Breaking News

மகிந்தவிடம் மண்டியிடுகிறார் மைத்திரி? – நிமால் மூலம் முடிவை அறிவித்தார்

பிரதமர் வேட்பாளராகப் போட்டியிட இடமளிப்பதா என்பது தொடர்பான தமது முடிவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான நிமால் சிறிபால டி சில்வா மூலம் மகிந்த ராஜபக்சவுக்கு தெரியப்படுத்தியுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

தற்போது சொந்த ஊரான மெதமுலானவில் தங்கியுள்ள மகிந்த ராஜபக்சவை சந்திப்பதற்காக, இன்று காலையில் நிமால் சிறிபால டி சில்வா கொழும்பில் இருந்து புறப்பட்டுச் சென்றிருந்தார். இவர் மைத்திரிபால சிறிசேனவின் முடிவை அதிகாரபூர்வமாக மகிந்த ராஜபக்சவுக்கு நேரில் தெரியப்படுத்துவார் என்று கூறப்படுகிறது.

அதேவேளை, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அல்லது சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளர் பட்டியலில் மகிந்த ராஜபக்ச போட்டியிடுவதற்கு மைத்திரிபால சிறிசேன இறுதியில் இணங்கியுள்ளதாகவும், ஆனால் பிரதமர் வேட்பாளராகப் போட்டியிட அனுமதிக்க மறுத்து விட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

எனினும் அதிகாரபூர்வமான தகவல்கள் ஏதும் இன்னமும் வெளியாகவில்லை.

மைத்திரிபால சிறிசேன தனது முடிவை நேற்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உயர்மட்டத்துக்கு தெரியப்படுத்தியுள்ளார் என்றும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக, மகிந்த ராஜபக்சவுக்கு வேட்பாளர் பட்டியலிலோ, தேசியப்பட்டியலிலோ இடமளிக்க முடியாது என்றும் பிரதமர் வேட்பாளராக அறிவிக்க முடியாது என்றும் மைத்திரிபால சிறிசேன கூறியிருந்தார்.

பின்னர், தேசியப்பட்டியலில் இடமளிக்கலாம் என்று மைத்திரிபால சிறிசேன கூறியதாக தகவல்கள் வெளியாகின.

இந்தநிலையில், தற்போது வேட்பாளர் பட்டியலில் இடமளிக்கலாம் என்று கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.