Breaking News

வெள்ளைவானின் பிதாமகன் கோதாபாய – மேர்வின் சில்வா (நேர்காணல்)

களனி பகுதி மிக மோசமான பகுதியாக மாறுவதற்கு
பிரதான காரணமாக பசில் ராஜபக்ஷவே இருந்தார். கோதாபயவோ வெள்ளை வானின் பிதாமகனாக செயற்பட்டார். எனது உதவியாளர்கள் மூவரை வெள்ளை வானில் கடத்தியவரும் கோதாபயவே தான் என முன்னாள் அமைச்சரும் எம்.பி. யுமான மேர்வின் சில்வா குற்றம் சாட்டியுள்ளார்.
ராஜபக்‌ஷ குடும்பத்துடன்மிகவும் நெருக்கமாகச் செயற்பட்ட மேர்வின் சில்வா, ‘அததெரண’ தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டி ஒன்றிலேயே இது தொடர்பில் பல இரகசியங்களை வெளியிடடிருக்கின்றார். மகிந்தவின் அடியாள் என வர்ணிக்கப்பட்ட மேர்வினின் இந்தப் பேட்டி கொழும்பு அரசியலல் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.
அததெரண தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியின் விபரம்  வருமாறு;
கேள்வி: இந்நாட்களில் ஏன் மௌனமாக இருக்கின்றீர்கள்? உங்கள் தொடர்பிலான செய்திகளும் தற்போது குறைவாகவே வருகின்றனவே?
மேர்வின்: நான் கதைக்க வேண்டிய நேரத்தில் கதைப்பேன். கடந்த காலங்களில் நான் மௌனமாகவும் அதேவேளை, தேவையான கருத்துகளையும் வெளியிட்டுள்ளேன். யுத்த காலத்தில் ஒரு அடி பின்வாங்கினால் அதுதோற்றதாக அர்த்தப்படாது. அது வெற்றிக்கான தந்திரமாகவே பார்க்கப்படும்.
கேள்வி: அரசாங்கத்திலுள்ள ஒரு பகுதியினர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினையும் மற்றுமொரு பகுதியினர் ஐக்கிய தேசியக் கட்சியையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். நீங்கள் எந்தக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்துகிறீர்கள்?
மேர்வின்: ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியையே நான் பிரதிநிதித்துவப்படுத்துகிறேன். ஆளும் தரப்பில் இருந்தாலும் எதிர்த்தரப்பில் இருந்தாலும் நான் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியையே பிரதிநிதித்துவப்படுத்துவேன்.
கேள்வி: பிரதான கட்சிகள் இரண்டின் இணைப்பில் அமைந்துள்ள தேசிய அரசாங்கம் தொடர்பில் உங்கள் நிலைப்பாடு என்ன?
மேர்வின்: இலங்கையில் உள்ள இரண்டு பிரதான கட்சிகள் இணைந்துள்ளமை நாட்டிற்கு நன்மை பயக்கும். உதாரணமாக உலகத்தில் மிகவும் பலம் பொருந்திய நாடுகளான அமெரிக்காவும் ரஷ்யாவும் இணைந்து கொண்டால் அது உலகத்துக்கே நல்லது.
ஆசியாவில் பலம் பொருந்திய நாடுகளான இந்தியாவும் சீனாவும் இணைந்தால் அது ஆசியாவுக்கே நன்மையாக அமையும். அதேபோல் ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைவது முழு இலங்கைக்கே நன்மை பயக்குமென்பதில் சந்தேகமில்லை.
கேள்வி: நீங்கள் எப்படி ராஜபக்ஷ குடும்பத்துக்கு எதிரியானீர்கள்?
மேர்வின்: நாங்கள் குடும்ப நண்பர்கள். அது மட்டுமல்லாது கிராமவாசிகள். குடிசையிலிருந்து கோபுரமேறினால் நாம் வாழ்ந்த குடிசையை மறந்துவிடக் கூடாது என்பதை நாம் மனதில் வைத்திருக்க வேண்டும். களனிப் பகுதி மிக மோசமான பகுதியாக மாறுவதற்கு பிரதான காரணம் பசில் ராஜபக்ஷதான். அதன் பின்னர் அவர் கம்பஹா மாவட்டத்தையும் இல்லாமல் செய்தார்.
எனது உதவியாளர்களாக இருந்த மூவரை கோதாபய ராஜபக்ஷ வெள்ளை வான் உதவியுடன் கடத்திச் சென்றார். அதுமட்டுமல்லாது இந்த வெள்ளை வான் கடத்தலின் பிதாமகனாகவும் கோதாபய திகழ்ந்தார்.
ராஜபக்ஷவின் குடும்பத்தை கோபுரத்துக்கு கொண்டு செல்வதற்கு எனது குடும்பம் ஆதரவாக இருந்தது. அதனையெல்லாம் மறந்து எனது மகனை கைது செய்தனர். களனியில் இருந்த எனது அதிகாரத்தை ராஜபக்ஷ குடும்பம் இல்லாமல் செய்தது. எனக்கும் ராஜபக்ஷ குடும்பத்துக்கும் எந்தவொரு தனிப்பட்ட குரோதமும் இல்லை. ஆனால் எனக்கும் எனது குடும்பத்துக்கும் இழைக்கப்பட்ட அநீதி குறித்து நான் உண்மையான புகாரொன்றை அளித்தேன்.
கேள்வி: நீங்கள் முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா, மகிந்த ராஜபக்ஷவுடன் நெருக்கமாக அரசியல் செய்த போதிலும் அவர்கள் அதிகாரத்தை விட்டு கீழிறக்கப்பட்ட பின்னர் அவர்களை கடுமையாக விமர்சிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பில் உங்கள் கருத்தென்ன?
