Breaking News

செப்ரெம்பரில் பிரச்சினையை எதிர்கொள்ளப் போவது ஜோன் கெரியா- மைத்திரியா?

தமது நிகழ்ச்சி நிரலின் பிரகாரம் பணியாற்றுவதன் மூலம் ஜோன் கெரியை தம் பக்கம் கவர்ந்திழுக்க முடியும் என ராஜபக்சக்கள் கருதிய போதிலும், கெரி தனது நிகழ்ச்சி நிரலுக்கேற்ப ராஜபக்சக்களை செயற்பட வைக்க முயன்றார். அதன் விளைவு என்ன?

கடந்த ஜனவரி 08ம் நாள் இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் முடிந்த பின்னர், அன்றிரவு அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி, இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு தொலைபேசி மூலம் அழைப்பு ஏற்படுத்தியிருந்தார். மகிந்த தேர்தலில் தோற்கடிக்கப்பட்டால் அவர் தனது ஆட்சியை சுமூகமாக மைத்திரியிடம் ஒப்படைப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளாரா என கெரி, மகிந்தவிடம் தொலைபேசியில் வினவியிருந்தார்.

வாக்கு எண்ணும் பணி தொடர்வதாகவும், தான் வெற்றி பெறுவேன் என நம்புவதாகவும் தனது வெற்றியின் பின்னர் கெரியை இலங்கைக்கு அழைக்க விரும்புவதாகவும் மகிந்த தெரிவித்திருந்தார். மகிந்த ஆட்சிக்காலத்தில் இலங்கையின் வெளிவிவகார அமைச்சராகக் கடமையாற்றிய பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், கெரியிடம் இலங்கைக்கு வருமாறு ஏற்கனவே அழைப்பு விடுத்திருந்தமை தொடர்பாகவும் தொலைபேசி உரையாடலின் போது கெரிக்கு நினைவுபடுத்தினார் மகிந்த.

அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரியுடன் தொலைபேசியில் உரையாடி முடித்த பின்னர், ‘ஜோன் கெரி மிகவும் நல்ல மனிதர் எனவும் அனைத்துலக சமூகத்தின் நெருக்கடிகளிலிருந்து இலங்கையை விடுவிப்பதற்கு கெரியுடன் நெருக்கிப் பணியாற்றுவேன் எனத் தான் நம்பிக்கை கொண்டுள்ளதாகவும்’ மகிந்த ராஜபக்ச தனது நெருங்கிய விசுவாசி ஒருவரிடம் தெரிவித்திருந்தார்.

இவ்வாறான ஒரு மகிழ்ச்சியான மனநிலையில் தனது எதிர்கால ஆட்சி தொடர்பாகத் திட்டமிட்டிருந்த மகிந்த தேர்தல் பெறுபேறுகள் வெளியிடப்பட்ட போது தான் தோல்வியடைந்து விட்டதை உணர்ந்தார். தற்போது இலங்கையில் புதிய ஜனாதிபதி பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் ஜோன் கெரி இலங்கைக்கான தனது உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.

1972 இற்குப் பின்னர் இலங்கைக்கு வருகை தந்திருந்த அமெரிக்காவின் முதலாவது இராஜாங்கச் செயலர் கொலின் பவல் ஆவார். இவர் 2005ல் இலங்கைக்கு வருகை தந்திருந்தார். இலங்கையில் ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களைப் பார்வையிட்டு உதவிகளை வழங்குவதற்காகவே கொலின் பவல் இலங்கைக்கான தனது சுற்றுப்பயணத்தை மேற்கொண்டிருந்தார். அக்காலப்பகுதியில் சந்திரிகா குமாரதுங்க சிறிலங்காவின் அதிபராக இருந்தார்.

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் காலப்பகுதியில் அமெரிக்க அதிகாரிகள் பெருமளவில் இலங்கைக்குப் பயணித்திருந்தனர். இதன்பின்னர் மீண்டும் 2002ல் ரணில் விக்கிரமசிங்க இலங்கைப் பிரதமராகக் கடமையாற்றிய காலப்பகுதியில் பல அமெரிக்க உயர் மட்டப் பிரதிநிதிகள் இலங்கைக்கு  வருகை தந்திருந்தனர்.

2005ல், அமெரிக்க ஜனாதிபதியாக கடமையாற்றிய ஜோர்ஜ் புஷ் தனக்கு முன்னர் ஜனாதிபதியாக இருந்த பில் கிளின்ரனை சிறப்புத் தூதுவராக இலங்கைக்கு அனுப்பியிருந்தார்.

