Breaking News

நீந்திக்கடந்த நெருப்பாறு – அங்கம் – 18

“வாங்கோ சிவம் உங்களைக் கூப்பிட யோசிக்க நீங்களே வந்திட்டீங்கள்” , என சிவத்தை வரவேற்றார் தளபதி.

“என்னண்ணை செய்ய வேணும்?” எனக் கேட்டான் சிவம்.

“பெரிய தம்பனையை நோக்கி இராணுவம் ஒரு பெரிய முன்னேற்ற முயற்சியைத் தொடங்கியிருக்கிறாங்களாம் எங்கடை கவனத்தை இங்கை திருப்பி எங்களை அங்கை இழுத்துப் போட்டு முள்ளிக்குளத்துக்கை இறங்கி அவங்கள் பழைய இடத்திலை நிலை கொள்ளக் கூடும் எண்டு சிறப்புத் தளபதி எதிர்பார்க்கிறார்.அதாலை எங்கடை பக்கத்தை இறுக்கமாய் வைச்சிருகச் சொல்லி அறிவிச்சிருக்கிறார்”

“அது பிரச்சினை இல்லையண்ணை.. எங்கடை காவலரண்கள் பலமாய் இருக்குது… எங்கடை வேவுப் பொடியளும் விழிப்பாய் இருக்கிறாங்கள்”, என்றான் சிவம்.

“அது தெரியும்.. இப்ப சொல்லும், கிபிரும் குண்டு பொழியிற விதத்தைப் பார்க்க எங்கடை அணி கொஞ்சம் பின் வாங்கித்தான் பிறகு அடிக்கும் போல கிடக்குது. அதாலை நீங்கள் உங்கடை அணியை முள்ளிக்குளத்துக்கை இறக்கி தயார் நிலையிலை நில்லுங்கோ.. இராணுவம் முன்னேறினால் சிறப்புத் தளபதியின்ரை அழைப்பு வரும். நீங்கள் காட்டுக்காலை இறங்கி பக்கவாட்டிலை அடிக்கவேணும்”.

“அது கலக்கிவிடுவமண்ணை!” என்றான் சிவம் அளவற்ற மகிழ்ச்சியுடன். தட்சினாமருதமடு அலைகரையில் இறங்கினால் காட்டுக்குள்ளால் பெரியதம்பனையின் பின்புறம் நோக்கி நகரும் பாதை அவனுக்கு ஏற்கனவே நன்கு பரிச்சயமானதால் அப்போதே அவன் மனம் திட்டங்களை வகுக்க ஆரம்பித்துவிட்டது.

பெரிய தம்பனையில் பொழுது விடிந்த வேளையில் இதுவரை பொழிந்து கொண்டிருந்த எறிகணைகளுக்கும் மேலாக நான்கு கிபிர் விமானங்கள் மாறி மாறி குண்டுகளைப் பொழிய ஆரம்பித்தன. மக்களால் கைவிடப்பட்ட வீடுகள் அனைத்தும் தூள் தூள்களாக நொருங்கிக் கொண்டிருந்தன. எங்கும் கரும்புகை மண்டலம் எழுந்து பரவியது. சிறப்புக் கட்டளைத் தளபதி தானே நேரில் நின்று போராளிகளை நெறிப்படுத்திக் கொண்டிருந்தார்.

மெல்ல மெல்ல எறிகணை வீழ்ச்சி வட்டம் முன் நகர ஆரம்பித்தது. தளபதி உடனடியாகவே வலப்புறமாக ஒரு அணியையும், இடப்புறமாக ஒரு அணியையும் காடுகளுக்குள்ளும் இன்னொரு அணியை நேராகவும் பின் வாங்கும்படி கட்டளையிட்டார். ஒரு சிறு அணி மட்டும் ஓடு பங்கர்களில் தூரத்திற்கு ஒருவராக நின்று முன்னேறி வரும் படையினரை எதிர்கொள்ளத் தயாராகியிருந்தனர்.

படையினர் முன்னேறி நகர ஆரம்பித்த போது போராளிகளின் பீரங்கிகள் குண்டுகளைப் பொழிய ஆரம்பித்தன. படையினர் டாங்கிகளின் பின்னும், கவச வண்டிகளின் பின்னும் மறைப்பு எடுத்துக் கொண்டு முன்னேறிய போதும் போராளிகளின் பீரங்கிக் குண்டுகள் அவற்றின் மேலாய் போய் விழுந்து படையினரைப் பலியெடுத்துக் கொண்டிருந்தன. காட்டுக்குள்ளிருந்து வந்த ஆர்.பி.ஜி ஒன்று டாங்கி ஒன்றின் செயினை அறுத்தது. அது நகர முடியாமல் அப்படியே நின்றுவிட்டது.

ஒரு ஆர்.சி.எல் குண்டு பாய்ந்து வந்து இலக்கு தவறாமல் ஒரு கவச வண்டியின் சுடுகுழலைப் பிரித்தெடுத்தது. மரங்கள், இடிந்த வீடுகள் என்பவற்றினூடாக முன்னேறிய படையினர் எதிர்பாராத இடங்களிலிருந்து வந்த தாக்குதல்களால் இறந்தும் காயப்பட்டும் பெரும் இழப்புக்களைச் சந்தித்தனர். எனினும் படையினர் சிறிது சிறிதாக முன்னேறத்தான் செய்தனர்.

