Breaking News

ஜனாதிபதித் தேர்தல் : தமிழ் நிலைப்பாடு என்ன? நிலாந்தன் கட்டுரை!

 நாடு ஒரு தேர்தலை நோக்கி போய்க்கொண்டிருக்கும் பொழுது தமிழரசுக் கட்சியானது தொடர்ந்து முடிவெடுக்க முடியாத ஒரு நிலையில் காணப்படுகின்றது. தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள பெரிய கட்சி அது. அதன் செயற்பாடுகள் காரணமாக அது படிப்படியாக உடைந்து உடைந்து அதன் ஏகபோகத்தை இழந்து விட்டது என்பது உண்மைதான்.என்றாலும் அதுதான் இப்பொழுது உள்ளத்தில் பெரிய கட்சி. அக்கட்சி ஒரு தேர்தல் ஆண்டில் முடிவெடுக்க முடியாதபடி உடைந்து காணப்படுவது,தென் இலங்கைக்குச் சாதகமானது.

நீதிமன்றம் கட்சியை முடக்கவில்லை. ஆனால் அண்மையில் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய தலைவர் செயல்பட முடியாத ஒரு நிலை. அதனால் முன்னைய தலைவராகிய மாவை சேனாதிராஜாவே இப்பொழுதும் தலைவராக உள்ளார். மாவை ஒரு திறமையான தலைவராக இருந்திருந்தால் கட்சி இப்படி ஒரு சீரழிவுக்கு வந்திருக்காது என்ற கருத்து கட்சிக்கு உள்ளேயும் கட்சிக்கு வெளியேயும் உண்டு. அவருடைய தலைமையின் கீழ் தான் கட்சிக்குள் இரண்டு அணிகள் விருத்தியடைந்தன. தேர்தல் மூலம் ஒரு தலைவரை தெரிவு செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.அது ஜனநாயகமானது தான்.ஆனால் அதனால் கட்சி இரண்டாக உடைந்து நிற்கின்றது.

யாருடைய தலைமையின் கீழ் தமிழரசு கட்சி இரண்டாக உடையும் வளர்ச்சிகள் ஏற்பட்டனவோ அதே தலைவர் தான் தொடர்ந்து அக்கட்சிக்கு தலைமை தாங்குகிறார். எனவே ஜனாதிபதி தேர்தலில் உடைந்த அணிகள் ஒன்றிணைந்து ஒரு பொது முடிவை எடுக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டா? அதை நோக்கி கட்சியை ஐக்கியப்படுத்த மாவையால் முடியுமா?அவருக்கு வயதாகிவிட்டது. உடலாலும் மனதாலும் தளர்ந்து விட்டார்.

கட்சிக்குள் ஏற்பட்ட பிளவு ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான முடிவுகளிலும் பிரதிபலிப்புகளை ஏற்படுத்துகின்றது. ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கட்சி இரு வேறு நிலைப்பாடுகளோடு காணப்படுவதாகத் தெரிகிறது.

இதில் சுமந்திரன் அணி தான் முதலிலேயே தன் நிலைப்பாட்டை வெளிப்படையாகத் தெரிவித்தது. சுமந்திரன் அணியானது தென்னிலங்கையில் உள்ள எந்த வேட்பாளரை தான் ஆதரிக்க போகிறேன் என்பதனை வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை.ஆனால் தமிழ்ப் பொது வேட்பாளரை அவர்கள் தொடக்கத்திலிருந்தே எதிர்க்கிறார்கள்.பொது வேட்பாளரை கொண்டுவரும் தரப்புக்கள் ராஜபக்சக்களை அதாவது ரணிலை வெற்றி பெற வைக்க முயற்சிக்கின்றனர் என்றும் அவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

ஏனெனில் தமிழ் மக்களின் வாக்குகள் இயல்பாக சஜித்துக்கு போவதை தடுத்து அவற்றை பொது வேட்பாளர் பெற்றுக் கொள்வார். அதன்மூலம் சஜித்தின் வெற்றி வாய்ப்புகள் குறையும். அது அதன் தக்கபூர்வ விளைவாக ரணிலே வெல்ல வைக்கும் என்று ஒரு வாதம் உண்டு.

