Breaking News

தொழிலாளர் தினத்தை மக்கள் அணிதிரளும் நாளாக மாற்றுவோம் : தேசிய மக்கள் சக்தி !

 


மே தினத்தை மக்களின் ஆட்சிக்காக மக்களை அணிதிரட்டுகின்ற நாளாக மாற்றிடுவோம் என தேசிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா (Dilvin Silva) தெரிவித்துள்ளார். 

தேசிய மக்கள் சக்தியின் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். 

இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

"தேசிய மக்கள் சக்தி என்றவகையில் மே தினத்தில் கலந்துகொள்ளல் பற்றி கலந்துரையாடும் நோக்கத்துடன் நாங்கள் இந்த ஊடக சந்திப்பினை நடாத்த தீர்மானித்தோம்.

மே முதலாம் திகதி சர்வதேச தொழிலாளர் தினமாகும்.

உலகம் பூராவிலும் இருக்கின்ற தொழிலாளர்கள் மே தினத்தில் தமது நோக்கங்களை, இலக்குகளை வென்றெடுப்பதற்காகவும் தமது ஒற்றுமையையும் பலத்தையும் காட்டுவதற்காகவும் மே தினத்தைக் கொண்டாடுகிறார்கள்.

இந்நிலையில், இந்த நாட்டை வங்குரோத்து அடையச்செய்வித்த கொடிய ஆட்சியை தோல்வியுறச் செய்வித்து, நாட்டைக் கட்டியெழுப்பக்கூடிய மக்கள் நேயமுள்ள ஆட்சியை உருவாக்குவதே எமது நோக்கமாகும்.

அதற்கான சக்தியை அணிதிரட்டுவதே எமது தற்போதைய நோக்கமாகும்.

ஆனால், பெருந்தொகையான மக்களை கொழும்பிற்கு ஒன்றுதிரட்டுவது சிரமமானதென்பதால் பெருமளவிலான மக்களை தொடர்புபடுத்திக் கொள்வதை நோக்கமாகக்கொண்டு நாங்கள் நான்கு இடங்களில் மே தினத்தை கொண்டாட தீர்மானித்துள்ளோம். 

இதற்கமைய, யாழ்ப்பாணம், அநுராதபுரம், கொழும்பு, மாத்தறை ஆகிய நான்கு பிரதான நகரங்களில் நான்கு மே தினக் கொண்டாட்டங்கள் நடைபெறவுள்ளன. 

யாழ்ப்பாணத்தில் மே தினக் கூட்டத்தை முதலாந் திகதி காலைப்பொழுதிலும் ஏனைய மே தினக் கூட்டங்களை மாலைப்பொழுதிலும் நடாத்தக் கருதியுள்ளோம்.  

மக்களின் உரிமைகளைப் பறிக்கின்ற இந்த ஆட்சியைக் கவிழ்த்து மக்களாட்சியை உருவாக்குவதற்காக மக்களை அணிதிரட்டுகின்ற மே தினமாக இந்த மே தினத்தை மாற்றிக்கொள்வோமென உழைக்கும் மக்களை முதன்மையாகக்கொண்ட ஒட்டுமொத்த மக்களிடம் கேட்டுக்கொள்கிறோம்” என டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.