Breaking News

புலனாய்வாளர்களால் தொடர்ந்தும் அச்சுறுத்தல்

இராணுவ புலனாய்வாளர்களால் நாங்கள் தொடர்ந்தும் நேரடியாக அச்சுறுத்தப்படுகின்றோம். புனர்வாழ்பு அளிக்கப்பட்டதன் பின்பு கூட விசாரணை என்று நாங்கள் இல்லாத நேரங்களில் தனிமையில் உள்ள மனைவியிடம் சென்று விசாரிக்கின்றார்கள். 


இதை நிறுத்த வேண்டும். அல்லாவிட்டால் நாங்கள் தற்கொலை செய்ய வேண்டிய நிலை ஏற்படும். இவ்வாறு புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் பிரதமர் ரணிலிடம் கூறினர். வடக்குக்கு மூன்று நாள்கள் பயணம் மேற்கொண்டிருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று கிளிநொச்சி மாவட்ட செயலக்துக்குச் சென்றிருந்தார். அதன்போதே அவரிடம் இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

 "இராணுவத்தினருடைய இந்த விசாரணைகள் எங்களை மேலும் மேலும் பாதிப்புக்களுக்கு உள்ளாக்குகின்றன. எங்களை ஏதாவது கேட்பதாக இருந்தால் பொலிஸ் அதிகாரிகள் விசாரிக்கலாம். ஆனால் மீண்டும் மீண்டும் இராணுவம் என்றால் தற்கொலைதான் செய்யவேண்டும்.'' என்று முன்னாள் போராளி ஒருவர் பிரதமரிடம் தெரிவித்தார். 

 "மனைவி இறந்ததன் பின் மாற்று திறனாளியான நான் மனநலம் குன்றிய இரண்டு பிள்ளைகளுடன் மிகவும் வறுமையின் பிடியில் வாழ்ந்து வருகின்றேன். வாழ்வாதார உதவிகளுக்காக அரியல் கட்சிகளான கூட்டமைப்ப்பினருடன் கதைத்தாலோ அல்லது ஈ.பி.டி.பி. யினருடன் கதைத்தாலோ என்னை மீண்டும் போருக்குத் துணைபோவதாக புலனாய்வாளர்கள் வீட்டுக்கு வந்து மிரட்டுகின்றார்கள். நாம் வாழ்வாதாரத்தை கூட பெற்று கொள்ள முடியாதா?' என்று மற்றொருவர் குறிப்பிட்டார். இதுகுறித்து குறித்த கலந்துரையாடலில் கலந்து கொண்டிருந்த இராணுவத்தினரிடம் பிரதமர் விளக்கம் கோரினார். 

ஆனால் அவற்றை இராணுவத்தினர் முற்றாக மறுத்தனர். அதையடுத்து பிரதமர் இவை தற்போது உள்ள ஆட்சிக்காலத்திலா நடைபெறுபெறுகின்றது என்று முன்னாள் போராளிகளிடம் கேட்டபோது, அவர்கள் ஆம் எனப் பதிலளித்தனர். அதையடுத்து இதுகுறித்து ஆராய்வதாகப் பிரதமர் தெரிவித்தார்.