அமெரிக்கப் பிரதிநிதிகளின் இலங்கைக்கான சுற்றுப்பயணங்கள், இலங்கைச் சூழலானது அமெரிக்காவுக்கு உகந்ததாக இருக்கின்ற சந்தர்ப்பங்களில் இலங்கையுடன் தனது உறவை மேலும் பலப்படுத்திக் கொள்வதில் அமெரிக்கா ஈடுபாடு காட்டியுள்ளது என்பதைத் தெளிவாகச் சுட்டிக்காட்டுகிறது. மகிந்த தனது ஆட்சிக்காலத்தில் அமெரிக்காவுடன் வித்தியாசமான நிலைப்பாட்டைக் கைக்கொண்டார். இவர் சீனாவுக்கு ஆதரவான, அமெரிக்காவுக்கு எதிரான ஒரு ஆட்சியாளராகத் தன்னை மாற்றிக் கொண்டார்.

எனினும், இலங்கையானது சீன ஆதரவு நாடாக இருந்த போதிலும், அமெரிக்கா இலங்கைத் தீவு மீதான தனது நலனை இழக்கவில்லை. சீனா, இலங்கையுடன் மிகவும் நெருக்கமான உறவைப் பேணியபோது அமெரிக்கா இதனை மிகவும் உன்னிப்பாக அவதானித்தது.

அமெரிக்காவின் முன்னாள் இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்ரன் கொழும்பிற்கு வருகை தராது, இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு தமிழ்நாட்டு முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா ஜெயராமுடன் இலங்கையில் நிலவிய இனப்பிரச்சினை தொடர்பாகப் பேச்சுக்களை மேற்கொண்டிருந்ததானது இலங்கை தொடர்பான அமெரிக்காவின் வேறுபட்ட அணுகுமுறையைக் காண்பிக்கிறது.

அமெரிக்காவின் தற்போதைய ஜனாதிபதி பராக் ஒபாமா இரண்டு தடவைகள் இந்தியாவுக்கான தனது அரச முறைப் பயணத்தை மேற்கொண்டதுடன், இந்தியத் தலைவர்களுடன் தலைநகர் புதுடில்லியில் வைத்து இலங்கைப் பிரச்சினை தொடர்பாகக் கலந்துரையாடியிருந்தார்.

ஜோன் கெரி அமெரிக்க இராஜாங்கச் செயலராகப் பதவியேற்ற பின்னர் இந்தியாவுக்கான தனது பயணத்தை மேற்கொண்டிருந்தார். ஆனால் இவர் இலங்கைக்கு வருகை தரவில்லை. ஜோன் கெரி அமெரிக்காவின் இராஜாங்கச் செயலராகப் பொறுப்பேற்பதற்கு முன்னரே இலங்கை தொடர்பில் தனது ஈடுபாட்டைக் காண்பிக்கத் தொடங்கியிருந்தார்.

அமெரிக்க செனற்றின் வெளியுறவுகளுக்கான ஆணையகத்தின் தலைவராக ஜோன் கெரி பதவி வகித்த போது, இவரால் தயாரிக்கப்பட்ட அறிக்கை ஒன்றில் இலங்கையின் முக்கியத்துவம் தொடர்பாக கோடிட்டுக் காண்பித்திருந்தார்.

2009ல் தமிழீழ விடுதலைப் புலிகளின் பயங்கரவாத யுத்தம் முடிவிற்கு வந்த பின்னர் சிறிலங்காவில் எவ்வாறான நிலைப்பாடு தோன்றியது என்பது இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ‘இலங்கையை ‘இழப்பதற்கு’ அமெரிக்கா வழிவகுக்க முடியாது. அதாவது இலங்கை மீதான தனது கொள்கையை அமெரிக்கா மாற்றியமைக்க வேண்டும் என்பது இதன் கருத்தல்ல. அல்லது இலங்கையின் அரசியல் மற்றும் மனிதாபிமான மீறல்கள் குறித்து உண்மையான அக்கறை காண்பிக்கக் கூடாது என்பது இதன் கருத்தல்ல.

எமது உதவிகளை இலங்கைக்கு வழங்கி இலங்கையுடன் அமெரிக்காவும் இதேபோன்று அமெரிக்காவுடன் இலங்கையும் உறவுகளை விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கைகளைக் கொண்ட புதியதொரு அணுகுமுறையை அமெரிக்கா வரையறுக்க வேண்டும். அமெரிக்காவின் முதலீடானது பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் உறவுநிலையின் பாதுகாப்புப் பொறிமுறைகள் போன்றவற்றை அமெரிக்காவின் மூலோபாயத்தில் இணைத்துக் கொள்ளவேண்டும். இவ்வாறான அணுகுமுறையானது மிகவும் தேவையான அரசியல் சீர்திருத்தங்களை மிக வேகமாக ஊக்கப்படுத்த உதவும்.

