Breaking News

புதிய முறைமையின் கீழேயே அடுத்த தேர்தல் – அடம்பிடிக்கிறது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி

நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை 255 ஆக அதிகரிக்கும், தேர்தல் முறை மாற்றம் குறித்து புதிய யோசனை ஒன்றை முன்வைத்துள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, புதிய தேர்தல் முறைமையின் கீழேயே அடுத்த நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளது.

கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில், இதுதொடர்பாக கருத்து வெளியிட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலர் சுசில் பிரேம ஜெயந்த, “20வது அரசியலமைப்புத் திருத்தத்தை நிறைவேற்றத் தாமதம் ஏற்பட்டாலும், புதிய தேர்தல் முறைமையின் கீழேயே நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படும்.

விரைவிலேயே 20வது திருத்தம் நிறைவேற்றப்படும் என்று நம்புகிறோம். 255 உறுப்பினர்களைக் கொண்டதாக புதிய நாடாளுமன்றத்தைத் தெரிவு செய்யும் யோசனையை முன்வைத்துள்ளோம். இதன்படி, 165 உறுப்பினர்கள் தொகுதிவாரியாகவும், 66 உறுப்பினர்கள் மாவட்ட ரீதியான விகிதாசார முறையிலும், 24 உறுப்பினர்கள் தேசியப் பட்டியல் மூலமாகவும் தெரிவு செய்யப்படுவர்.

இது தொடர்பான பத்திரம் தேர்தல் ஆணையாளரிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளது. 20வது திருத்தச்சட்டம் நிறைவேற்றப்பட்டு மூன்று மாதங்களுக்குள் தொகுதிகளை வரையறுத்து தேர்தலை நடத்த முடியும்” என்றும் அவர் தெரிவித்தார்.