தமிழீழ விடுதலைப்புலிகள் அழிக்கப்பட்டமைக்கு காரண கர்த்தாக்களாக இருந்தவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பிலேயே உள்ளனர் என தமிழர் விடுதலை கூட்டணி யாழ் மாவட்ட வேட்பாளர் க.ஜனார்த்தனன் கிளிநொச்சியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் அங்கு தெரிவித்ததாவது
போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் பல்வேறு இயக்கங்கள் உருவாக்கப்பட்டடிருந்தன. அதில் விடுதலைப்புலிகள் அதி உச்ச வளர்ச்சியை பெற்றிருந்தனர். அவ்வாறு வளர்ச்சி பெற்றிருந்த விடுதலை புலிகள் இயக்கத்தை சுட்டு கொன்றவர்களும், காட்டிக்கொடுத்தவர்களும் பலர் இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பில் வேட்பாளராக களமிறங்கியுள்ளனர்.
வெளிநாடுகளிற்கு சென்று தமிழீழ விடுதலை புலிகளை பயங்கரவாதிகளாக குறிப்பிட்டவர்களும், விடுதலை புலிகளை காட்டிக்கொடுத்தும் கொலை செய்ததுமான சக்திகள், தமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்நுழைந்து விடுதலைப்புலிகளுடன் இணைந்து நடந்து கொள்வது போன்று பாசாங்கு செய்து அவர்களின் அழிவிற்கு பிரதான காரணர்களாக இருந்தார்கள்.
அவ்வாறு கூட்டமைப்பில் இருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களினால் முன்னாள் போராளிகளை ஜனநாயக வழிக்கு திரும்பி தேர்தலில் போட்டியிட இடமளிக்கவில்லை.
1987ஆம் ஆண்டு இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் மூலம் கிடைக்கப்பெற்ற வடக்கு கிழக்கு இணைந்த தமிழர் தாயகத்தை இரு வேறு கூறுகளாக பிரிக்கப்பட்ட போது தமிழ் தேசிய கூட்டமைப்பு மௌனம் காத்திருந்தது. தமிழ் மக்கள் நம்பி பாராளுமன்றம் அனுப்பியிருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைதி காத்திருந்தது தமிழ் மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியது.
வடக்கு, கிழக்கு பிரிவின்போது அதன் தாக்கத்தை வெளி உலகிற்கு எடுத்துரைக்காமலும், அதற்கு எதிராக போராட்டங்களை முன்னெடுக்காது அமைதி காத்திருந்தது தமிழ் தேசிய கூட்டமைப்பினரே.இவ்வாறான சூழ்நிலையிலேயே தமிழர் விடுதலை கூட்டணி சார்பில் சட்ட வல்லுனர் வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரனின் கரத்தை பலப்படுத்துவதற்கு ஓய்வு பெற்ற நீதியரசர் விக்னராஜா தலைமையில் நாம் போட்டியிடுகின்றோம் என்றார்.