Breaking News

யாழ். பல்கலைக்கழக சமூகத்திற்கு எழுதும் அன்பு மடல்

அன்புமிகு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகத்திற்கு வணக்கம். போர்க்குற்ற விசாரணை அறிக்கை பிற்போடப்பட்டமைக்கும் உள்ளக விசாரணைக்கும் எதிர்ப்புத் தெரிவித்து நேற்றைய தினம் தாங்கள் நடத்திய ஆர்ப்பாட்டப் பேரணி கண்டோம். 

நீண்டகாலத்திற்குப் பின்னர் ஒரு பேரணி நடந்ததை உணர முடிந்தது. மற்றும்படி பேரணி நடத்தப்பட்டதன் சாதக பாதகங்கள் பற்றி இவ்விடத்தில் பிரஸ்தாபிக்க விரும்பவில்லை. அப்படியானால் எதற்காக கடிதம் எழுத முனைந்தீர்கள் என்ற கேள்வி நிச்சயம் உங்களிடம் எழும். அத்தகையதொரு கேள்வி எழும் போது யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகத்தின் சமூகக் கடமை பற்றி இவ்விடத்தில் தங்கள் கவனத்தை ஈர்ப்பதே இக் கடிதத்தின் நோக்கம் என்று கூறலாம். 

போர்க்குற்ற விசாரணை பிற்போடப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவிப்பது பொருத்தமாயினும் நாங்கள் எடுக்கின்ற ஒவ்வொரு நடவடிக்கையின் அசைவும் மிக நிதானமாக அமையவேண்டும். தமிழ் அரசியலில் வேறுபட்ட கருத்துக்கள் இருக்க முடியும். அரசியலில் வேறுபட்ட கருத்துக்கள் இருப்பது நியாயமானதாயினும் வேறுபட்ட கருத்துக்களின் இலக்கு தமிழர்களின் உரிமை, வாழ்வியல், சுதந்திரம் என்பதாகவே இருக்க முடியும். 

சுயலாபம் கருதிய அரசியல் முன்னெடுப்புக்கள் தமிழ் மக்களை மீளமீள துன்பப்படுத்தும் என்பது நம் தாழ்மையான கருத்து என்பதை இவ்விடத்தில் குறிப்பிட்டாக வேண்டும். 

அதேநேரம் நாம் முன்னெடுக்கின்ற போராட்டங்கள் வெளிப்படையான அர்த்தம் உடையனவாக அமைவதும் அவசியம். அந்த வகையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகம் நடத்திய ஆர்ப்பாட்டப் பேரணியின் அர்த்தப்பாடுகள் எத் தன்மையானவை என்பது இப்போது உலக நாடுகளால் அல்லது இலங்கை விவகாரம் குறித்து உன்னிப்பாகக் கவனிக்கின்ற சர்வதேச அமைப்புக்களால் மதிப்பீடு செய்யப்படும். அந்த மதிப்பீடு தமிழ் மக்களுக்கு சாதகமாக அமையும் போதே நீங்கள் முன்னெடுத்த எதிர்ப்புப் போராட்டம் வெற்றி பெறும். 

எனவே சர்வதேச சமூகம் சார்ந்த விடயங்களில் மிக நிதானமாக செயற்படுவது அவசியம். அந்தத் தகைமைப்பாடு பல்கலைக்கழக சமூகத்திற்கு நிறையவே உண்டு என்பதால் அது பற்றியும் இவ்விடத்தில் அதிகம் சுட்டிக்காட்ட வேண்டிய தேவை இல்லை. 

நாம் இங்கு பிரஸ்தாபிப்பது எல்லாம் தமிழ் மக்களின் சமூக, பொருளாதார விடயங்களிலும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகம் அக்கறை கொள்ளவேண்டும் என்பதாகும். தமிழ் மக்களின் இன்றைய சமூக நிலைமை என்பது மிகவும் மோசமாகி உள்ளது. அதேநேரம் சமூகக் கட்டமைப்புகள் உடைந்து போகுமாயின் நாம் தமிழர் என்று சொல்வதற்கான அடையாளங்கள் எதுவும் இல்லாமல் போய் விடும். 

அதேசமயம் தமிழர் தாயகத்தில் ஏற்பட்டு வருகின்ற சூழலியல் பாதிப்புக்கள் பற்றிச் சிந்திப்பதும் அவற்றைச் சீர்மைப்படுத்த ஆய்வுகள் செய்வதும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகத்தின் கடமைப் பொறுப்பு என்பது மறுக்கமுடியாத உண்மை. ஆகையால் மேற்குறிப்பிட்ட விடயங்களிலும் பல்கலைக்கழக சமூகத்தின் வகிபங்கு இருக்கும் போதே பல்கலைக்கழகத்தின் மீதான நம்பிக்கை தமிழ் மக்களிடம் உறுதி செய்யப்படும்.

ஆக, தமிழர்களின் உரிமை சார் விடயங்களில் தொடர் கவனிப்பு இருப்பதுடன் போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் மீள்வாழ்வுக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட வேண்டும். இதைச் செய்வது உங்கள் கடமை என்பதை மறக்கமாட்டீர்கள் என நம்புகிறோம். 

வலம்புரி ஆசிரியர் தலையங்கம்