Breaking News

மணற்கொள்ளையால் வாழ்விடம் பறிபோகின்றது! பூநகரி மக்கள் கவலை (படங்கள் இணைப்பு)

 பூநகரி – கௌதாரிமுனையில் கட்டுப்பாடில்லாமல் தொடரும் மணற்கொள்ளையால் தங்கள் வாழ்விடம் பறிபோகின்றது என பிரதேச மக்கள் வடக்கு மாகாண சுற்றாடல் அமைச்சர் பொ. ஐங்கரநேசனிடம் முறையிட்டுள்ளனர். 

 கௌதாரிமுனையில் இருந்து சட்டவிரோதமாகத் தினமும் நூற்றுக்கணக்கான பாரவூர்திகளில் மணல் ஏற்றிச் செல்லப்படுவதாக அமைச்சர் பொ.ஐங்கரநேசனுக்குத் தொலைபேசி மூலம் அப்பகுதி மக்கள் தெரிவித்திருந்தனர். அதனையடுத்து அமைச்சர் கடந்த புதன்கிழமை குறித்த பகுதிக்குச் சென்று சம்பவத்தை நேரில் கண்டறிந்தார். 

 அதன்போது மணற் கொள்ளையால் தமது வாழ்விடம் பறிபோவதாகவும் மணல் அகழ்வை உடனடியாகத் தடுத்து நிறுத்தும்படியும் அப்பகுதி மக்கள் அமைச்சர் பொ. ஐங்கரநேசனிடம் முறையிட்டுள்ளார்கள். அத்துடன் பெரும் பெரும் குன்றுகளாக – கௌதாரிமுனைக்கு அழகு சேர்த்த மணற்குன்றுகள் மணல் அகழ்வால் காணாமல் போய்க்கொண்டிருப்பதாவும், நூற்றுக்கணக்கான பாரவூர்திகள் தினமும் அங்குவந்து போய்க் கொண்டிருப்பதால் வீதிகள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். 

 இதனால் தாங்கள் போக்குவரத்துக்கு சிரமப்படுவதாகவும் மணல் அகழப்பட்ட பகுதிகளுக்கு ஊடாகக் கடல் நீர் கிராமங்களில் உட்புகும் அபாயம் நிலவுவதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் குடிநீரின் சுவையிலும் மணத்திலும் மாற்றங்கள் ஏற்படத் தொடங்கியிருப்பதாகவும் தெரிவித்தனர். குறித்த இடத்திற்குச் சென்ற அமைச்சர், மணல் ஏற்றிக்கொண்டிருந்த பாரவூர்திகளின் அனுமதிப் பத்திரங்களை சோதனையிட்டார். 

 அப்போது மணல் அகழ்வதற்கு என ஒதுக்கப்பட்ட இடங்களில் அல்லாமல் வேறு இடங்களில் மணல் ஏற்றிக்கொண்டிருப்பது தெரியவந்தது. அவ்வாறு முறையற்ற விதத்தில் மணல் ஏற்றிச் சென்ற பாரவூர்திகளின் ஓட்டுநர்களை எச்சரித்த அமைச்சர் ஏற்றிய மணல் முழுவதையும் அகழப்பட்ட இடங்களில் மீளவும் கொட்டுமாறு உத்தரவிட்டார். 

 சுற்றாடல் அதிகாரசபையின் ஒப்புதலோ, பிரதேச செயலரின் ஒப்புதலோ இல்லாமல் மத்திய புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கங்கள் பணியகம் மணல் அகழ்வுக்கான அனுமதியை வழங்கியுள்ளது. முறைகேடான இந்த அனுமதியைப் பயன்படுத்தி முறைகேடாக மணல் அகழப்பட்டுக்கொண்டிருக்கிறது. 

இதைத் தொடர்வதற்கு அனுமதித்தால் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த கௌதாரிமுனையில் மக்கள் வாழவே முடியாத நிலை ஏற்படும். எனவே இது தொடர்பாக மத்திய அரசின் கவனத்துக்கு நாம் உடனடியாகக் கொண்டுசெல்வோம். அரசு செவிமடுக்காது போனால், மணல் கொள்ளைக்கு எதிராக மக்கள் போராடவேண்டும். போராடாமல் எங்கள் எந்த உரிமையையும் பெற முடியாது என்று தெரிவித்தார்.