இராணுவம் ஊர்மனையைக் கடந்து காடு சூழ்ந்த பகுதிக்கு வந்த போதுதான் அவர்கள் பெரும் ஆபத்துக்குள் அகப்பட்டுவிட்டதை உணர்ந்தனர். எதிர்ப்பக்கத்திலிருந்தும், இரு புறக் காடுகளிலிருந்தும் கடுமையான தாக்குதல்களை எதிர்கொள்ளவேண்டியிருந்தது.

அதேவேளையில் முன்னேறிய படையினருக்கும் அவர்களின் கட்டளைப் பீடத்துக்குமிடையே போராளிகள் குண்டுகளால் வேலி போட்டுக்கொண்டிருந்தனர். காயப்பட்ட படையினரைப் பின் நகர்த்த முடியாமலும், பின்புறமிருந்து உதவிகளைப் பெற முடியாமலும் முன்னேறி வந்த படையணி திணறியது.

தம்பனையின் பின்புறக் காட்டிற்குள் கட்டளைகளை எதிர்பார்த்துக் காத்துக்கிடந்த சிவத்துக்கும் அவனது அணியினருக்கும் பொறுமை பறிபோய்க்கொண்டிருந்தது.

பீரங்கி ஒலிகளும், வெடியோசைகளும் அவர்களை அறிவித்தலை எதிர்பார்த்துத் துடிக்க வைத்தன. திடீரென சிவத்தின் வோக்கி இயங்க ஆரம்பித்தது.. 

“சிவம்.. சிவம்.. மெயின்” “மெயின்.. மெயின்… சிவம்.. ஓவர்” “ஆறுமுகத்தான் புதுக்குளத்திலை ஓட்டை விழுந்திட்டுது உடனை போய் அடையுங்கோ.. ஓவர்”

“சரியண்ணை.. நாங்கள் செய்யிறம் .. ஓவர்” 

சிவம் வோக்கியின் இயக்கத்தை நிறுத்திவிட்டு தனது அணியை வடக்கு நோக்கி நகர்த்த ஆரம்பித்தான். இரணைஇலுப்பை இராணுவம் முள்ளிக்குளத்தால் நகர்ந்ததால் தங்களுடன் மோத வேண்டிவருமாதலால் அதைத் தவிர்த்து ஆறுமுகத்தான் புதுக்குளத்தில் இறங்கி சின்னத்தம்பனையின் பின்புறமாக தம்பனை நோக்கி வருகிறது என்பதை அவன் புரிந்து கொண்டான்.

அது தங்களுக்கு ஒரு நல்ல சாதகமான நிலைமை என்றே சிவம் கருதினான். சின்னத்தம்பனையின் பின்புறம் மக்கள் நடமாட முடியாத நெருக்கமான முள்ளுக்காடு நிறைந்த பகுதியாகும். ஒரு அறுத்தோடியின் இரு மருங்குமான சிறு பகுதியாலேயே எவரும் போய் வர முடியும். அந்த இடைவெளியில் வைத்து படையினரை மறித்து தாக்கினால் அப்பிடியே அந்த அணியைத் துவம்சம் செய்து விட முடியும் என அவன் நம்பினான். எனவே அவர்கள் நடையைத் துரிதப்படுத்தினர்.

ரூபா அன்று மருத்துவப் பிரிவுக்கு வரும் போது நேரம் பத்துமணியைத் தாண்டிவிட்டது. அவள் மகளிர் அரசியல் பிரிவின் முகாமிலேயே பண்டிவிரிச்சானில் தங்கியிருந்தாள். அதிகாலையில் சண்டை தொடங்கியதும் ஒரு சில போராளிகளை விட மற்றவர்கள் களமுனைக்குப் போய்விட்டனர். 

அருகிலேயே சண்டை நடக்கும் போது அதில் கலந்து கொள்ளமுடியாமல் இருப்பது அவளுக்கு பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது. ஆனால் அதே வேளையில் கணேசை அந்த நிலையில் விட்டுச் செல்வதையும் அவளின் மனம் ஏற்க மறுத்தது. என்ன செய்வதென முடிவெடுக்க முடியாத நிலையில் அவள் தன் படையணி தளபதியுடன் தொடர்பு கொண்டாள். தளபதியோ, “இஞ்சை அப்பிடி ஒரு அவசரமுமில்லை. நீங்கள் நிண்டுபோட்டு ஒரு கிழமையால வாங்கோ, இடையிலை தேவைப்பட்டால் நான் அறிவிக்கிறேன்” என்றுவிட்டு வோக்கியின் இயக்கத்தை நிறுத்திவிட்டாள்.

தளபதியுடன் தொடர்பு எடுப்பத்தில் ஏற்பட்ட தாமதம் காரணமாக கணேசிடம் அவளால் நேரத்துக்கு வரமுடியவில்லை. அவளைக் கண்டதும் போராளி மருத்துவர் எழுந்து அவளருகில் வந்தார்.

