Breaking News

நீந்திக்கடந்த நெருப்பாறு – அங்கம் – 20

வில்லவனின் வித்துடல் முகாமுக்குக் கொண்டுவரப்பட்ட போது “வோக்கி” அருகில் இருந்த தளபதி உடனடியாகவே எழுந்து வந்தார். அருகில் வந்த அவர் எவரிடமும் எதுவுமே பேசாமல்
அவனுக்கு அஞ்சலி செலுத்தினார்.அவர் அவனது குறும்புகளுக்காக அவனுக்கு அடிக்கடி சிறு தண்டனைகள் கொடுத்த போதிலும் அவரும் அவனில் ஒருவித பாசம் வைத்திருந்தார்.

வழக்கமாக “வில்லவன் எங்க?” எனக் கத்தும் அவனின் கிளி கூட அமைதியாய் இருந்தது சிவத்துக்கு பெரும் ஆச்சரியத்தைக் கொடுத்தது. அது ஓரிடத்தில் மிகவும் சோகமாக அமர்ந்திருந்தது. வில்லவனின் வீரச்சாவை அது தனது உள்ளுணர்வால் உணர்ந்து கொண்டுள்ளதாகவே சிவத்துக்கு தோன்றியது.

“சிவம்! அரசியல்த்துறையைக் கூப்பிட்டு வித்துடலைப் பாரம் குடுத்திட்டு மற்ற ஏற்பாடுகளையும் செய்யச் சொல்லுங்கோ”, என்றுவிட்டு தளபதி தனது இடத்திற்குப் போய்விட்டார். தாங்கள் சின்னத்தம்பனைக் காட்டுக்குள் நிகழ்த்திய சாதனையைக் கூடப் பாராட்டும் மன நிலையில் அவர் இல்லையென்பதைச் சிவம் புரிந்து கொண்டான்.

சிறிது நேரத்தில் அரசியல்துறையினர் வந்து வில்லவனின் வித்துடலைப் பாரமெடுத்தனர். அதுவரை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்த கிளி, வித்துடலை வாகனத்தில் ஏற்றுவதற்காகத் தூக்கிய போது, “வில்லவா, வில்லவா!”, எனக் கத்திக் கொண்டு சுற்றிச் சுற்றிப் பறக்க ஆரம்பித்தது.

அரசியல்துறைப் போராளிகள் அதைக் கண்டு வியந்து போயினர். வாகனத்தில் ஏறியதும் அனைவரும் வரிசையாக நின்று அவனுக்கு அஞ்சலி செய்தனர். கிளியும் சிவத்தின் தோளில் வந்து அமைதியாய் அமர்ந்து கொண்டது. அஞ்சலி முடிந்து வாகனம் புறப்பட ஆரம்பித்ததும் கிளி முகாம் வாசல் கேற் தூணில் போய் அமைதியாக இருந்து கொண்டது.

வாகனம் போகும் போது அதையே பார்த்துக் கொண்டிருந்த கிளி அது கண்ணிலிருந்து மறைந்ததும் வானில் பறக்க ஆரம்பித்தது. வந்த காலம் தொட்டு முகாமை விட்டு வெளியே போகாத அந்தக் கிளி எங்கே போகிறது என்பதைச் சிவத்தால் ஊகிக்கவே முடியவில்லை. ஆனால் அதன் பிறகு அந்தக் கிளி முகாமுக்குத் திரும்பவே இல்லை.

பகலில் ஓய்வு கண்டிருந்த சண்டை மாலையில் மீண்டும் உக்கிரமடைந்தது. கிபிர் விமானங்கள் தங்கள் தாக்குதல்களை சின்னப்பண்டிவிரிச்சான் வரை விரிவித்தன. அங்குள்ள மக்கள் ஏற்கனவே மடுவுக்கு இடம்பெயர்ந்து விட்டதால் உயிராபத்துக்கள் தவிர்க்கப்பட்ட போதும் குடியிருப்புக்கள் நொருங்கிக் கொண்டிருந்தன. தம்பனையில் பட்டிமாடுகள் ஏற்கனவே கலைபட்டு பண்டிவிரிச்சான் வீதிகளில் தஞ்சமடைந்திருந்தன. அவையும் மெல்ல மெல்ல தட்சிணாமருதமடு, பாலம்பிட்டி நோக்கி நகரத் தொடங்கிவிட்டன.

நன்றாக இருட்டிய பின்பே சண்டை ஓய்வுக்கு வந்தது. ஆனால் படையினர் தாம் முன்னேறி நிலைகொண்ட இடத்திலிருந்து பின்வாங்கவில்லை. இரவு முழுவதுமே தொடர்ந்து பரா வெளிச்சங்களை அடித்துக் கொண்டிருந்தனர். அன்று மாலை சிறப்புத் தளபதி, பகுதி தளபதியிடம் ஒரு அணியை களமுனைக்கு அனுப்பும்படி கேட்டிருந்தார். சிவம் தலைமையிலான நாற்பது பேர் கொண்ட ஒரு அணியை அனுப்பிவைத்தார் பகுதித் தளபதி.

சிவம் குடாரப்பு தரையிறக்கத்தின் போது சிறப்புக் கட்டளைத் தளபதியின் தலைமையில் பல வீரதீரச் சண்டைகளைச் செய்தவன். அவரது தலைமையிலும் நெறிப்படுத்தலிலும் அவனுக்கு எல்லையற்ற மரியாதையும் விருப்பமும் உண்டு.

