Breaking News

மைத்திரியுடன் இரகசிய ஒப்பந்தம் இல்லை- சம்பந்தன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் எதிரணியின் பொது வேட்பாளருக்குமிடையில் இரகசிய ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டுள்ளது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ உள்ளிட்ட ஆளுந் தரப்பினர் தெரிவித்துவரும் நிலையில்,பொது எதிரணியுடன் எந்தவித ஒப்பந்தத்தையும் செய்துகொள்ளவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எம்.பி. தெரிவித்தார்.


மூவின மக்களும் ஏற்கக்கூடிய தீர்வே தேவை என்றும் அவர் வலியுறுத்தினார். இரகசியமாகவோ, பின்கதவு வழியாகச் சென்று இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாதென்றும், அவ்வாறானதொரு தீர்வுக்கு கூட்டமைப்பு ஒருபோதும் தயாரில்லை என்றும் தெரிவித்த அவர், இனப்பிரச்சினைத் தீர்வு விடயத்தில் இடம்பெறும் பேச்சுகளும், பெறப்போகும் தீர்வு வெளிப்படையானவையாக இருக்கவேண்டும். நாட்டு மக்கள் அனைரும் அதைத் தெரிந்துகொள்ள வேண்டும் ஏற்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு யாருக்கு என்பதை உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் விசேட ஊடகவியலாளர் சந்திப்பு கொழும்பு ஜானகி ஹோட்டலில் இடம்பெற்றது. இதன்போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு சம்பந்தன் எம்.பி. பதிலளித்தார்.

சம்பந்தன் எம்.பியிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் அவரது பதில்களும் வருமாறு:

கேள்வி: இரு தரப்பு தேர்தல் விஞ்ஞாபனத்தையும் நீங்கள் தீவரமாக ஆய்ந்ததாக கூறினீர்கள். மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் 13 பற்றி குறிப்பிடப்படவில்லை. இது குறித்து உங்களது கருத்து என்ன?

பதில்: அதன் உள்ளடக்கம் குறித்து நாம் பார்த்தோம். தேர்தல் விஞ்ஞாபனத்தில் இது விடயத்தை எதிர்பார்ப்பது சாத்தியமில்லை. கடந்த 10 வருடமாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவை நாம் அவதானித்து வருகின்றோம். இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாணும் விடயத்தில் அவரது அரசு தோல்வியடைந்துள்ளது. அதனால் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு நாம் ஒரு வாய்ப்பை வழங்கவுள்ளோம்.

கேள்வி: வடக்கிலிருந்து இராணுவம் வெளியேற்றப்படவேண்டும். காணி, பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படவேண்டும். 13 ஆவது திருத்தச் சட்டத்துக்கு அப்பால்சென்று அரசியல் தீர்வுகாண வேண்டும் என்ற கூட்டமைப்பின் நிலைப்பாடு தொடர்பில் பொது எதிரணிக்கும் உங்களுக்கும் இடையில் இணக்கப்பாடுகள் ஏற்பட்டுள்ளனவா?

பதில்: அரசியல் தீர்வைப் பொறுத்தவரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு உறுதியாக இருக்கிறது. பிரிக்கப்படாத ஒருமித்த நாட்டுக்குள், ஒரு நியாயமான நிரந்தரமான, நடைமுறைக்குச் சாத்தியமான நிலைத்து நிற்கக்கூடிய அரசியல் தீர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என்பது எமது உறுதியான நிலைப்பாடு. அதில் எவ்வித மாற்றமும் ஏற்படுவதற்கு இடமில்லை. இந்த விடயத்தை வாய்மூலமாகவும், எழுத்துமூலமாகவும் தற்போதைய அரசிடம் நாம் சமர்ப்பித்துள்ளோம். இதை அடைவதற்கு நாங்கள் உழைப்போம். ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்த பின்னர் இந்த நிலைமை தொடந்து பரிசீலிக்கப்பட வேண்டும். தேர்தல் முடிவடைந்த பின்னர் எமது முயற்சி தொடரும். எமது மக்களை நாங்கள் அமைதிகாத்து, நாங்கள் அவர்களுக்கு கூறியிருக்கின்ற கருத்தை மதித்து, மைத்திரிபால சிறிசேனவை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என அன்பாகக் கேட்டுக்கொள்கின்றோம். அவ்விதமான ஒரு முடிவின் மூலமாக பாரிய மாற்றம் ஏற்பட இடமிருக்கும் என்பதும், நாட்டுக்கு எவ்விதமான பாதகம் ஏற்படாமல் அதே சமயம் இந்த நாட்டில் வாழ்கின்ற சிறுபான்மை மக்கள் கெளரவமாக சுயமரியாமையுடன் சகல உரிமைகளையும் பெற்று வாழ்வதற்கு வழி பிறக்கும் என்ற நம்பிக்கை எமக்குண்டு. அதனால்தான் இந்தக் கோரிக்கையை முன்வைக்கின்றோம்.

