Breaking News

உள்ளக விசாரணை அறிக்கை ஓகஸ்டில் வெளிவரும்

காணாமற்போனோர் தொடர்பிலும் மனித உரிமை மீறல்கள் சம்பந்தமாகவும் விசாரணை நடத்திவரும் ஜனாதிபதி ஆணைக்குழு தனது இறுதி விசாரணை அறிக்கையை ஓகஸ்ட் நடுப்பகுதியில் வெளியிடவுள்ளது. 

இதற்கான பணிகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன. இந்தத் தகவலை நேற்று உறுதிப்படுத்திய ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பரணகம, இடைக்கால அறிக்கையை கையளிப்பதற்குரிய திகதியை ஜனாதிபதி செயலகம் இன்னும் வழங்கவில்லை என்றும் கூறினார். இடைக்கால அறிக்கை கடந்த 18 ஆம்திகதி வெளியிடப்படவிருந்தது. 

அன்றைய தினம் ஜனாதிபதிக்கு முக்கிய சில வேலைகள் இருந்ததால் அந்நிகழ்வு இடம்பெறவில்லை. இந்நிலையில், அவர் சீனாவுக்குப் பயணம் மேற்கொண்டார். எனவே, இவ்வாரத்துக்குள் இடைக்கால அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேற்படி குழு இதுவரை காலமும் முன்னெடுத்த பணிகள் மற்றும் பரிந்துரை ஆகியன இடைக்கால அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளன. 

 ஏப்ரல் நடுப்பகுதியில் அம்பாறையில் நடை பெறவுள்ள மக்கள் அமர்வு முடிவடைந்த பின்னர் இறுதி அறிக்கை தயாரிக்கும் பணிகள் துரிதப்படுத்தப்படவுள்ளன. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் செம்ரெம்பர் மாத அமர்வில் மேற்படி அறிக்கை சமர்ப்பிக்கப்படலாம் அல்லது அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு உள்ளக விசாரணைப் பொறிமுறையயான்று அமைக்கப்படலாம் என அரசியல் வட்டாரங்களிலிருந்து அறிய முடிகிறது. 

 அதேவேளை, காணாமல்போனோரின் உறவினர்களுக்கு கொழும்பில் செயலமர்வு ஒன்றை நடத்தவும் பரணகம குழு தயாராகிவருகிறது. இதில் பங்கேற்குமாறு மன்னார் ஆயருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. போர்க்காலத்தில் வடக்கு, கிழக்கில் காணாமல்போனோர் தொடர்பில் விசாரணை நடத்து வதற்கு மூவரடங்கிய நிபுணர்கள் குழுவை மஹிந்த ராஜபக்ச­ அமைத்திருந்தார். பின்னர், அதன் விடயப்பரப்பையும், உள்ளக போர்க்குற்ற விசாரணையை முன்னெடுக்கும் வகையில் விஸ்தரித்தார் என்பதுடன், சர்வதேச நிபுணர்கள் அடங்கிய ஆலோசனைக்குழுவொன்றையும் அமைத்திருந்தார்.