கறுப்பு ஜூலையும் வெலிக்கடை சிறை படுகொலையும்!
கறுப்பு ஜூலையின் கோர நிகழ்வுகள் தமிழரின் வரலாறுகளிலும், மனங்களிலும் ஒருபோதும் நீங்காத வடுக்களை பதித்துள்ளன. தமிழ் மக்கள் மேல் கட்டவிழ்த்த இனப்படுகொலை நீதி மறுக்கப்பட்டு, சர்வதேசத்தால் மறக்கப்பட்டாலும் அதிலிருந்து கற்றுக்கொண்ட பாடங்களைப் போராடும் இனங்கள் தெளிவாகக் கற்று அறிய வேண்டும்.
1983, ஜூலை 24, 25 காலப் பகுதியில் யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் சிங்கள படைத் துறையால் 100 பேர் வரையான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வுடன் ஆரம்பமாகி, வெலிக்கடை சிறைப்படுகொலை, பின்னர் தென் னிலங்கை இனப்படுகொலையாகத் தொடர்ந்து நிகழ்த்தப்பட்டன.
1983 கருப்பு ஜூலையில் இரண்டு கிழமைகளுக்கு மேலாகத் திட்டமிட்ட முறையில் சிங்கள இனவாதிகள் இலங்கைத் தமிழர்களைக் கொடுமைப்படுத்தியும், சொத்துகளை அழித்தும் கைப்பற்றியும், 3000 பேர்வரை படுகொலை செய்தமை மானுட வரலாற்றில் துன்பவியல் நிகழ்வாகும். இந்த நிகழ்வின் ஒருங்கிணைப்பு முறை ஒரு திட்டமிட்ட படுகொலை செயற்பாடாகவே நம்பப்படுகிறது. கறுப்பு ஜூலை நிகழ்வுகளே இலங்கை இனப்பிரச்சினை ஆயுதப் போராட்டமாக மாறக் காரணமானதாகப் பார்க்கப்படுகின்றது.
திட்டமிடப்பட்ட இனப்படுகொலை
கறுப்பு ஜூலை “இனக்கலவரம்” என்ற போர்வைக்குள் நடைபெற்றதே தமிழர் மீதான “இனப்படுகொலை” நிகழ்வாகும். ஆனால் கறுப்பு ஜூலை படுகொலைகள் ஏற்கனவே திட்டமிடப்பட்டு ஒருங்கிணைக்கப்பட்ட முறையும் அளவும் அதற்கு அரச தரப்பில் இருந்த ஆதரவும் அதனை வெறும் இன வன்முறையாகக் கருதமுடியாது.
இந்த நிகழ்வின் ஒருங்கிணைப்பு முறை ஒரு திட்டமிட்ட கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலை செயற்பாடாகவே ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது மூன்று தசாப்த காலமாக நடைபெற்ற தமிழ் மக்களின் அகிம்சை போராட்டம் தோற்றுப் போக தமிழ் இளைஞர்கள் மத்தியில் புரட்சிகர ஆயுதப் போராட்டமாக மாறுவதற்கு தேவையான வலிமையை கறுப்பு ஜூலை வலிகளில் இருந்தே ஈழத்து தமிழ் இளைஞர்களை ஆயுதம் ஏந்தி போராட தூ ண்டியது என்றும் கூறலாம்.
சிங்களப் பேரினவாத தரப்படுத்தல்
நில உரிமை ரீதியாகவும், மொழி ரீதியாகவும் நயவஞ்சக மாகவும் நேரடியாகவும் நசுக்கப்பட்டுக் கொண்டிருந்தது. அவற்றுக்கெதிராக அவ்வப்போது சில அரசியல் தலைவர்களது குரல் ஒலிப்பதும், சில அற்பசொற்ப சலுகைகளுக்காக அடங்கிப் போவதும் நாம் கண்ட வரலாறாகும். தமிழினத்தை தன்னிலைபற்றிச் சிந்தித்து, தனக்கென ஒரு நாடு தேவை என்ற தீர்வைக் கொடுத்தது என்னவோ, சிறீமாவோ பண்டார நாயக்கா அம்மையாரது ஆட்சிக் காலத்தில் அமுல்படுத்தப்பட்ட “தரப்படுத்தல்” என்ற தமிழ் மாணவரது கல்வியை நசுக்கும் செயல்தான் என்பதை எவராலுமே மறுக்கமுடியாது.