இன்னொரு வாதம், தமிழ் பொது வேட்பாளர் எனப்படுகிறவர் சிங்கள மக்கள் மத்தியில் இன விரோதத்தைத் தூண்டுவதற்கு வாய்ப்பாக அமைவார். அதன் மூலம் ராஜபக்சக்கள் மீண்டும் தமது வாக்கு வங்கியைப் புதுப்பித்துக் கொள்ளலாம் என்று கூறப்படுவது.

மேற்கண்ட இரண்டு காரணங்களையும் முன்வைத்து தமிழ்ப் பொது வேட்பாளரை எதிர்ப்பவர்கள் யார் யார் என்று பார்த்தால், அவர்கள் அனேகமாக சுமந்திரன் அணியை சேர்ந்தவர்கள்,அல்லது சிறீதரன் அணிக்கு எதிரானவர்கள் என்ற ஒரு தொகுக்கப்பட்ட படத்தைப் பெறலாம்.

தமிழரசுக் கட்சிக்குள் தேர்தல் நடப்பதற்கு முன்னரே சாணக்கியன் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான தன் கருத்தை வெளிப்படுத்தி விட்டார். அதில் அவர் தமிழ்ப் பொது வேட்பாளர் என்று தெரிவை நிராகரித்திருந்தார். அதன் பின் சுமந்திரன் அணிக்கு நெருக்கமானவர்கள்,சார்பானவர்கள் அல்லது மறைமுகமாக அந்த அணியை ஆதரிப்பவர்கள் அல்லது எதிர்காலத்தில் அந்த அணியோடு கூட்டு வைத்துக் கொள்ளலாம் என்று காத்திருப்பவர்கள் போன்ற பல்வேறு வகைப்பட்டவர்களும் தமிழ்ப் பொது வேட்பாளருக்கு எதிராக அபிப்பிராயம் தெரிவித்து வருகிறார்கள்.

இந்த விடயத்தில் சுமந்திரன் அணி தெளிவாகவும் தீர்மானகரமாகவும் காணப்படுகின்றது. கட்சி ஒரு முடிவை எடுத்ததோ இல்லையோ அந்த அணி தன் முடிவை பகிரங்கமாகத் துணிச்சலாகக் கூறி வருகின்றது.

ஆனால் அதற்கு எதிரணியாக காணப்படுகின்ற சிறீதரன் அணியோ தன் முடிவை வெளிப்படையாகத் தெரிவிக்க தயங்குவதாக தெரிகிறது. சிறீதரன் தமிழ் பொது வேட்பாளர் தொடர்பான கருத்தரங்குகளில் காணப்படுகின்றார்.குறிப்பாக “மக்கள் மனு” என்று அழைக்கப்படும் கருத்தரங்கு தந்தை செல்வா கலையரங்கில் நடந்த பொழுது அதில் அவர் உரையாற்றியிருக்கிறார்.அவருடைய உரை தமிழ் பொது வேட்பாளருக்கு சாதகமாகக் காணப்பட்டது. அவர் கொள்கை அளவில் தமிழ் பொது வேட்பாளர் என்ற தெரிவை ஏற்றுக்கொள்கிறார். ஆனால் அது தொடர்பான இறுதி முடிவை கட்சி கூடி முடிவெடுக்க வேண்டும் என்று கூறுகிறார்.

அவருடைய அணியை சேர்ந்தவராகக் கருதப்படும் தவராசாவும் அவ்வாறான கருத்துக்களைத் தெரிவித்து வருகிறார். மேலும் கிளிநொச்சியில் சிறீதரனின் வலது கை போல காணப்படும் முன்னாள் பிரதேச சபை தவிசாளரும் முகநூலில் தமிழ்ப் பொது வேட்பாளருக்கு ஆதரவாக எழுதியிருக்கிறார்.அதை அவர் தன்னுடைய தனிப்பட்ட முடிவு என்றும் ஆனால் கட்சி என்ன முடிவு எடுக்கின்றதோ அதற்குத் தான் கீழ்படிவேன் என்றும் தெரிவித்துள்ளார். எனவே சிறீதரன் அணியானது பொது வேட்பாளர் தெரிவிக்குக் கிட்டவாக நிற்கிறது.

சுமந்திரன் அண்மையில் அனுர குமார யாழ்ப்பாணம் வந்திருந்த பொழுது அந்தக் கூட்டத்தில் முன் வரிசையில் காணப்பட்டார். ஆனால் அதற்காக அவர் ஜேவிபிக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுப்பார் என்று எடுத்துக் கொள்ளத் தேவையில்லை.

