ஐ.நா விசாரணையில் கோரப்படால் சாட்சி வழங்குவேன்-முதலமைச்சர் விக்கி - THAMILKINGDOM ஐ.நா விசாரணையில் கோரப்படால் சாட்சி வழங்குவேன்-முதலமைச்சர் விக்கி - THAMILKINGDOM
 • Latest News

  ஐ.நா விசாரணையில் கோரப்படால் சாட்சி வழங்குவேன்-முதலமைச்சர் விக்கி


  ஐநா சபையின் மனித உரிமைகள்
  ஆணைக்குழுவின் அமர்வின் தீர்மானத்திற்கு அமைய நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவினால் சாட்சி கோரப்பட்டால் தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பாக சரித்திர பின்னணியை விளக்கும் வகையில் சாட்சியம் வழங்குவேன் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

  சமகால அரசியல் மற்றும் வடமாகாண சபையின் நிர்வாகம் தொடர்பாக கேசரி வார இதழுக்கு வழங்கிய செவ்வியின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

  செவ்வியின் விபரம்

  கேள்வி - இந்திய அரசின் அனுசரணையுடன் இலங்கையில் உருவாக்கப்பட்ட 13வது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் உருவான மாகாண சபை அலகு ஒன்றின் முதலமைச்சர் என்ற வகையில் வட மாகாண சபை உருவாகி 8 மாதங்கள் கடந்துள்ள நிலையில் இந்தியாவிடம் எதனை எதிர்பார்க்கின்றீர்கள்? 

  பதில் - இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அரசின் கருத்துப்படி 13வது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதில் அவர்கள் அக்கறையாகவுள்ளார்கள். இதில் தான் வடக்கு கிழக்கு மாகாணங்களின் இணைப்பும் உள்ளது. 13வது திருத்தச் சட்டம் தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வாக அமையாது.

  அத்துடன் எம்மைப் பொறுத்தமட்டில் 13ஐ முழுமையாக நடைமுறைப்படுத்தினாலும் அதிகாரங்கள் போதாமல் உள்ளபோது அரசாங்கத்தினால் 13ல் உள்ளவற்றில் கூட தட்டிக் கழிக்கப்படுகின்றது என்பதே உண்மை. இதற்குத் தீர்வாக 13ற்கு அப்பால் ஓர் அதிகாரப் பகிர்வுடன் கூடிய தீர்வையே வழங்கவேண்டும்.

  கேள்வி - இலங்கையின் இனப்பிரச்சினை தொடர்பில் சர்வதேச நாடுகளின் நிலைப்பாடு எவ்வாறுள்ளது. அத்துடன் நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசின் நிலைப்பாடுகள் எவ்வாறுள்ளன? 

  பதில் - இதுவரையில் என்னைச் சந்தித்த சில தலைவர்களின் கருத்தின் அடிப்படையில் கூறுவதாயின் மேற்குலக நாடுகள் ஜெனிவா தீர்மானத்தை அடிப்படையாகக் கொண்டே நகர்கின்றன. எமக்கான நிரந்தரத் தீர்வைப்பற்றி உடன் ஆர்வம் காட்டுவதாகத் தெரியவில்லை.

  இதேவேளை தென்னாபிரிக்காவின் பதில் ஜனாதிபதி ரமபோசா அண்மையில் என்னைச் சந்தித்த போது அவரும் எமது பிரச்சினை தொடர்பில் நன்கு தெரிந்து வைத்துள்ளார். அதாவது தமிழ் மக்கள் எவ்வாறு நசுக்கி ஒடுக்கப்படுகிறார்கள், இம்மக்களுக்கு உலகால் ஏற்றுக் கொள்ளப்பட்ட அதிகாரங்கள் கூட வழங்கவில்லையென்பதனையும் அறிந்துள்ளார் என்பதை என்னுடன் உரையாடியதன் மூலம் அறிந்துகொண்டேன். 

  இதேவேளை எமது பிரச்சினையை இந்தியாவினால் மட்டும் தான் தீர்க்க முடியும். ஆனால் இந்தியாவிற்குத் தெரியாமல் தீர்க்க முடியாது.

  கேள்வி - ஐநா சபையின் தீர்மானத்திற்கமைய இடம்பெறவுள்ள ஐநா சர்வதேச விசாரணை ஒன்று இலங்கையிலோ அல்லது வேறு நாடுகளிலோ இடம்பெறும் போது அதில் ஒரு சந்தர்ப்பம் வடமாகாண முதலமைச்சர் என்ற வகையில் உங்களுக்கும் கிடைத்தால் நீங்களும் சாட்சியமளிப்பீர்களா? 

