Breaking News

மாணவர்கள் மீது தாக்குதல்- அமைச்சர் தலைமையில் விசாரணைக் குழு

உயர்கல்வி அமைச்சிற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்திய உயர் டிப்ளோமா மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து அமைச்சர் திலக் மாரபனவின் தலைமையில் குழு வொன்று நியமிக்கப்பட்டு நேற்று முதல் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

எச்.என்.டி.ஏ (H.N.D.A) பாடநெறிகளை தரமுயர்த்துமாறு கோரி அனைத்து உயர் தேசிய டிப்ளோமா பாடநெறி மாணவர் ஒன்றியம் ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது.

கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து வோர்ட் பிளேஸ் நோக்கி ஊர்வலமாக சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் அமைச்சிற்குள் நுழைய முற்பட்டனர். இதன் போது பொலிஸார் கண்ணீர்ப் புகை, நீர் பீய்ச்சி தாக்குதல் நடத்தியதோடு பொல்லடியும் மேற்கொண்டனர். இதனால் 12 மாணவர்கள் காயமடைந்தனர்.

இது குறித்து விசாரணை நடத்தி துரிதமாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் திலக் மாரபனவிற்கு பணிப்புரை வழங்கியுள்ளதாகவும் இதற்கேற்ப குறித்த குழு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் அலுவலகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.