சஜித்,தமிழரசு கட்சியின் சுமந்திரன் அணி தன்னை நோக்கி தமிழ் வாக்குகளைத் திருப்பும் என்று எதிர்பார்க்கக் கூடும். ஆனால் அது தொடர்பான உத்தியோகபூர்வமான பேச்சுவார்த்தைகளோ இணக்கங்களோ இதுவரையிலும் ஏற்படவில்லை.

அதாவது ஜனாதிபதி தேர்தலுக்கு ஆறு மாதங்களுக்கும் குறையாத காலமே இருக்கும் ஒரு பின்னணியில் தமிழ் மக்கள் மத்தியில் உள்ள பெரிய கட்சி முடிவெடுக்காத ஒரு நிலை.

அதே சமயம் குத்து விளக்குக் கூட்டணியும் அது தொடர்பில் தீர்க்கமான முடிவுகளை எடுக்கவில்லை என்று தெரிகிறது. கடைசியாக வவுனியாவில் நடந்த கூட்டத்தில் தமிழ்ப் பொது வேட்பாளர் தொடர்பில் ஏனைய கட்சிகளோடு உரையாடுவது என்று அவர்கள் முடிவெடுத்திருக்கிறார்கள்.அதாவது அந்தக் கூட்டணியின் முடிவு என்ன என்பது உத்தியோகபூர்வமாகத் தெரிவிக்கப்படவில்லை.

அக்கூட்டுக்குள் காணப்படும் ஈபிஆர்எல்எப்பின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தமிழ் பொது வேட்பாளரை குறித்து அதிகளவு பேசியிருக்கிறார். அறிக்கைகள் விட்டிருக்கிறார் ஊடகச் சந்திப்புக்களையும் நடத்தியிருக்கிறார். இம்முறை ஜனாதிபதித் தேர்தலையொட்டி தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற கோரிக்கையை முதலிலேயே முன் வைத்தவர் அவர்தான். ஆனால் அவர் இணைந்திருக்கும் கூட்டின் முடிவும் அதுவா என்பது உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

குத்துவிளக்கு கூட்டுக்குள் காணப்படும் கட்சிகளில் இரண்டு கட்சிகள் தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில் தளம்புவதாக அவதானிக்கப்பட்டுள்ளது. தமிழ்ப் பொது வேட்பாளர் தொடர்பாக அவர்கள் முடிவெடுப்பதை பெருமளவுக்கு தாமதித்து வருவதாகவும் தெரிகின்றது.தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற விடயத்தில் தமிழரசுக் கட்சி இணையவில்லை என்றால் அது வெற்றி பெறாது என்று இந்த இரண்டு கட்சியை சேர்ந்தவர்களும் தங்களுக்கு நெருக்கமானவர்களோடு கதைத்திருக்கிறார்கள். எனவே குத்து விளக்குக் கூட்டுக்குள்ளும் தமிழ் பொது வேட்பாளர் என்ற தெரிவில் உறுதியான ஒருமித்த முடிவு இல்லை.

இந்த விவாதப் பரப்புக்குள் வராத கட்சி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தான். அது கடந்த 15 ஆண்டுகளில் நடந்த எல்லா ஜனாதிபதி தேர்தல்களின் போதும் தேர்தலை புறக்கணிக்கும் முடிவைத்தான் எடுத்தது. இந்த முறையும் அக்கட்சி அதே முடிவோடு காணப்படுகின்றது. ஆனால் அந்த முடிவை மக்களுடைய விருப்பமாக மாற்ற அவர்கள் முயற்சிக்க மாட்டார்கள் என்று தெரிகிறது. அப்படி என்றால் தேர்தலில் மக்கள் என்ன முடிவெடுப்பார்கள்? மக்களைத் தாமாக முடிவெடுக்குமாறு விடுவதோ அல்லது ஏனைய கட்சிகள் மக்களை வழிநடத்தட்டும் என்று முடிவெடுப்பதோ கட்சி அரசியலில் பொருத்தமான ஒழுக்கம் அல்ல. ஒரு கட்சி தான் எடுத்த முடிவை மக்கள் மயப்படுத்த வேண்டும். அதற்கு மக்கள் ஆதரவைத் திரட்ட வேண்டும். ஆனால் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அதை நோக்கி உழைப்பதாகத் தெரியவில்லை.

