Breaking News

மீண்டும் புலிகள் உருவாக வாய்ப்பு! இலங்கை அரசியலில் பரபரப்பு

இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீண்டும் உருவாக வாய்ப்புள்ளதாக இலங்கையின் மறுவாழ்வு ஆணையாளர் மேஜர் ஜெனரல் ஜெகத் விஜய திலக்க தெரிவித்துள்ளார்.


இலங்கையில் விடுதலைப்புலிகள் மற்றும் போராளிகள் ஆகியோருக்கு மறுவாழ்வு அளிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அமைப்பின் தலைவரான அவர் கூறுகையில்,

“இலங்கையில், ராணுவத்திற்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே நடந்த இறுதிப் போரின்போது சரணடைந்த, 12 ஆயிரத்து 346 விடுதலைப் புலிகளில், 6 முதல் 7 சதவீதத்தினர் கரும்புலிகள் என்ற தற்கொலை பிரிவைச் சேர்ந்தவர்கள். இலங்கை இராணுவத்திடம் சரணடைந்தவர்களில் எவ்வித குற்றங்களையும் மேற்கொள்ளாத தற்கொலை போராளிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் 12 ஆயிரத்து 77 பேருக்கு இலங்கை அரசால் மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் இவர்கள் சமூகத்துடன் மீண்டும் இணைக்கப்பட்டுள்ளதோடு, அமைதியான வாழ்க்கையில் ஈடுபட்டு வருவதாக, விஜயதிலக்க குறிப்பிட்டுள்ளார். 

ஆனால், சமூகம் ஆண் போராளிகளை எளிதாக ஏற்றுக்கொண்ட போதிலும், 2,269 பெண் போராளிகளைப் புறக்கணித்திருப்பதாக விஜயதிலக்க சுட்டிக் காட்டிஇருக்கிறார். விடுதலைப் புலிகளால் பயிற்சியளிக்கப்பட்ட தற்கொலை போராளிகளின் மனநிலையை மாற்றுவது என்பது கடினமான காரியமாகவே உள்ளது. அவர்களின் மனதில் சிங்களவர்கள் மீதான வெறுப்பு நிலை, மூளைச் சலவை செய்யப்பட்டிருக்கிறது. இந் நிலையில் புனர்வாழ்வு அளிக்கப்பட்ட விடுதலைப்புலிகளின் வாழ்வாதாரம் தொடர்பாக, உரிய நிர்வாக ஏற்பாடுகள் அரசால் மேற்கொள்ளப்பட வேண்டும். அதைச் செய்யாவிட்டால், இலங்கையில் மீண்டும் வன்முறைகள் ஏற்படக்கூடும்.

இதற்கிடையில் 2,172 முன்னாள் போராளிகள் இன்னமும் மறைந்து வாழ்கின்றனர். இவர்களாலும் மீண்டும் அந்த இயக்கம் உருவாக்கப்படலாம் என்ற அச்சம் நிலவுகிறது. எனினும் துரதிர்ஷ்டவசமாக அவர்களைக் கைது செய்து மறுவாழ்வு அளிப்பதற்கான நடவடிக்கைகள் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை” என்று விஜயதிலக்க தெரிவித்தார்.

மறுவாழ்வு அமைப்பின் பிரதிநிதி இவ்வாறு தெரிவித்துள்ளது இலங்கை அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.