Breaking News

யாழ்ப்பாணத்துக்கும் வருகிறார் மோடி

வரும் மார்ச் மாதம் இலங்கைக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளவிருக்கும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, யாழ்ப்பாணத்துக்கும் பயணம் மேற்கொள்வார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வரும் மார்ச் 13ம் நாள் தொடக்கம் 15ம் நாள் வரை சிறிலங்காவில் பயணம் மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் பயணத்துக்கான திட்டமிடல் மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகளில், இருநாட்டு அதிகாரிகளும் ஈடுபட்டுள்ளனர்.

இந்தப் பயணத்தின் போது, சிறிலங்காவின் அரசியல் தலைவர்களுடன் பேச்சுக்களை நடத்தவுள்ள இந்தியப் பிரதமர், யாழ்ப்பாணத்துக்கும் சென்று அங்குள்ள நிலைமைகளைப் பார்வையிடுவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கான ஒழுங்குகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.அதேவேளை, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன வரும் 15,16ம் நாள்களில் புதுடெல்லியில் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக இராஜதந்திர வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

மைத்திரிபால சிறிசேனவின் பயணத்துக்கான நிகழ்ச்சி ஒழுங்குகள் பொரும்பாலும் பூர்த்தியாகி விட்டதாக இந்திய அதிகாரிகள் கூறியுள்ளனர்.
அவர் புதுடெல்லியில், இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி, வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் ஆகியோரையும் சந்தித்துப் பேச்சுக்களை நடத்துவார்.

இந்தப் பேச்சுக்களில், இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு, மீனவர்களின் விவகாரம், அகதிகளைத் திருப்பி அனுப்புதல், மற்றும் இருதரப்பு உறவுகளைப் பலப்படுத்திக் கொள்வது ஆகிய விடயங்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சிறிலங்கா அதிபருடன், வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவும் புதுடெல்லி செல்லவுள்ளார்.மைத்திரிபால சிறிசேன நாடு திரும்புவதற்கு முன்னர், புத்தகயவுக்குச் சென்று வழிபாடு செய்யவும் திட்டமிட்டுள்ளார்.