Breaking News

மஹிந்த பிரதமர் வேட்பாளராக பெயரிடப்பட மாட்டார் - கைவிரித்தார் மைத்திரி!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அல்லது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் பிரதமர் வேட்பாளராக நியமிக்க கட்சித் தலைவர் என்ற ரீதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எவ்வித தீர்மானமும் எடுக்கவில்லை என ஜனாதிபதி ஊடகப் பிரிவு திட்டவட்டமாக அறிவித்துள்ளது. 

இது தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில், 

´நடைபெறவுள்ள தேர்தலுக்கான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி வேட்பாளர்களை தெரிவு செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.  அனைத்து மாவட்டங்களுக்குமான வேட்பாளர்களை தெரிவு செய்யும் நடவடிக்கை இந்த வெள்ளிக்கிழமை 3ம் திகதி நிறைவுக்கு வருகிறது. 

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அலுவலகத்தில் தற்போது வேட்பு மனு வழங்க நேர்முகப் பரீட்சை இடம்பெற்று வரும் நிலையில் ஸ்ரீலங்கா சுமந்திர கட்சி கூட்டணியில் போட்டியிடும் எந்தவொரு வேட்பாளரும் பிரதமர் வேட்பாளராக நியமிக்கப்பட மாட்டார்கள். பிரதமர் வேட்பாளர் குறித்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சித் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எவ்வித இணக்கப்பாடும் ஏற்படுத்திக் கொள்ளவில்லை. 

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தேர்தலில் வெற்றிபெற்றால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் கருத்துக்கு அமைய பிரதமர் தெரிவு செய்யப்படுவார். முன்னாள் ஜனாதிபதியை பிரதமர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ள அல்லது அறிவிப்பது தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்தி கட்சித் தலைவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்பட மாட்டார்.´ 

இவ்வாறு ஜனாதிபதி செயலக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.