12 வருடங்களில் ராணுவம் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை தெளிவுபடுத்த உள்ளோம். இந்த அணுகுமுறை தற்போதுதான் முதல்முறையாக கடைபிடிக்கப்படுகிறது.

இவ்வாறு வயோலா கூறினார்.

ஐரோப்பிய கண்டத்தில் இருந்தாலும், 27 ஐரோப்பிய நாடுகளை உள்ளடக்கிய ஐரோப்பிய ஒன்றியத்தில் (European Union) சுவிட்சர்லாந்து இணையவில்லை.

அதிகமாக ஒதுக்கவுள்ள நிதியால், ரேடார் அமைப்புகளை மேம்படுத்துதல், குறைந்த தூர ஏவுகணைகளை உருவாக்குதல், ராணுவ டேங்குகளை அதிகரித்தல், சைபர் தாக்குதலை எதிர்கொள்ளும் கட்டமைப்பை உருவாக்குதல் என பல திட்டங்களை சுவிட்சர்லாந்து செயல்படுத்த உள்ளது.

முதல் மற்றும் இரண்டாம் உலக போர்களில் நடுநிலைமை வகிக்க முடிந்த சுவிட்சர்லாந்திற்கு, ரஷிய-உக்ரைன் போர் மற்றும் இஸ்ரேல்-ஹமாஸ் போர் ஆகிய 2 போர்களால் நாட்டின் எதிர்கால திட்டங்களையே மாற்ற நேரிட்டது குறிப்பிடத்தக்கது.