இவ்வாறான அரசியல் சீர்திருத்தமானது இந்திய மாக்கடலில் அமெரிக்க மூலோபாய நலன்களை நீண்டகாலத்திற்குத் தக்கவைத்திருப்பதற்கு உதவும். அமெரிக்க மூலோபாயமானது தமிழ் மக்கள் அதிகம் வாழும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மட்டுமல்ல இலங்கையின் சிங்களப் பகுதிகளிலும் முதலீடு செய்யப்பட வேண்டும்’ என ஜோன் கெரி தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியிருந்தார்.

கெரியின் அறிக்கையை நோக்கும்போதும், ஜோன் கெரி அமெரிக்க இராஜாங்கச் செயலராகப் பதவியேற்ற பின்னர் இவர் கைக்கொண் நடைமுறைகளும் இலங்கையின் முன்னாள் அரசாங்கம் தன்னால் அமெரிக்காவுடன் இணைந்து சாதகமாகப் பணியாற்ற முடியும் என்கின்ற உந்துதலை வழங்கியிருந்தது. எனினும், அது நடைபெறவில்லை.

ராஜபக்சாக்கள் தொடர்பில் அமெரிக்காவின் வெள்ளை மாளிகை கடுமையான கோட்பாட்டை வரையறுத்த அதேவேளையில், இவர்களை மூலோபாய ரீதியில் கட்டுப்படுத்துவதற்காக ஜோன் கெரி, ராஜபக்சக்கள் மீது மென்கோட்பாட்டைக் கடைப்பிடித்தார். கெரியின் இத்தகைய கோட்பாடு நன்மை அளித்தது. தமது நிகழ்ச்சி நிரலின் பிரகாரம் பணியாற்றுவதன் மூலம் ஜோன் கெரியை தம் பக்கம் கவர்ந்திழுக்க முடியும் என ராஜபக்சக்கள் கருதிய போதிலும், கெரி தனது நிகழ்ச்சி நிரலுக்கேற்ப ராஜபக்சக்களை செயற்பட வைக்க முயன்றார்.

கெரி மிகவும் கம்பீரமானவர். கெரியின் நிகழ்ச்சி நிரல் வெற்றியளித்தமை உறுதிசெய்யப்பட்ட பின்னர், இந்திய மாக்கடலில் சீனாவின் செல்வாக்குப் பலவீனமுற்றது. இதன்மூலம் இந்தியா வெற்றியையும் நலனையும் பெற்றது. இலங்கையில் நேர்மையானதும் நீதியானதுமான தேர்தலை நடத்துவதற்கு ராஜபக்சக்களை சம்மதிக்க வைப்பதில் ஜோன் கெரி மிகப் பெரிய வெற்றி பெற்றார். தாங்கள் முட்டாள்கள் என தற்போது ராஜபக்சக்கள் உணரமுடியும்.

மகிந்த ஜனாதிபதி தேர்தலில் தோல்வியுற்ற போதிலும் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் மகிந்தவை விட்டு விலகியுள்ள போதிலும், இவரது சகோதரரும் முன்னாள் பாதுகாப்புச் செயலருமான கோத்தபாயவுடன் அமெரிக்கத் தூதரகம் தொடர்ந்தும் தொடர்பைப் பேணிவருவதாகக் கூறப்படுகிறது.

கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் உயர் அதிகாரிகள் மகிந்த தேர்தலில் தோல்வியுற்ற பின்னர், கோத்தபாயவைச் சந்தித்து உரையாடியதாகக் கூறப்படுகிறது. சனிக்கிழமை அன்று கொழும்பிற்கு வரும் கெரி மகிந்தவைச் சந்திப்பாரா என்பது தொடர்பாக, எவ்விதத்திலும் சுட்டிக்காட்டப்படவில்லை.

மைத்திரியிடம் கெரி எதனை வழங்கவுள்ளார் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்பதில் ஆர்வமாக உள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் இலங்கை தொடர்பான போர்க்குற்ற அறிக்கையை ஐ.நா மனித உரிமைகள் ஆணையம் கையளித்திருக்க வேண்டும். இதனை செப்ரெம்பர் மாதம் வரை தாமதப்படுத்துவதற்கு அனுமதிக்குமாறு அமெரிக்கா, ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்திடம் கோரியது.

இந்த அறிக்கை செப்ரெம்பர் மாதத்தில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கையளிக்கப்படாவிட்டால், ஜோன் கெரி பிரச்சினைக்கு முகங்கொடுக்க வேண்டியேற்படும். போர்க்குற்றம் தொடர்பான அறிக்கையை செப்ரெம்பர் மாதம் வெளியிடப்பட்டால், மைத்திரி பிரச்சினைக்கு முகங்கொடுக்க வேண்டியேற்படும்.

-நித்தியபாரதி