  பதில் - கடந்த போர்க்கால சம்பவங்கள் தொடர்பில் நான் கண்கண்ட சாட்சி அல்ல. இருப்பினும் இது தொடர்பில் எனது சாட்சியம் கோரப்பட்டால் நிச்சயமாக தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெற்ற நடவடிக்கைகள் பற்றிய சரித்திர பின்னணியை விளக்கும் வகையில் சாட்சியம் வழங்குவேன்

  கேள்வி - வடமாகாண சபைக்கு சிவில் அதிகாரி ஒருவரை ஆளுநராக நியமிக்க வேண்டும் என்று நீங்கள் பல தடவைகளில் வலியுறுத்திய போதும் மீண்டும் இராணுவ தளபதியாகவிருந்த அதே ஆளுநரை நியமித்துள்ளமை தங்களின் சபை நிர்வாகத்திற்கு பாதிப்பு எனக் கருதுகிறீர்களா? 

  பதில் - நிச்சயமாக பாதிப்பு ஏற்படும். காரணம் என்னவெனில், வடமாகாண மக்கள் போரில் பாதிப்புறும் போது மூன்று அல்லது நான்கு ஆண்டுகள் இராணுவத் தளபதி நிலையில் இருந்தவரே தற்போதைய ஆளுநராவார்.

  இவர் இராணுவத் தளபதியாக இருந்த அக்காலப்பகுதியில் பலர் கொல்லப்பட்டனர். பல அசம்பாவிதங்கள் இடம்பெற்றன. இந்த வகையில் இதற்கு இவரும் பொறுப்புக் கூறு வேண்டும். இவை தொடர்பில் உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்படவில்லை.

  இந்த இடத்தில் ஆளுநருடன் தனிப்பட்ட ரீதியில் போரின் போது தளபதியாக இருந்தவரை ஓய்வுபெற்ற பின் அதே மாகாணத்திற்கு ஆளுநராக நியமித்ததே தவறு என்கின்றோம். இந்தத் தவறைத் தொடர்ந்தும் செய்ய வேண்டாம் என்று கூறிய பின்பும் நியமித்தது வடக்கு மாகாண மக்களின் விருப்பத்திற்கு மாறான நியமனம் என்பதால் மிகப்பெரும் பிழையாகும்.

  இது எவ்வாறான பாதிப்பை உண்டாக்குமெனில், வடக்கு மாகாண சபை உருவாக்கத்தின் பின்பு இங்கு இரட்டை நிர்வாகம் இடம்பெறுகின்றது. எனது பல நண்பர்கள் இந்த நாட்டில் ஆளுநர்களாக இருந்துள்ளனர். குறிப்பாக ஆளுநர்களான விக்னராஜா, சர்வானந்தா, அலவி மௌலானா போன்றோர் ஆளுநர்கள் முதலமைச்சர் பணியில் குறுக்கீடு செய்வதில்லை.

  தமது பணியை மட்டுமே மேற்கொள்கின்றனர். ஆனால் வடக்கு, கிழக்கில் மட்டுமே சகலதிலும் ஆளுநர் தலையிடுவதோடு பிடித்தவர்களுக்கு பணி வழங்குவது பிடிக்காதவர்களை ஒதுக்கும் நிலை என்பன காணப்படுகின்றது. உதாரணமாக அண்மையில் பிரதேச சபைகளிற்கு ஏற்பட்ட செயலாளர் வெற்றிடங்களுக்கு ஆட்களை நிரப்பும் போது ஐவரில் ஒருவர் நேர்முகத் தேர்வில் தோற்றவில்லை.

  அவ்வாறான ஒருவருக்கு பிரதேச சபையின் செயலாளர் பதவி வழங்கப்பட்டதை சட்டரீதியாக நாம் சுட்டிக்காட்டியதையடுத்து அது மீள்பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு இரண்டாவது பதவி நீடிப்பிற்கு முன்பு ஆளுநரை மாற்றுவார்கள் என்ற நம்பிக்கையில் சுதந்திரமாகப் பணியாற்றியவர்கள் தற்போது மீண்டும் அஞ்சுகின்ற நிலை ஏற்பட்டுள்ளது.

  கேள்வி - வடமாகாண பிரதம செயலாளருக்கு நிங்கள் அனுப்பிய சுற்றுநிருபம் தொடர்பில் உச்ச நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கின் தற்போதைய நிலை என்ன? அதனைக் கொண்டு செல்வதில் தங்களின் முடிவு என்னவாக இருக்கும்? 

  பதில் - பிரதம செயலாளருக்கு அனுப்பிய சுற்றுநிருபத்தில் நான் எதனையும் மீளப்பெறவில்லை. ஆனால் நீதிமன்றத் தீர்ப்பு வரும் வரையில் எதனையும் நடைமுறைப்படுத்த வேண்டாம் என நீதிமன்றின் தீர்மானத்திற்கமைய தற்போது அதனை நடைமுறைப்படுத்தவில்லை.