எனவே தேர்தல் களத்தில் தமிழ்த் தரப்பு மூன்று விதமான நிலைப்பாடுகளோடு காணப்படுகின்றது. இதில் பகிஸ்கரிப்புக்காக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உழைக்காது என்று பார்த்தால்,நடைமுறையில் இரண்டு விதமான நிலைப்பாடுகள் தான் தமிழ்மக்கள் மத்தியில் செயலுருப்பெறும். ஒன்று ராஜபக்சங்களுக்கு எதிராக வாக்களிப்பது.இரண்டு தமிழ்ப் பொது வேட்பாளருக்கு வாக்களிப்பது.

கடந்த 15 ஆண்டுகளில் நடந்த எல்லா ஜனாதிபதி தேர்தல்களின் போதும் தமிழ் மக்கள் ஒற்றுமையாக நின்ற விடயங்களில் ஒன்று ராஜபக்சங்களுக்கு எதிராக வாக்களித்தமைதான். இந்த விடயத்தில் தமிழ் மக்கள் போரை வழிநடத்திய தளபதியாகிய சரத் பொன்சேகாவுக்கும் வாக்களித்திருக்கிறார்கள். இறுதிக்கட்ட போரில் தற்காலிகமாக பாதுகாப்பு அமைச்சராக இருந்த மைத்திரிபால சிறிசேனாவுக்கும் வாக்களித்திருக்கிறார்கள்.எனவே ராஜபக்சங்களுக்கு எதிராக என்ற தமிழ் மக்களின் நிலைப்பாடு தொடர்ச்சியானது. எனினும்,இம்முறை அந்த நிலைப்பாட்டில் மாற்றம் ஏதும் இருக்குமா ?

மேற்கு நாடுகள்,பன்னாட்டு நாணய நிதியம் போன்றன ரணில் விக்கிரமசிங்கவை முதன்மைப்படுத்துவதாகத் தெரிகிறது.ஆனால் அவர் ராஜபக்சக்களின் பதிலியாகத்தான் தேர்தலில் இறக்கப்படுவாரா என்ற கேள்விக்கு விடை முக்கியம். அப்படி ஒரு நிலைமை வந்தால், மேற்கு நாடுகள் தமிழ்க் கட்சிகளிடம் எப்படிப்பட்ட ஒரு முடிவை எடுக்குமாறு வலியுறுத்தும் ?

சஜித் பிரேமதாச தன் தலைமைத்துவத்தை இனிமேல் தான் நிரூபிக்க வேண்டும். மேலும் வெற்றியை நோக்கிக் கூட்டுகளை உருவாக்க முடியாதவராகவும் அவர் காணப்படுகின்றார். அது மட்டுமல்ல ஓய்வு பெற்ற படைத் தளபதிகள் அவரை நோக்கிச் செல்கிறார்கள்.ராஜபக்சங்களுக்கு எதிராக வாக்களிக்கும் தமிழ் மக்கள் அந்த ராஜபக்சக்களின் உத்தரவைப் போர்க்களத்தில் அமல்படுத்திய தளபதிகள் அதிகமாக இணையும் ஒரு கூட்டுக்கு வாக்களிப்பார்களா?சரத் பொன்சேகாவுக்கும் மைத்திரிபால சிறிசேனலுக்கும் வாக்களித்ததை போலவா இதுவும்?

அல்லது தமிழரசுக் கட்சிக்குள் சிறீதரன் அணி தெளிவான நிலைப்பாட்டை எடுத்து, துணிச்சலாகத் தமிழ்ப் பொது வேட்பாளரை ஆதரித்தால், குத்து விளக்குக் கூட்டணியும் உட்பட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அல்லாத ஏனைய கட்சிகள் ஓர் அணிக்குள் வரக்கூடிய வாய்ப்புகள் உண்டா ?

இது விடயத்தில் சிவில் சமூகங்களின் தலையீடு கட்சிகளை ஒருங்கிணைக்க உதவுமா ?அல்லது கட்சிகள் தனிப்பட்ட ரீதியில் தென்னிலங்கைக் கட்சிகளோடு டீலுக்குப் போகக்கூடுமா ?