கேள்வி: இணக்கப்பாடுகள் எதுவும் ஏற்பவில்லையா?

பதில்: நாங்கள் இது விடயம் சம்பந்தமாக எல்லோருடனும் பேசியிருக்கின்றோம். ஜனாதிபதியுடனும், ஏனைய அரசியல் கட்சிகளுடனும் பேசியிருக்கின்றோம். அது விடயம் தொடர்பாக நாம் தொடர்ந்தும் அவர்களுடன் பேசுவோம். அதைப்பற்றி தற்போது அதிகம் பேசவேண்டிய தேவை இருப்பதாக எமக்கு தெரியவில்லை.

கேள்வி: கிழக்கு மாகாணசபையில் ஆளும் கட்சிக்கு 10 ஆசனங்களும், எதிர்க்கட்சிக்கு 26 ஆசனங்களும் இருக்கின்றன. இந்நிலையில், கிழக்கில் ஆட்சியமைக்க ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் பேச்சு நடத்தியுள்ளீர்களா?

பதில்: நாங்கள் கிழக்கு மாகாணசபைத் தேர்தல் நடந்த காலத்திலேயே எம்முடன் இணைந்து ஆட்சியமைக்குமாறு முஸ்லிம் காங்கிரஸுக்கு அழைப்பு விடுத்தோம். அந்த அழைப்பை அவர்கள் அப்போது ஏற்றுக்கொள்ளவில்லை. தேர்தல் முடிந்த பின்னர் அவ்வாறானதொரு வாய்ப்பு இருந்தது. அப்பொழுதும் அவர்கள் அரசுடன் இணைந்து ஆட்சியமைத்தனர். இதுவிடயம் சம்பந்தமாக தற்போது எவ்விதமான பதிலையும் கூறமுடியாது. ஜனாதிபதித் தேர்தல் முடிந்த பின்னர் இவ்விதமான விடயங்கள் பரிசீலனைக்கு எடுக்கப்படலாம்.

கேள்வி: மு.காவின் கரையோர மாவட்ட கோரிக்கையை நீங்கள் ஏற்றுக்கொள்கின்றீர்களா?

பதில்: சிறுபான்மை மக்களது கோரிக்கைகள் நியாயமான முறையில் பரிசீலிக்கப்படவேண்டும். அவதானிக்கப்பட வேண்டும். அந்தக் கோரிக்கைகளுக்கு மதிப்பளிக்கப்பட வேண்டும் என்பது எமது கருத்து. ஆனால், தற்பொழுது நாங்கள் ஜனாதிபதித் தேர்தலில் எமது கவனத்தைச் செலுத்துகின்றோம். இது விடயம் தொடர்பில் அனைவருடனும் பேசி எல்லா மக்களுக்கும் நன்மை பெறக்கூடிய தீர்வை எடுப்போம்.

கேள்வி: ஆட்சிமாற்றத்தின் பின்னர் ஜாதிக ஹெல உறுமய போன்ற இனவாதக் கட்சிகள் இருக்கின்ற கூட்டணியில் உங்களுக்கு தீர்வைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று நம்புகிறீர்களா?

