Breaking News

கடலில் மூழ்கிய சட்டவிரோத குடியேற்றவாசிகள் 34 பேரில் நிலை தெரியவில்லை

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பொருளாதாரத்தில்
நல்ல வலுவான நிலையில் மலேசியா உள்ளதால், இந்தோனேஷியாவில் இருந்து ஏராளமானோர் சட்டவிரோதமாக இங்கு வந்து, எண்ணெய் பனை தோட்டங்களில் வேலை வாய்ப்பு பெறுகின்றனர். இப்படி சட்டவிரோதமாக வருவோர் மீது அவ்வப்போது மலேசிய அரசு நடவடிக்கை எடுத்தாலும் கூட, ஏறத்தாழ 20 லட்சம் பேர் இங்கு சட்டவிரோதமாக குடியேறி வாழ்கிறார்கள்.
இப்படி வந்தவர்களில் ஒரு பிரிவினர் 97 பேர் படகு 97 பேருடன் புறப்பட்ட படகுஒன்றில் ஏறி கேரே தீவு பகுதியிலிருந்து ஏறி, இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவுக்கு புறப்பட்டனர்.
நடுக்கடலில் கவிழ்ந்தது
ஆனால் படகு பாரம் தாங்காமல் நடுக்கடலில் நேற்று முன்தினம் உள்ளூர் நேரப்படி அதிகாலை 12.30 மணிக்கு (இந்திய நேரப்படி காலை 6 மணி) கோலாலம்பூருக்கு தென்மேற்கில் 45 கி.மீ. தொலைவில், மலாக்கா ஜலசந்தி அருகே கவிழ்ந்தது. படகில் இருந்தவர்கள் அப்போது உயிருக்குப் பயந்து மரண ஓலமிட்டனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்ததும் மலேசிய மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
34 பேர் மாயம்
ஒரு ஹெலிகாப்டர், ஒரு பெரிய கப்பல், 4 படகுகள் மீட்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. விபத்தில் சிக்கியவர்களில் 63 பேரை மீட்புப்படையினர் பத்திரமாக மீட்டு விட்டனர். மீதி 34 பேர் காணாமல் போய் விட்டனர். அவர்களது கதி என்ன என்று தெரியவில்லை.
முதலில் 66 பேர் காணாமல் போய்விட்டனர் என தகவல்கள் வெளியாகின. ஆனால் 63 பேர் மீட்கப்பட்டதை உறுதி செய்த போலீஸ் அதிகாரிகள், 34 பேரின் கதிதான் தெரியவில்லை என்று கூறினர். சட்டப்பூர்வ ஆவணங்கள் ஏதுமில்லாததால், அவர்கள் கடலில் இருந்து நீந்தி கரைக்கு சென்று, எங்காவது மறைந்திருக்கக்கூடும் என நம்பப்படுகிறது.
சட்டவிரோத படகு
விபத்துக்குள்ளான படகு, ஆட்களை ஏற்றிச்செல்வதற்கு தகுதியற்றது, சட்டவிரோதமானது என தகவல்கள் கூறுகின்றன.
மலேசிய தலைநகர் கோலாலம்பூரிலிருந்து சீனத் தலைநகர் பீஜிங் நோக்கி, 239 பேருடன் கடந்த மார்ச் மாதம் 7-ந் தேதி நள்ளிரவு புறப்பட்டுச் சென்ற மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் எம்.எச். 370 என்ன ஆனது என்று மூன்று மாதங்கள் கடந்தும் உறுதியாகத் தெரியாத நிலையில், இப்போது மலேசியாவில் இந்தப் படகு விபத்து நடந்திருப்பது அங்கு மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.