வேளாண் பொறியாளர் தற்கொலை வழக்கு! அக்ரி கிருஷ்ணமூர்த்தி கைது
வேளாண் அதிகாரி முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கில் முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி இன்று காலை கைது செய்யப்பட்டார். இரவு முழுவதும் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணைக்குப் பிறகு இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக ச.பிசிஐடி ஐ.ஜி மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்தார். விசாரணை முடிந்த அவர், நெல்லைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார்.
வேளாண் துறை செயற்பொறியாளர் முத்துகுமாரசாமி தற்கொலை வழக்கு தொடர்பாக நேரில் ஆஜராகும்படி, முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு சிபிசிஐடி காவல்துறையினர் சம்மன் அனுப்பி இருந்தனர்.
இந்நிலையில், நேற்றிரவு 10 மணியளவில் சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு அக்ரி கிருஷ்ணமூர்த்தி வந்தார். வேளாண் பொறியாளர், முத்துகுமாரசாமி தற்கொலை குறித்து பல்வேறு கேள்விகள் எழுப்பியதாகத் தெரிகிறது.
ஓட்டுநர்கள் பணி நியமனம் தொடர்பாக, செயற்பொறியாளர் முத்துகுமாரசாமிக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டதாக கூறப்படுவது குறித்தும் அக்ரி கிருஷ்ணமூர்த்தியிடம் சிபிசிஐடி போலீசார் விசாரித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.