பதில்: நாங்கள் எவரையும் உதாசீனம் செய்ய மாட்டோம். எவரையும் நாங்கள் உதாசீனம் செய்யத் தயாராயில்லை. நீங்கள் கூறிய கட்சி அரசில் இருந்த ஒரு கூட்டுக்கட்சி. தற்போது பிரிந்து ஒரு வழியில் செல்கின்றனர் அதனால் நாம் எவரையும் நம்பவுமில்லை. நம்பாமலுமில்லை. அவரை நம்பலாம். இவரை நம்ப முடியாது என நாம் முடிவெடுக்க முடியாது. ஒட்டுமொத்தமாக உள்ள சூழலைப் பார்த்து, இந்த சூழலில் எவ்விதமான நகர்வை எமது மக்கள் அடையலாம் எனக் கருதி நாங்கள் முடிவெடுக்க வேண்டும். அதற்கு மேலதிகமாக நாங்கள் ஒன்றையும் கூற முடியாது.

கேள்வி: பொது வேட்பாளருடன் நீங்கள் இரகசிய ஒப்பந்தம் செய்துள்ளதாக ஐ.தே.கவின் முன்னாள் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க குற்றஞ்சாட்டியுள்ளார். இது குறித்து உங்கள் கருத்து என்ன?

பதில்: அவருடைய கதைகளுக்கு நாங்கள் மதிப்பளிப்பது முடியாத விடயம். அவரைப்பற்றி உங்கள் அனைவருக்கும் நன்றாகத் தெரியும்.

கேள்வி: இராணுவத்தை வடக்கிலிருந்து வெளியேற்றுவது, காணி பொலிஸ் அதிகாரம் தொடர்பில் மைத்திரிபால சிறிசேனவுடன் பேச்சு நடத்தியுள்ளீர்களா?

பதில்: நாம் அனைத்து தரப்பினருடனும் பேச்சு நடத்தியுள்ளோம். ஆனால், நீங்கள் கூறிய விடயங்களைப் பற்றியல்ல. நாட்டில் ஏற்பட வேண்டிய அரசியல் தீர்வு தொடர்பில் நாம் அனைவருடனும் பேச்சு நடத்தியுள்ளோம். மைத்திரிபால சிறிசேவுடன் எந்தவொரு ஒப்பந்தமும் செய்யவில்லை. அரசியல் ரீதியாகவோ அல்லது முகாம்களை அகற்றுவது தொடர்பிலோ எந்தவொரு இணக்கப்பாடும் ஏற்படவில்லை. எமது முடிவை நாம் மிகத் தெளிவாக அறிவித்துள்ளோம். முழு நாட்டு மக்கள் தொடர்பிலும் அவதானம் செலுத்தி இந்த முடிவை எடுத்துள்ளோம். ஜனநாயகத்தை மீண்டும் நிலைநாட்ட வேண்டும் என்பதே எமக்கு தேவையான முதலாவது காரணியாகும். அதனால், ஜனநாயக சூழல் உருவாக்கப்பட்டதன் பின்னர் நாம் எவருடனாவது பேச்சு நடத்த தயார். அவ்வாறு ஜனநாயக சூழல் இருந்தால், அனைவரும் பேச்சு நடத்துவதற்கு சரியான சந்தர்ப்பத்தைப் பெற்றுக்கொள்ள முடியும். அவ்வாறான நிலைக்கு நாடு மீண்டும் செல்ல வேண்டும். இது எமக்கு மட்டுமல்ல நாட்டில் வாழும் அனைத்து தரப்பினருக்கும் முக்கியமான பிரச்சினையாகும். அதனால் நாட்டுக்காக நாம் இந்தத் தீர்வை எடுத்துள்ளோம். கதவுக்கு பின்னால் சென்று தேசிய பிரச்சினைக்குத் தீர்வுகாண நாம் தயாரில்லை. அது ஒருபோதும் நடக்காது. அதுபோன்ற ஒப்பந்தங்களைச் செய்து இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாண நாம் தயாரில்லை. அவ்வாறு செய்யவும் முடியாது. முழுநாட்டுக்கும் என்ன நடக்கிறது என்று தெரிய வேண்டும். என்ன பேச்சு? என்ன தீர்வு என்று முழு நாட்டு மக்களும் தெரிந்துகொள்ள வேண்டும். அதுபோன்றதொரு நிலைக்கே நாம் தயார். தேசிய பிரச்சினைக்கு தீர்வானது தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல, நாட்டில் வாழும் அனைத்து மக்களும் ஏற்றுகொள்ளக்கூடிய தீர்வே எமக்கு வேண்டும். அதனால், கதவுக்கு பின்னால் சென்று பேச்சு நடத்தி தீர்வுகாண முடியும் என்று நாம் நம்பவில்லை. பிரிக்கப்படாத இலங்கைக்குள் அனைத்து மக்களும் ஏற்கும், அனைவருக்கும் நன்மை பயக்கும் தீர்வாக அமையவேண்டும். அப்படியில்லையயன்றால், அது நிலைத்திருக்காது. அதனால், நாம் நடத்தும் பேச்சு, நாம் தேடும் தீர்வு அனைவருக்கும் நீதியைப் பெற்றுக்கொடுக்கும் தீர்வே எமக்கு தேவை. நாம் தேடும் அரசியல் தீர்வு, தமிழ் மக்கள் மட்டுமல்ல, முஸ்லிம் மக்களும் மட்டுமல்ல, இந்த நாட்டில் வாழும் சிங்கள மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையிலே அது இடம்பெற வேண்டும்.