“அக்கா.. அவர் கொஞ்சம் குழப்பத்திலை இருக்கிறார். நீங்கள் தான் கொஞ்சம் சமாதானப்படுத்த வேணும்”, என்றான் அவன்.

“குழப்பமோ! என்னது?”, எனக் கேட்டாள் ரூபா.

“காலைமை சண்டைச் சத்தம் கேட்டவுடனை என்னைக் கூப்பிட்டனுப்பினார். களத்திலை சண்டை நடக்க தான் என்னண்டு கட்டில்ல படுத்திருக்கிறதெண்டும், தன்னை உடன முகாமுக்கு அனுப்பச் சொல்லியும் பிடிவாதம் பிடிச்சார். நான் அவரின்ரை உடல் நிலைமை சரியில்லையெண்டும் எழும்பி நடக்கக்கூடாது பெட்றெஸ்ற் எடுக்க வேணுமெண்டும் சொன்னன்”.

ரூபா தவிப்புடன் கேட்டாள், “பிறகு?” “இல்லை நான் போகத்தான் வேணும்.. நான் செற்றிலை இருந்து சண்டையை வழிநடத்துவன் எண்டிட்டு பெட்டிலை இருந்து இறங்கப் போய் விழுந்து போனார்.நல்ல நேரம் நான் பக்கத்திலை நிண்டபடியால நிலத்தில விழாமல் பிடிச்சிட்டன். அவர் உடன மயங்கியிட்டார். ஒரு ஊசி போட்டனான் இனி முழிச்சிடுவார்”

கணேசின் உணர்வு அவன் பற்றிய மதிப்பை மேலும் அவளுள் அதிகரித்த போதும் அவனில் அவள் வைத்திருக்கும் அக்கறை அவளைக் கவலை கொள்ள வைத்தது.

“சரி.. பாப்பம்..”, என்றுவிட்டு அவள் உள்ளே போனாள். கணேஸ் கண்களை மூடியவாறு படுத்திருந்தான். அருகில் சென்ற அவள் மெல்ல அவனின் தலையை வருடியவாறே, “கணேஸ்”, என்றாள்.

அவனின் விழிகள் மெல்லத் திறந்தன. ஒரு மெல்லிய புன்னகை அவனின் முகத்தில் படர்ந்தது. ஆனால் மெல்ல மெல்ல அவனின் புன்னகை மங்கிக் கொண்டு போக முகம் இறுகியது. கண்கள் அகலத் திறந்தன.

“நீங்கள்.. நீங்கள்.. இன்னும் போகேல்லையே?” ரூபா திகைத்துவிட்டாள். அவள் ஒருவித தடுமாற்றத்துடன்..“எங்கை,”, எனக் கேட்டாள்.

“சண்டை நடக்கிற சத்தம் காதிலை விழேல்லையே?” அவள் தயக்கத்துடன், “நீங்கள் இப்பிடி இருக்கையுக்கை என்னெண்டு விட்டிட்டு..”, எனக் கூறி முடிக்குமுன்பே அவன், “நிக்கட்டும்”, என்று அதட்டினான்.

அவன் வார்த்தைகள் குளறி தெளிவில்லாத போதும் அவற்றில் என்றுமில்லாத உறுதி தொனித்தது.

“நானும் நீங்களும் காதலர்களாய் போராட்டத்திலை இணையேல்ல. போராளியளாய்த் தான் காதலிச்சனாங்கள். உங்கடை வீரமும், அர்ப்பண உணர்வும் தான் நான் உங்களை விரும்ப வைச்சது. என்னை ஒரு போராளியாய்த்தான் நீங்கள் என்னை விரும்பினீங்கள். காதல் முக்கியம் தான்! போராட்டம் அதைவிட முக்கியம்” களைப்பு அவனை அதற்கு மேல் பேச விடாமல் தடுத்துவிட்டது.

அவன் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கினான். அவள் கண்கள் கலங்கி கன்னத்தில் கண்ணீர் வடிந்தது,

“நான் அதை மறுக்கேல்ல.. அக்கா தான் ஒரு கிழமை நிண்டிட்டு வரச் சொன்னவா..” என்றாள் ரூபா.

மீண்டும் கணேசின் குரல் உயர்ந்தது. “அவ.. நீங்கள் பாவமெண்டு சொல்லியிருப்பா.. நீங்கள் என்னைக் காதலிக்கிறது உண்மையெண்டால் போங்கோ.. ஓ.. போங்கோ” அவள் பரிதாபமாக அவனின் முகத்தைப் பார்த்தாள்.

பின்பு அவன் கையைப் பிடித்து மெல்ல வருடிவிட்டு எதுவுமே பேசாது ‘விடு விடு வென’ நடந்தாள்.

கணேஸ் மீண்டும் கண்களை மூடிக்கொண்டான்.

-தமிழ்லீடருக்கு அரவிந்தகுமாரன்-

(தொடரும்)

நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 01
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 02
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 03
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 04
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 05
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 06
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 07
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 08
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 09
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 10
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 11
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 12
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 13
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 14
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 15
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 16
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 17