  என்னைப் பொறுத்தவரையில் அதனை மீள வாங்கவேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பளித்தால் மட்டுமே நான் அதை வாங்குவேன் அல்லது பிரதம செயலாளர் அதனை நடைமுறைப்படுத்துவேன் என அறிக்கை கொடுக்க வேண்டும். இந்த வழக்கின் அடுத்த தவணை நாளை திங்கட்கிழமை இடம்பெறவுள்ளது.

  கேள்வி - வடமாகாண முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கான அலுவலகங்கள் வாசஸ்தலங்கள் என்பன பல லட்சம் ரூபா செலவில் வாடகைக்கு அமர்த்தப்பட்டுள்ளதாக சில விமர்சனங்கள் எழுந்துள்ளன. இது தொடர்பில் தெளிவுபடுத்த முடியுமா? 

  பதில் - குறித்த கட்டிடங்கள் எவ்வளவு வாடகைக்கு அமர்த்தப்பட்டுள்ளன என மாகாணசபை அமர்வில் உரையாற்றியுள்ளேன். அதேபோல் இவற்றின் வாடகை அனுமதி தொடர்பில் கூறுவதானால் எனது அலுவலகம் உட்பட இந்த அமைச்சர்களின் அலுவலகங்கள் எம்மால் வாடகைக்கு பெறப்பட்டவை அல்ல.

  பிரதம செயலாளரின் அனுமதியுடனும் அந்தந்த அமைச்சின் ஊடாக வாடகைக்குப் பெற்றுக் கையளிக்கப்பட்டது. எனது வீடும் லட்சக்கணக்கான வாடகைக்குப் பெறப்படவில்லை. முதலமைச்சரின் இல்லத்திற்கு மாதம் ஐம்பதினாயிரம் வாடகை செலுத்தப்படுகின்றது. இந்த வீட்டை நான் வாடகைக்குப் பெறமுன்னர் வீட்டின் உரிமையாளரினால் நிறுவனம் ஒன்றிற்கு 80 ஆயிரம் ரூபாவுக்கு வாடகைக்கு வழங்கப்பட்டிருந்தது. அந்த வீட்டினையே தற்போது நான் 50 ஆயிரம் ரூபாவிற்கு பெற்றுள்ளேன்.

  கேள்வி - வடமாகாண சபைக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் இருந்து மக்களுக்குத் தேவையான, சரியான போதிய அபிவிருத்தி வேலைகள் இடம்பெறவில்லையென வடமாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்து வருகின்றாரே? 

  பதில் - மாகாண சபையை நடாத்தும் அலுவலர்களில் முக்கிய அலுவலர் பிரதம செயலாளர். அதாவது முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் எடுக்கும் தீர்மானத்தை நடாத்த வேண்டியவர் ஆவார். ஆனால் இன்று வடமாகாண சபையில் நடப்பது அதுவல்ல.

  ஒருசில விடயங்கள் தவிர பல முக்கிய விடயங்கள் ஆளுநருடன் இணைந்து நடைமுறைப்படுத்தப்படுகின்றன. இதேபோல் வடமாகாண சபைக்கு ஐயாயிரம் மில்லியன் ரூபா தந்ததாக எதிர்க்கட்சித் தலைவர் உட்பட்டோர் கூறுகின்றனர்.

  இதில் அரச ஒதுக்கீட்டில் 1350 மில்லியன் ரூபாவும், வெளிநாட்டுப் பங்களிப்பு மூலம் 520 மில்லியன் ரூபாவும் பகிர்ந்தளிக்கப்பட்டது. ஏனைய 3500 மில்லியன் ரூபா மத்திய அரசின் கட்டுப்பாட்டில் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. இந்நிதி தொடர்பான எந்தவொரு அதிகாரமும் எமக்குத் தரப்படவில்லை.

  இதில் குறையேதும் இருப்பின் பிரதம செயலாளரிடம் தான் கேட்க வேண்டும். இங்கு வடமாகாண சபை எமது கட்டுப்பாட்டில் இருந்தாலும் இச்சபையைப் பொறுத்தமட்டில் இரண்டு நிர்வாகம் இடம்பெறுகின்றது. ஒரு நிர்வாகம் ஆளுநர், பிரதம செயலாளர் ஏனைய அலுவலர்கள் என்ற ரீதியிலும் மற்றையது வடமாகாண உறுப்பினர்கள்,

  பிரதம செயலாளர், ஏனைய அதிகாரிகள் உள்ளிட்ட நிர்வாகம் என இரண்டு உள்ளன. இதுதான் எமக்குத் தொடர்ந்தும் பிரச்சினையாகவுள்ளது. ஆளுநர் சம்பந்தமான நிர்வாகம் எமது கட்டுப்பாட்டில் இல்லாதமையே மிகப்பெரும் பிரச்சினையாகும் என்றார்.
  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: ஐ.நா விசாரணையில் கோரப்படால் சாட்சி வழங்குவேன்-முதலமைச்சர் விக்கி Rating: 5 Reviewed By: Bagalavan
  Scroll to Top