Breaking News

ஜெனிவாவில் இன்று இலங்கை குறித்த முக்கிய விவாதம் – அமெரிக்க தீர்மானம் ஒருமனதாக நிறைவேறும்?

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், இலங்கை தொடர்பான விவாதம் இன்று இடம்பெறவுள்ளதுடன், அமெரிக்கா முன்வை த்துள்ள தீர்மானம் ஒரு மனதாக ஏற்றுக் கொள்ளப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கையில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பாக ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணை அறிக்கையும், அதற்கான இலங்கை அரசாங்கத்தின் பதிலும், இன்று ஐ.நா மனித உரிமை ஆணையாளரால் அதிகாரபூர்வமாக பேரவையில் சமர்ப்பிக்கப்படும்.

இதையடுத்து, இந்த அறிக்கை மீதான விவாதம் இடம்பெறவுள்ளது.ஜெனிவா நேரப்படி இன்று பிற்பகல் 12 மணி தொடக்கம், பிற்பகல் 3 மணிவரை இந்த விவாதம் இடம்பெறும் என்று பேரவை நிகழ்ச்சி நிரலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேவேளை, இந்த விவாதத்தின் ஒரு கட்டமாக, கடந்த 24ஆம் நாள் அமெரிக்கா உள்ளிட்ட நான்கு நாடுகளால் சமர்ப்பிக்கப்பட்ட, சிறிலங்காவில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை ஊக்குவித்தல் தொடர்பான தீர்மான விரைவு குறித்தும் விவாதிக்கப்படும்.

இந்த தீர்மான வரைவுக்கு, அமெரிக்கா, இலங்கை, பிரித்தானியா, அவுஸ்ரேலியா, மசிடோனியா, மொன்ரெனிக்ரோ ஆகிய நாடுகள் இணை அனுசரணை வழங்கவுள்ளன.

இந்த தீர்மான வரைவு இன்று ஒரு மனதாக – எல்லா நாடுகளின் ஆதரவுடனும் நிறைவேற்றப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளை, இந்த தீர்மான வரைவில் இன்றும் சில திருத்தங்கள் முன்வைக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

அவ்வாறான திருத்தங்கள் முன்வைக்கப்பட்டு, வாக்கெடுப்பு நடத்தப்படும் நிலை ஏற்பட்டால், நாளைய தினம் இந்த தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.