மகிந்தவின் இறுதி சூழ்ச்சிக்கு இராணுவமும் பொலிஸாரும் அடிபணியவில்லை –ராஜித
ஆட்சி அதிகாரத்தை தொடர்ந்தும் தக்கவைத்துக்கொள்ளும் வகையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ இறுதி நேரம் வரை பல்வேறு சூழ்ச்சிகளையும் முயற்சிகளையும் மேற்கொண்டார்.
ஆனால் இராணுவத் தளபதியும், பொலிஸ் மா அதிபரும் அதற்கு அடிபணியாமல் அமைதி யானதும் நியாயமானதுமான தேர்தலொன்றுக்காக நேர்மையாக பொறுப்புணர்வுடன் செயற்பட்டனர் அதுவே எமது வெற்றிக்கு காரணம் என ராஜித சேனாரத்ன தெரிவித்தார். நேற்று அரசாங்க தகவல் திணைக்களத் தில் இடம்பெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த தேர்தலைப் போன்று இந்தத் தேர்தலிலும் மிகவும் மோசமான முறையில் அரச வளங்கள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டன. அரச ஊடகங்களை தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டனர். அரச அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பாரிய அழுத்தங்களுக்குள்ளாக்கப்பட்டார்கள். இவற்றையெல்லாம் பார்க்க மக்களுக்கே பொறுக்கவில்லை.
ஆகையினாலேயே, அனைவரும் புதிய மாற்றத்துக்காய் ஒன்றிணைந்தனர்.
பொலிஸ் மாஅதிபருக்கு பாதுகாப்பு செயலாளர் ஊடாக பல்வேறு அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டன. ஆனால், அவர் அதற்கெல்லாம் அடிபணியாமல் அமைதியானதும் நேர்மையானதுமான தேர்தலுக்காய் பொறுப்புடன் செயற்பட்டார்.
இராணுவம் முக்கிய அதிகாரிகளுடனும் சட்டத்துறையினர்களுடனும் கலந்துரையாடி தனது அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், அவர்களும் அதற்கு அடிபணியாமல் செயற்பட்டனர்.
தேர்தல் நிறைவடைந்ததும் இராணுவ ஆட்சி ஏற்படுமென்றெல்லாம் சொல்லப்பட்டது. ஆனால், அமைதியான தேர்தல் இடம்பெற்றது. அமைதியைக் குழப்பி அதனூடாக அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான கதவுகள் அனைத்தும் மூடப்பட்டன.
லிபியா, பிலிப்பைன்ஸ், எஜிப்து போன்ற நாடுகளில் துப்பாக்கி தோட்டாக்களால் செய்ததை நாம் வாக்குச் சீட்டுக்கள் மூலம் செய்துள்ளோம். எமது இந்த போராட்டத்தில் அனைத்து மக்களும் ஒன்றிணைந்து செயற்பட்டனர். அரச ஊடகங்களை தவிர, ஏனைய ஊடகங்கள் மக்கள் மத்தியில் எமது நிலைப்பாடுகளையும் உண்மைச் செய்திகளையும் எடுத்துச் சென்றன.
கடந்த காலங்களில் ஊடகங்கள் நிறுவனங்கள் மீதும், ஊடகவியலாளர்கள் மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. பல ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டார்கள். ஆனால் அவ்வாறானதொரு நிலை இனி ஒருபோதும் ஏற்பட இடமளிக்க மாட்டோம். எந்தவொரு ஊடக நிறுவனமும் இனி தீக்கிரையாக்கப்பட மாட்டாது. அவ்வாறு எவராவது செயற்பட்டால் அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை மேற்கொள்வோம்.ஊடகவியளலாளர்களால் கடந்த காலங்களில் சுயாதீனமாக செயற்பட முடியாதிருந்திருந்தது.
அவர்களுடைய தொலைபேசி அழைப்புக்கள் ஒட்டுக் கேட்கப்பட்டன. அமைச்சர்களால் கூட சுயாதீனமாக தமது அரசியல் விடயங்களை பேச முடியாத ஒரு கலாசாரமே காணப்பட்டது. இனி அப்படியொரு கலாசாரம் ஏற்படாது.
அச்சுறுத்தல்கள் காரணமாக ஊடகவியலாளர்கள் நாட்டை விட்டு வெளியேறி வாழ்ந்து வருகின்றனர். அவ்வாறான ஊடகவியலாளர்கள் மீண்டும் நாட்டிற்குள் வந்து தமது ஊடக செயற்பாடுகளை மேற்கொள்ளலாம்.
படுகொலைகள்,பாலியல் துஷ்பிரயோகங்கள் போன்ற பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய அரசியல்வாதிகளுக்கு எதிரான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும். அதேபோன்று பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு நாட்டை விட்டு தப்பிச் சென்று தலைமறைவாகியிருப்போர் தொடர்பிலானோரது தகவல்களையும் திரட்டி வருகின்றோம்.
புலிகளின் முக்கிய தலைவர்களில் ஒருவரான கே.பி. நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அது தொடர்பிலும் ஆராய்ந்து வருகின்றோம்.நல்லாட்சிக்காக நாமாகவே ஒன்றிணைந்து ஒருவரை ஜனாதிபதியாக்கியுள்ளோம். அவரின் ஊடாக ஜனநாயகத்தை நிலைநாட்டி சட்டத்தையும் ஒழுங்கையும் உறுதிப்படுத்துவோம் என்றார். .








