Breaking News

ஊடகவியலாளர்களை வெளியேற்றியனார் யாழ்.அரச அதிபர்

யாழ்.வலிகாமம் வடக்கு மீள்குடி யேற்றம் மற்றும் அண்மையில் மீள்குடியேற்றத்திற்கு அனுமதிக்கப் பட்டுள்ள பகுதிகளில் மக்களுடைய தேவைகள் தொடர்பாக கண்டறிவதற்கான கூட்டத்தில் செய்தி சேகரிப்பதற்கு யாழ்.ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மீள்குடியேற்ற அமைச்சர் மற்றும் அமைச்சு செயலாளர் ஆகியோர் ஒருவருக்கு ஒருவர் மறுபட்ட கருத்துக்களை கூறி ஊடகவியலாளர்களை கூட்டம் நடைபெற்ற மண்டபத்திலிருந்து வலிந்து வெளியேற்றிய சம்பவம் இன்றைய தினம் நடைபெற்றுள்ளது.

இன்றைய தினம் யாழ்.மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் பிற்பகல் 2.30 மணியளவில் மேற்படி கூட்டம் நடைபெற்றிருந்தது. கூட்டத்திற்கு முன்னதாகவே, ஊடகவியலாளர்களை சபையிலிருந்து வெளியேற்ற வேண்டும் என யாழ்.அரசாங்க அதிபர் என். வேதநாயன் மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளரிடம் கூறினார்.

இந்நிலையில் கூட்டம் ஆரம்பித்தவுடன் அரசாங்க அதிபர் ஒலிவாங்கியில் ஊடகவியலாளர்களை வெளியேறுமாறு அறிவித்தார்.

இதன் பின்னர் அமைச்சர் கூறுகையில்,

இந்தக் கூட்டம் மீள்குடியேற்றம் தொடர்பாகவும், மீள்குடியேறிய மக்களின் தேவைகள் தொடர்பாக கண்டறிவதற்குமானது என கூறியிருந்தார். பின்னர் மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் ஒலிவாங்கியை வாங்கி இந்தக் கூட்டம் ஒரு அதிகாரிகளுக்கிடையிலான கூட்டம். இரகசியமான கூட்டம் என கூறியதுடன் சபையிலிருந்து வெளியேறுமாறு கூறினார்.

இதனையடுத்து எதற்காக வெளியேறுமாறு பணிக்கப்படுகின்றது? அமைச்சர் சொல்வது சரியா? அமைச்சு செயலாளர் சொல்வது சரியா? என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், அமைச்சர் டீ.எம்.சுவாமிநாதன் கையை உயர்த்தி கூட்டம் முடிந்தவுடன் சொல்கிறோம் வெளியே நில்லுங்கள் என கூறினார்.

இதனையடுத்து ஊடகவியலாளர்கள் அலுவலகங்களுக்கு திரும்பினர்.

இதேவேளை இன்றைய கூட்டத்திற்கு முன்னதாக உணவு உண்ணும் நேரத்தில் இந்த ஊடகவியலாளர்களே, நீங்கள் இராணுவத்துடன் இணைந்து இருக்கவேண்டும் என நீங்கள் கூறிய விடயத்தை பெரிதுபடுத்தியவர்கள் என அடையாளப்படுத்திய அரசாங்க அதிபர்,

நாங்கள் ஊடகவியலாளர்களை கலகம் விளைவிப்பவர்கள் என்பதால் மாவட்டச் செயலகத்திற்குள் விடுவதில்லை. எனவும் அமைச்சு செயலாளருக்கு போதனை வழங்கியதாக மாவட்டச் செயலக பணியாளர்கள் சிலர் ஊடகவியலாளர்களுக்கு கூறியிருக்கின்றனர்.