கேள்வி: மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவாக கூட்டமைப்பு பிரசார மேடைகளில் ஏறுமா?

பதில்: இல்லை

கேள்வி: எந்த நம்பிக்கையின் அடிப்படையில் நீங்கள் எதிரணியின் பொது வேட்பாளருக்கு ஆதரவளிக்கின்றீர்கள்?

பதில்: 60 வருடங்களுக்கும் மேலாக இருந்த தேசிய பிரச்சினைக்கு யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதன் பின்னர் தீர்வுகாண தற்போதைய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால்தான் நாம் அனுபவமிக்க, சிரேஷ்ட அரசியல்வாதியான மைத்திரிபால சிறிசேனவுக்கு அந்த வாய்ப்பை வழங்க முடியும் என நினைக்கின்றோம். இந்த வாய்ப்பு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு இருந்தது. அவர் செய்யவில்லை. அதனால், இன்னொருவருக்கு அந்த வாயப்பை வழங்க வேண்டும் என்று தீர்மானித்துள்ளோம். அரசியல் தீர்வை வழங்குவதில் மஹிந்த அரசு தோல்வியடைந்துள்ளது. அத்துடன், ஜனநாயகத்தை நிலைநிறுத்தல், நீதித்துறை சுதந்திரம், சட்டவாக்கத்துறை சுதந்திரம், ஊடகச் சுதந்திரம் என்பவற்றில் அரசு தோல்வியடைந்துள்ளது.

கேள்வி: இந்தத் தேர்தலினூடாக ஆட்சிமாற்றமொன்று ஏற்படும் என்று பொது எதிரணி வேட்பாளருக்கு ஆதரவளித்துள்ளீர்கள். ஆனால், ஆட்சிமாற்றமொன்று ஏற்படாவிட்டால் என்ன செய்வீர்கள்?

பதில்: ஒரு தேர்தல் வருகின்றபோது அந்தத் தேர்தலில் அரசியல் கட்சிகளும் மக்களும் தங்களுடைய சிந்தனைகளின் அடிப்படையில், அப்போதுள்ள நிலைமைகளின் அடிப்படையில் சில முடிவுகளை எடுத்துச் செயற்படுவார்கள். சில சமயம் அது வெற்றியில் அமையலாம், சில சமயம் தோல்வியில் அமையலாம். தோல்வியில் அமைந்தால், அது குறித்து அப்போது தீர்மானிக்கலாம். என தெரிவித்துள்ளாா்.