அரசாங்கம் இந்தியாவின் கைப்பொம்மையாக செயற்படுகின்றது- வசந்த முதலிகே!
அரசாங்கம் இந்தியாவின் கைப்பொம்மையாகச் செயற்பட்டு வருகின்றது என மக்கள் போராட்ட இயக்கத்தின் உறுப்பினர் வசந்த முதலிகே தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது“ நாடு இன்று பாரிய பொருளாதார பின்னடைவில் உள்ளது. அரசாங்கத்திடம் பொருளாதாரத்தை முகாமைத்துவம் செய்வதற்கான எந்த திட்டங்களும் கிடையாது. வெளிநாடுகளில் கடன்பெற்று அதனூடாகவே நாட்டின் பொருளாதாரத்தை முன்னோக்கி கொண்டு செல்கின்றனர்.
சர்வதேச நாணயநிதியத்திடம் கடன்பெற்றுள்ளனர். இன்று சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கமையவே அனைத்து திட்டங்களும் நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. தேசிய வளங்களை இந்தியாவுக்கு விற்பனை செய்வது மாத்திரமல்லாது இந்தியாவின் கைப்பொம்மையாக செயற்படுகின்றது.
அதேபோல் கிளிநொச்சியில் உள்ள காணியும் அவுஸ்திரேலியாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. அரசாங்கத்திற்கு ஆதரவான செல்வந்தர்களுக்கு மாத்திரமே சலுகைகளை அரசாங்கம் வழங்குகின்றது. இவ்வாறான ஒருநாட்டிலேயே பொருளாதார பிரச்சினை முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக ஜனாதிபதியும் மத்திய வங்கியின் ஆளுநரும் தெரிவிக்கின்றனர். ஆனால் நாட்டு மக்கள் இன்று வறுமையில் அல்லற்படுகின்றனர்” இவ்வாறு வசந்த முதலிகே தெரிவித்துள்ளார்.