Breaking News

தமிழர் பிரச்சினைகளில் புதிய அரசின் வேகம் போதாது - வட மாகாண சபை

காணிகள் விடுவிப்பு, தமிழ் அரசியல் கைதிகள் விடுவிப்புப் போன்றவற்றில் புதிய அரசு எடுத்துவரும் நடவடிக் கைகளில் வேகம் போதாது. தமிழ் மக்களிடம் பெரும் எதிர்பார்ப்பு இருக்கின்ற நிலையில், புதிய அரசு மெத்தனமாகச் செயற்படுகின்றது. இவ்வாறு வடக்கு மாகாணசபை உறுப்பினர்கள், அமெரிக்க செனட் உறுப்பினர்களிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.

 யாழ்ப்பாணத்திற்கு நேற்று வந்திருந்த அமெரிக்க செனட் குழு உறுப்பினர்கள், வடக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் வடக்கு மாகாண சபையினரைச் சந்தித்துக் கலந்துரையாடினர். அதன்போதே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர், வடக்கில் எவ்வாறான நிலைமைகள் காணப்படுகின்றது என்பது தொடர்பில் ஆராய்வதற்காக, வடக்கிற்கு பயணம் மேற்கொண்டதாக, அமெரிக்க செனட் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். 

 இந்தச் சந்திப்பில் கலந்து கொண்ட வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் பிரதானமாக இரண்டு விடயங்களைச் சுட்டிக்காட்டிடனர். காணி மற்றும் தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பிலேயே அதிகம் கலந்துரையாடினர். புதிய அரசு பதவியேற்ற பின்னர் காணிகள் விடுவிக்கப்படுவதாகக் கூறப்படுகின்றது. சில காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. ஆனாலும் அந்த நடவடிக்கைகளில் வேகம் போதாது. மக்களின் காணிகளை உடனடியாக விடுவிப்பதற்குரிய வாய்ப்புக்கள் காணப்படுகின்றன. ஆனால் அதனை அரசு செய்யவில்லை. காணி உரித்து மாகாண சபைக்கு உரியதாக இருக்கின்ற போதிலும், அதனை இன்னமும் வழங்கவில்லை. என்று அவர்கள் சுட்டிக்காட்டினர். 

 கடந்த அரசும் இதே போன்று மாகாணத்துக்கே உரித்தான காணி அதிகாரத்தை வழங்கவில்லை. தற்போதைய அரசு அதனை எங்களிடம் வழங்கினாலேயே பெரும்பாலான காணிப் பிரச்சினைகளைத் தீர்க்க முடியும். என்றும் அவர்கள் குறிப்பிட்டனர். தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தாமதிக்கப்படுகின்றது. பொதுமன்னிப்பில் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க முடியும். ஆயினும் அரசு அதனைச் செய்ய முன்வரவில்லை. 

தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு வீணடிக்கப்படுகின்றது. என்றும் வடக்கு மாகாண சபையின் சுட்டிக்காட்டினர். இதன் பின்னர் கருத்துத் தெரிவித்த அமெரிக்க செனட் உறுப்பினர்கள், இப்பொழுதுதான் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக விளைவுகளை எதிர்பார்க்க முடியாது. படிப்படியாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. எனவே தொடர்ந்தும், சரியான விடயங்கள் நடக்கும் என்று பதிலளித்தனர்.