தரப்படுத்தல் சிவகுமாரன் போன்ற மாண வர்களை அகிம்சை வழியிலிருந்து விலகி ஆயு தங்கள் பக்கமாகச் சிந்திக்கத் தூண்டியது. அரச பயங்கரவாதச் சுரண்டல்களுக்குப் பரிகாரம் ஆயுதப் போராட்டமே என்ற எண்ணம் பல இளைஞருள்ளும் அக்காலத்தில் எழுந்தது. அரச படை இயந்திரங்களை எதிர்த்துப் போரிட முடியுமா என்ற கேள்வியே குறிப்பாக தமிழின அரசியல் மேடைப் பேச்சுத் தலைவர்களால் நினைத்துப் பாராத ஒன்றாக இருந்தது.
கறுப்பு ஜூலையில் வெலிக்கடை சிறை படுகொலை
ஜூலை 1983 இல் இலங்கையில் இலங்கைத் தமிழர்களுக்கெதிராக இடம்பெற்ற கறுப்பு ஜூலை வன்முறை நிகழ்வுகளின் போது இடம்பெற்ற உச்சக்கட்ட நிகழ்வே வெலிக்கடை சிறைப் படுகொலையாகும். இதன் போது மொத்தம் 53 தமிழ் அரசியல் கைதிகள் கொழும்பின் அதிஉயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் சக சிங்களக் கைதிகளால் குத்தியும் வெட்டியும் படுகொலை செய்யப்பட்ட னர். இப்படுகொலை நிகழ்வில் எவரும் இன்று வரையில் குற்றஞ்சாட்டப்பட்டுத் தண்டிக்கப்பட வில்லை.
வெலிக்கடை சிறைப் படுகொலை இரண்டாம் தடவையாக ஜூலை 28 ஆம் திகதி மீண்டும் இடம்பெற்றது. இதில் 18 பேர் வெட்டிக் கொல்லப் பட்டனர். இந்தப் படுகொலை நிகழ்வில் தப்பிப் பிழைத்தவர்களின் வாக்குமூலத்தின்படி சிறைச்சாலை அதிகாரிகளே அறைக் கதவுகளின் திறப்புகளை சிங்களக் கைதிகளுக்கு கொடுத்த தாகத் தெரிவித்தனர். ஆனால் சிறை அதிகாரிகளின் கூற்றுப்படி, சிங்களக் கைதிகள் தம்மிடம் இருந்து திறப்புகளைக் களவெடுத்ததாகத் தெரிவித்தனர்.
இந்தப் படுகொலை நிகழ்வில் தப்பிப் பிழைத்தவர்களின் வாக்குமூலத்தின்படி சிங்கள இனவெறியர் அங்கு அமைக்கப்பட்டிருந்த புத்த விகாரையின் புத்தர் சிலையின் முன் கொல்லப்பட்ட குட்டிமணியின் உடலை நிர்வாணமாக்கிப் போட்டார்கள். இவ்வாறாக ஜெகனின் கண்களும் தோண்டப்பட்டு ஆணுறுப்பு வெட்டப்பட்டு அவரின் உடலும் நிர்வாணமாகப் புத்தர் சிலையின் முன்னால் வீசப்பட்டது. காட்டுமிராண்டித் தனமான கூச்சல்களுக்கு மத்தியில் ஏனைய தமிழ் இளைஞர்களும் சித்திர வதை செய்யப்பட்டுக் கொல்லப்பட்டு, நிர் வாணமாக்கப்பட்டு புத்தரின் காலடியில் எறியப்பட்டனர்.
சிங்கள இன வெறியர்கள், தமிழிளைஞர்களின் தலைகள், கண்கள், கால்கள், கைகள், உடல்கள், செங்குருதி யாவற்றையும் புத்தருக்கு காணிக்கையாக அளித்தனர். இப்படுகொலைகள் நடைபெற்ற தினத்துக்கு முதல்நாள் புத்தர் களின் புனிதநாளான போயா தினமாகும். போயா தினத்தில் உபவாசம் இருந்து “சில்’’ அனுஷ்டித்தவர்கள் மறுநாள் இப்படுகொலையில் சம் பந்தப்பட்டிருந்தனர் என இந்தப்படுகொலை நிகழ்வில் தப்பிப் பிழைத்தவர்களின் வாக்கு மூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்களவர்கள் மற்றும் தமிழர்களுக்கிடையில் இனரீதியாக ஏற்பட்டிருந்த பிளவை சீர்செய்வதற்கு உரிய ஆக்கபூர்வமான நடவடிக்கைககளும் எந்த ஒரு அரசுகளால் மேற்கொள்ளப்படவில்லை. 42 ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற இந்த இனப் படுகொலை ஓர் இனத்துக்கு எதிரான அழிப்பு நடவடிக்கையாகவே இலங்கைத் தமிழ் மக்களால் கருதப்படுகிறது.