Breaking News

முன்னாள் போராளிகளுக்கு தொந்தரவு கொடுக்காதீர்கள்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கிளிநொச்சிக்கு நேற்றுமுன்தினம் விஜயம் செய்திருந்தார்.அங்கு விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்த முன்னாள் போராளிகள் பிரதமர் ரணிலை தனியாகச் சந்தித்து பொதுவாழ்வில் தாங்கள் அனுபவிக்கும் துன்பங்கள் பற்றி முறையீடு செய்துள்ளனர்.

புனர்வாழ்வு என்ற பெயரோடு நாங்கள் பொது வாழ்வில் இணைந்துள்ளோம். எனினும் இராணுவ அச்சுறுத்தல், புலனாய்வாளர்களின் பின் தொடர்கை, விசாரணை என்பன நடந்துகொண்டே இருக்கின்றன என முன்னாள் போராளிகள் பிரதமர் ரணிலிடம் எடுத்துக் கூறியிருந்தனர்.

முன்னாள் போராளிகளின் கஷ்டங்கள் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எந்தளவு தூரம் நடவடிக்கை எடுப்பார் என்பதற்கு அப்பால், முன்னாள் போராளிகளின் எதிர்கால வாழ்வு தொடர்பான ஆக்கப் பூர்வமான திட்டங்களை தமிழ் அரசியல் தலைமைகள் பிரதமர் மற்றும் ஜனாதிபதியிடம் முன் மொழிவாக வைக்க வேண்டும். 

அதேநேரம் முன்னாள் போராளிகள் எதிர் கொள்கின்ற பிரச்சினை என்பதில், இராணுவப் புலனாய் வாளர்களின் பின்தொடர்கை என்பது மிகவும் அச்சம் தருவதாகும்.இத்தகைய அச்சுறுத்தல்களின் மத்தியில் சாதாரண வாழ்வை நடத்துவதென்பது கடினமான காரியம். எனவே இத்தகைய அச்சுறுத்தல்கள் முற்று முழுதாக நீக்கப்படவேண்டும். 

இது விடயத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் காத்திரமான நடவடிக்கை எடுப்பது அவசியம். வன்னிப் பெருநிலப்பரப்பில் உயிரிழந்தவர்கள், காணாமல் போனவர்கள் என்ற துன்பம் ஒரு புறம். இதற்கு மேலாக, முன்னாள் போராளிகள் நிம்மதியாக வாழ முடியாத அளவில் படைத்தரப்பின் கெடுபிடி தொடர்ந்து கொண்டிருக்கின்றது.

இராணுவத்தின் கெடுபிடி தொடருமாயின் அது உயிர் அச்சுறுத்தலாக அமையும். அத்தகைய அச்சுறுத்தல் உளப்பாதிப்பை ஏற்படுத்துவதுடன் இயல்பு வாழ்கையை பெருமளவில் பாதிக்கும். எனவே முன்னாள் போராளிகள் மீது மனிதாபிமானத்துடன் செயற்படுவது அனைவரதும் கடமையாகும். 

எனினும் சமகால தமிழ் அரசியல் போக்கு முன்னாள் போராளிகள் மற்றும் மாவீரர் குடும்பங்களை மறந்ததாக அல்லது மறப்பதாக இருப்பதைக் காண முடிகிறது.  இத்தகைய நிலைமை தமிழினத்தின் எதிர்கால ஆரோக்கியத்திற்கு அவ்வளவு நல்லதல்ல என்பதால், முன்னாள் போராளிகளின் இயல்பு வாழ்வை உறுதி செய்வது காலத்தின் கட்டாய தேவையாகும்.

இவை யாவற்றுக்கும் மேலாக போரினால் பாதிப்படைந்து அங்கவீனமாக அல்லது இயங்கமுடியாமல் இருக்கின்றவர்களுக்கும் விசேட நிவாரணத்திட்டம் அமுல்படுத்தப்படவேண்டும். இந்தத்திட்டம் அவர்களின் சீவியகாலம் முழுமைக்கும் உதவுவதாக இருப்பது அவசியம்.  வன்னிப் பெருநிலப்பரப்பில் நடந்த மிக மோசமான யுத்தத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் உளரீதியில் மட்டுமன்றி பொருளாதார ரீதியாகவும் பெரும் கஷ்டங்களை அனுபவித்து வருகின்றன.

எனவே, இத்தகைய குடும்பங்களின் நாளாந்த சீவனோபாயம் பற்றி கவனம் செலுத்துவது அவசியம். புதிய ஆட்சி என்பது தனித்து இனப்பிரச்சினைக்கான தீர்வுபற்றி சிந்திப்பதாக இருக்காமல், போரினால் பாதிப்படைந்த மக்களின் நாளாந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதாகவும் இருக்க வேண்டும். அப்போது தான் தமிழ் மக்கள் எதிர் கொள்கின்ற அடிப்படைப் பிரச்சினைகள் தீர்க்கப்படும்.

அடிப்படையில் தமிழ் மக்கள் தனியன்களாக, குடும்பங்களாக எதிர்கொள்கின்ற பிரச்சினைகளை நடந்து முடிந்த போர் கடினப்படுத்தியுள்ளதால் இத்தகைய பிரச்சினைக்கு உடனடித்தீர்வு காண்பது அதி அத்தியாவசியமாகின்றது.