Breaking News

என்னையும், குடும்பத்தினரையும் பழிவாங்குகின்றது அரசு! - குற்றஞ்சாட்டுகின்றார் மஹிந்த

அரசு தனது குடும்பத்தினருக்கு எதிரான அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ ஏ.எவ்.பி. செய்திச் சேவைக்குத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், அரசிடம் ஆதாரங்கள் இல்லை. அவர்கள் கண்மூடித்தனமான ஆதாரங்களை, குற்றச்சாட்டுகளை எம் மீது முன்வைக்கின்றனர். இது அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையாகும். நானோ அல்லது எனது குடும்பத்தைச் சேர்ந்தவர்களோ பிழையான வழியில் பணம் சேர்க்கவில்லை. 

முதலில் அவர்கள் என்னிடம் சுவிஸ் வங்கிக்கணக்குகள் உள்ளன என்று தெரிவித்தனர். பின்னர் டுபாயில் இருப்பதாகத் தெரிவித்தனர். அந்தப் பணத்தைக் காண்பியுங்கள். ஆதாரங்கள் எங்கே? டுபாயில் எனக்கு ஹோட்டலொன்று இருப்பதாகத் தெரிவித்தனர். அதன் பின்னர் இலங்கையில் உள்ள அனைத்து ஹோட்டல்களும் என்னுடையது என்றும், எனது சகோதரர்களுடையது என்றும் குறிப்பிட்டனர். சீனாவுடன் நெருக்கமில்லை நான் ஒருபோதும் சீனாவுக்குச் சார்பாக செயற்பட்டதில்லை. 

இலங்கையின் நலன்களை மனதில் வைத்தே செயற்பட்டேன். அனைத்துப் பாரிய அபிவிருத்தி திட்டங்களையும் முதலில் இந்தியாவுக்கே வழங்கினேன். ஆனால், அவர்கள் அதனை ஏற்கவில்லை. ஜனாதிபதித் தேர்தலை இரண்டு வருடங்களுக்கு முன்னரே நடத்தியது மிகப்பெரும் தவறு. இதற்காக நான் தற்போது வருத்தமடைகின்றேன். குறிப்பிட்ட திகதியில் தேர்தல் நடத்தினால் எனக்கு வெற்றி நிச்சயம் என்று ஜோதிடர் தெரிவித்தார். 

நான் சகல ஜோதிடர்களிலும் தற்போது நம்பிக்கையை இழந்துவிட்டேன். நான் அரசியலில் இருந்து ஓய்வுபெறவில்லை; ஓய்வெடுக்கின்றேன். புதிய அரசின் கீழ் அரசியல் ஸ்திரமின்மை காணப்படுகின்றது. ஸ்திரத்தன்மையை உறுதிசெய்வதற்காக விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவேண்டும் - என்றார்.