Breaking News

சிக்கல் தீர்ந்தது: திட்டமிட்டபடி வெளியாகிறது ஐ படம்

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் விக்ரம், எமி ஜாக்சன் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ஐ.


இந்த படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசை அமைத்துள்ளார். ஆஸ்கர் ரவிச்சந்திரன் அதிக பொருட் செலவில் இந்த படத்தை தயாரித்துள்ளார். கிட்டத்தட்ட 3 வருடங்களாக தயாரிப்பில் இருந்து வந்த  ஐ படத்தை தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவே ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கிறது. படம் வருகிற பொங்கலை முன்னிட்டு ஜனவரி 14ம் தேதி படம் ரிலீஸாக இருந்தது.

இதற்கான ஏற்பாடுகள் எல்லாம் மும்முரமாக நடந்து வந்த வேளையில், ஐ படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற நிறுவனத்திடம் படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன், வாங்கிய கடனை திருப்பி செலுத்தாததால் அந்த நிறுவனம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம், 3 வார காலத்திற்கு இப்படத்தை ரிலீஸ் செய்ய தடைவிதித்து இருந்தது.

மேலும் இதுதொடர்பாக ஜன. 30ம் தேதிக்குள் ஆஸ்கர் ரவிச்சந்திரன் விளக்கம் தரும்படியும் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இப்பிரச்னை தொடர்பாக சம்பந்தப்பட்ட இருவரும் சுமூகமாக பேசி தீர்த்துள்ளனர். இதனையடுத்து படம் வெளியாவதில் எந்த சிக்கலும் இல்லை என்றும், திட்டமிட்டபடி ஐ படம் ஜன.,14ம் தேதி ரிலீஸாகும் என்றும் ஆஸ்கர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இதை உறுதிப்படுத்தும் வகையில் ‘ஐ’ படத்திற்கு எதிராக வழக்கு தொடுத்த “பிக்சர் ஹவுஸ் மீடியா லிமிடெட்” வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, “ஆஸ்கார் பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் சார்பில் திரு ரவிசந்திரனின் தயாரிக்கும் ‘ஐ’ திரை படத்துக்கு எங்களது முழு ஒத்துழைப்பை தருகிறோம்.

ஜனவரி14ஆம் தேதி பொங்கலன்று வெளிவரும் ‘ஐ’ படம் விஷயமாக எங்களுக்குள் இருந்த தொழில் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் சமூகமாக பேசி தீர்க்க பட்டு விட்டது. திரைபடத்துறையின் நலனை முன்னிட்டு இந்த முடிவு என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஆகவே ‘ஐ’ படம் குறிப்பிட்ட தேதியில் வெளி வர தடை ஏதும் இல்லை என்பதை இதன் மூலம் தெரிய படுத்துகிறோம். இந்த படத்தில் சம்மந்தப்பட்ட அத்தனை பேருக்கும் இந்த குறிப்பு மூலம் வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறோம்.” இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்மூலம் ஐ படம் சொன்ன தேதியில் வெளியாவது உறுதி செய்யப்பட்டுள்ளது.