வெடுக்குநாறி விவகாரம்: நாடாளுமன்ற அமர்வுகளைப் புறக்கணிக்குமாறு கோரிக்கை!
வவுனியா – வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலயத்தில் நடைபெற்ற அத்துமீறல்களுக்கு உரிய தீர்வு கிடைக்கும் வரை நாடாளுமன்ற அமர்வுகளைப் புறக்கணிக்கும் தீர்மானத்தை எடுத்து உதவுமாறு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம், ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பின் சார்பில், தலைமை ஒருங்கிணைப்பாளர் அகத்தியர் அடிகளார், தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கோரிக்கை கடிதங்களையும் அனுப்பி வைத்துள்ளார்.
எத்தனையோ கண்டன அறிக்கைகள் வெளியிட்டும், கவனயீர்ப்புக்கள் நடைபெற்ற போதும் வவுனியா, வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலய விவகாரத்திற்கு தீர்வு கிடைக்கவில்லை என அவர் குறித்த கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில், அரசாங்கத்திற்குப் பாரிய அழுத்தத்தை பிரயோகிக்கவும், சர்வதேச கவனத்தை ஈர்த்து இந்தப் பிரச்சனைக்கு தீர்வைப் பெறவும், உரிய தீர்வு கிடைக்கும் வரை நாடாளுமன்ற அமர்வுகளைப் புறக்கணிக்கும் தீர்மானத்தை எடுத்து உதவுமாறு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பின் சார்பில், தலைமை ஒருங்கிணைப்பாளர் அகத்தியர் அடிகளார் கோரிக்கை விடுத்துள்ளார்.