Breaking News

முள்ளிவாய்க்கால் இனப்படு கொலையின் 15 ஆம் ஆண்டு நினைவு!

 


முள்ளிவாய்க்கால் மண்ணில் இன்று (18) யுத்தம் நிறைவடைந்து 15 ஆண்டுகள் பூர்த்தியை முன்னிட்டு நினைவேந்தல் இடம்பெற்றது.

இந்த வகையிலே முள்ளிவாய்க்காலில் இடம் பெற்ற 15 ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் நினைவுமுற்றதில் 10.30 மணிக்கு பொதுச்சுடர் ஏற்றப்பட்டு உணர்வு பூர்வமாக இடம்பெற்றது.

முள்ளிவாய்க்கால் மண்ணிலே முள்ளிவாய்க்கால் நிலைவேந்தல் பொதுக் கட்டமைப்பினால் நினைவு பேருரை ஆற்றப்பட்டு அதனைத் தொடர்ந்து மணி ஒலி எழுப்பப்பட்டு அகவணக்கம் இடம்பெற்று அதனைத் தொடர்ந்து முள்ளிவாய்க்கால் யுத்தத்திலே தன்னுடைய கணவனை இழந்த முள்ளியவளையை சேர்ந்த கோவிந்தராசன் புனிதவதி பொதுச்சுடரினை ஏற்றி வைக்க ஏனைய உறவுகளும் தங்களுடைய உயிரிழந்த உறவுகளை நினைத்து சுடர் ஏற்றி அகவணக்கம் செலுத்தினர்.

அதனைத் தொடர்ந்து முள்ளிவாய்க்கால் நினைவு தூபிக்கு மத தலைவர்கள் அரசியல் பிரமுகர்கள் பொதுமக்கள் சமூக செயற்பாட்டாளர்கள் என பல்வேறு தரப்பினரும் தொடர்ச்சியாக மலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர் .

விசேடமாக 15 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வான இன்றைய நாளில் முள்ளிவாய்க்கால் நிறைவேந்தல் முற்றத்திற்கு சர்வதேச மன்னிப்புச்சபையின் செயலாளர் நாயகம் Agnès Callamard அவர்கள் வருகை தந்து அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டதோடு முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபிக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தியிருந்தார்.