மேர்வின்: நான் மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலப் பகுதியில் அவர்களை கடுமையாக விமர்சித்ததாலேயே எனது ஆசனத்தைப் பறித்தனர். எனது மகனைக் கைது செய்தனர். எனக்கு வழங்கப்பட்ட அமைச்சினைப் பறித்தனர். நான் மகிந்த ராஜபக்ஷ என்னும் நபருடன் நெருக்கமாக இருந்தபோது அவரின் சகோதரர்கள் எனக்கு எதிராக மேற்கொண்ட செயற்பாடுகளை பார்த்துக் கொண்டு மகிந்த மௌனமாகவே இருந்தார். மகிந்த ராஜபக்ஷ எனக்கு ஆதரவாக இல்லாமல் போனது என்னை மிகவும் கவலைக்குள்ளாக்கியது.
கேள்வி: கடந்த ஜனாதிபதித் தேர்தலில் நீங்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளித்தீர்களா?
பதில்: ஆம். நான் உத்தியோகபூர்வமாகவே ஆதரவு வழங்கினேன். களனியில் நான் மைத்திரிபால சிறிசேனவுக்காக பிரசாரம் செய்தேன். அதனால்தான் அவர் அப்பகுதியில் வெற்றிபெற்றார்.
கேள்வி: ஏன் நீங்கள் தேர்தல் காலப்பகுதியில் உங்களின் ஆதரவை வெளிப்படையாக தெரிவிக்கவில்லை?
பதில்: எனது மகன் கைது செய்யப்பட்டிருந்ததால் நான் நேரடியாக, வெளிப்படையாக எனது ஆதரவினை வெளிப்படுத்த முடியவில்லை.
இரவு களியாட்ட விடுதியில் எனது மகனை தாக்குவதற்காக வெள்ளைக்காரனை ஏற்பாடு செய்தது கோதாபய ராஜபக்ஷவே. அடித்த வெள்ளைக்காரனை வெளியே அனுப்பிவிட்டு எனது மகனைக் கைது செய்யுமாறு ஆணை பிறப்பித்ததே கோதாபய ராஜபக்ஷதான். இந்த வழக்குடன் தொடர்புபட்ட பொலிஸார் இது தொடர்பான தகவல்களை தெரிவித்தனர். இந்நிலையில் வெளிப்படையாக நான் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளித்திருந்தால் நானும் வெள்ளை வானில் கடத்தப்பட்டிருப்பேன்.
கேள்வி: ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் உள்ள சிலர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை பிரதமராக கொண்டு வருவதற்கு முயற்சிக்கின்றனர். இது தொடர்பில் உங்கள் கருத்தென்ன?
பதில்: முன்னாள் ஜனாதிபதி தனது பதவிக்காலம் முடிவடைவதற்கு 2 வருடங்கள் இருக்கின்ற நிலையில், தேர்தலை நடத்தவேண்டும் என்ற தீர்மானத்தை தன்னிச்சையாக மேற்கொண்டார். தற்போது மகிந்தவுக்கு ஆதரவளிக்கும் கூட்டம் அன்றே அவருக்கு ‘தேர்தலை நடத்தவேண்டாம்’ என அறிவுறுத்தியிருக்கலாம். மக்களால் மகிந்த தோற்கடிக்கப்படும் வரை இந்தக் கூட்டம் மௌனமாகவே இருந்துவந்தது.
அத்துடன் ஜனாதிபதியாக இருந்த மகிந்த ராஜபக்ஷ தனது தோல்வியை தானே தேடிக்கொண்டார். அதுமட்டுமல்லாது நாட்டின் அதியுச்ச பதவியான ஜனாதிபதி என்னும் பதவியை வகித்துவிட்டு ஏன் மீண்டும் இரண்டாம் நிலைக்குப் போட்டியிட வேண்டும்? பதவியின் மீதுள்ள ஆசையால் மகிந்தவைச் சுற்றியுள்ள விஷமிகள் அவரை மீண்டும் பிரதமராக்க முயற்சிக்கின்றனர்.
கேள்வி: உங்கள் எதிர்கால அரசியல் வாழ்க்கை எவ்வாறு அமையும்?
பதில்: மைத்திரிபால சிறிசேன தலைமையில் நான் தொடர்ந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்துவேன். அத்துடன் இந்த அரசாங்கத்துக்கு நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகளினது ஆதரவு காணப்படுகிறது. மக்களுக்கான நல்லாட்சியை ஏற்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட தேசிய அரசாங்கத்துக்கு எதிராக செயற்படுவது இந்த நாட்டுக்கு இழைக்கும் துரோகமாகும்.
கேள்வி: இந்த தேசிய அரசாங்கத்தில் ஏதேனும் அமைச்சுப் பதவிக்கான அழைப்பு விடுக்கப்பட்டதா?
பதில்: இல்லை. எனக்கு எந்த அழைப்பும் விடுக்கப்படவில்லை. எனக்கு ‘பதவி வேண்டும்’ என்ற வியாதி ஏதும் கிடையாது. எனது பிறப்புச் சான்றிதழில் இனம், மதம் மற்றும் எனது தாய், தந்தையின் விபரங்கள் மட்டுமே உள்ளடங்கியுள்ளன. அமைச்சுப் பதவிகள் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. அமைச்சுப் பதவி கிடைத்தவர்களுக்கு நான் எனது வாழ்த்துகளை தெரிவிப்பதுடன் எனது ஆதரவினையும் வழங்குவேன்.