மின்னல் வேகத்தில் முடிவெடுக்கும் அவரின் ஆற்றல் கண்டு அவன் பலமுறை அதிசயப்பட்டதுண்டு. அவனைக் கண்டதும், “என்னடாப்பா.. இண்டைக்கு காட்டுக்கை கலக்கவிட்டிட்டாய் போலை?..” என்றார் சிறப்புத் தளபதி ஒரு புன்னகையுடன்.

அவரின் வாயால் பாராட்டுப் பெறுவது சிவத்துக்கு எல்லையற்ற பெருமையாக இருந்தது, அவன் மெல்ல, “எல்லாம் உங்களோட நிக்கேக்க கிடைச்ச அனுபவம் தானண்ணை”, என்றான்.

“அனுபவம் எல்லாருக்கும் தான் கிடைக்குது. அதை அறிவாய் மாற்றி அடுத்த கட்டத்துக்கு நகருறது தான் கெட்டித்தனம். உனக்கு அது இருக்குது.. இனி இந்தச் சண்டையிலையும் நீ அதை நிரூபிக்க வேணும்”,

“சரியண்ணை”, என்றான் சிவம் பெரும் மகிழ்ச்சியுடன்.

சிவத்தின் அணியினருக்கு ஒரு நீண்ட வரிசை கொடுக்கப்பட்டது. அதில் வலது பகுதி அணியும், இடது பகுதி அணியும் காட்டுக்குள் நிறுதப்பட நடுப்பகுதி 50மீற்றர் பின் தள்ளி நிறுத்தப்பட்டது. சிவம் நடுவில் நின்று அணியை வழிநடத்தும் படி கட்டளையிடப்பட்டது. களத்தின் முன் முனையில் நின்ற அத்தனை போராளிகளும் பின்னுக்கு எடுக்கப்படவே இப்போ சிவத்தின் அணி களத்தின் முன் முனை வரிசையாகியது.

இரவு இடையிடையே படையினரின் செல்கள் விழுந்து கொண்டிருந்தன. துப்பாக்கிச் சூடுகளும் கேட்டுக்கொண்டிருந்தன. பரா வெளிச்சம் மட்டும் இரவைப் பகலாக்கிக் கொண்டிருந்தன. இரவு ஏற்கனவே போராளிகள் நின்று போரிட்ட பகுதிக்கும் சிவத்தின் நிலைகளுக்குமிடையே சில அசைவுகள் தெரிவது போன்று சிவத்துக்குப்பட்டது.

ஆனால் பரா வெளிச்சம் வரும் நேரங்களில் பார்த்த போது சிறு பற்றைகளை விட எதுவுமே தெரியவில்லை. எப்படியிருப்பினும் மேலிடத்தின் கட்டளை வரும் வரை எந்தத் தாக்குதலிலும் இறங்கக் கூடாது எனக் கண்டிப்பான உத்தரவு இருந்த படியால் அவனால் எதுவுமே செய்ய முடியவில்லை.

அதிகாலை மூன்று மணியளவில் படையினரின் செல் மாரி ஆரம்பமாகியது. சிவத்தின் அணியினர் நிலை கொண்டிருந்த காப்பரண்கள் நிலமட்டத்தில் தேக்கம் குற்றிகள் போடப்பட்டவையாக இருந்தபடியால் எவ்வித சேதமும் ஏற்படவில்லை. மரக் கொப்புகள் மட்டும் முறிந்து பங்கர்களின் மேல் விழுந்தன. கிழக்கு வெளித்துக்கொண்டிருந்த அதிகாலைப் பொழுதில் செல் மாரி ஓய்ந்தது.

டாங்கிகள் சகிதம் படையினர் முன்னேறும் அறிகுறிகள் தென்பட்டன. ஏற்கனவே போராளிகள் நிலை கொண்டிருந்து பின்வாங்கிவிட்ட காவல் நிலைகள் மீது சரமாரியாக ராங்க் தாக்குதல்களும் துப்பாக்கி வேட்டுக்களும் பொழியப்பட்டன. காவல் நிலைகள் மேல் பீரங்கிக் குண்டுகள் விழுந்து வெடித்தன. சுமார் ஒரு மணி நேரத் தாக்குதலின் பின்பு டாங்கிகள் சகிதம் படையினர் முன்னேற ஆரம்பித்தனர்.

சிவத்துக்கு இன்னும் தாக்குதலுக்கான கட்டளை வராமல் இருப்பது தாங்கமுடியாத தவிப்பாய் இருந்தது. எனினும் அடுத்தடுத்த நிமிடங்களில் கட்டளை வரும் என்ற நம்பிக்கையுடன் காத்திருந்தான். இரு டாங்கிகளும் அதன் பின்னால் காப்பெடுத்து ஓடிவந்த படையினரும் அவனின் கண்களில் தெரிந்தது. சுடுவதற்கு தயார் நிலையில் கட்டளையை எதிர்பார்த்துக் கொண்டிருந்தான். டாங்கிகள் சிவம் இருந்த இடத்தை நெருங்கிவிட்டன. படையினரும் சூட்டெல்லைக்குள் வந்து விட்டனர். 

இன்னும் ஏன் கட்டளை வரவில்லை எனத் தவித்துக் கொண்டிருந்த போது படையினர் நின்ற இடங்களிலெ்லாம் நிலக்கண்ணிகள் வெடித்து அவர்கள் தூக்கி வீசப்பட்டது தெரிந்தது. முன்னால் வந்த டாங்கியின் செயின் நிலக்கண்ணியில் அகப்பட்டு அறுந்து மேலெழுந்து கீழே விழுந்தது. போராளிகளின் எறிகணைகள் எங்கும் விழுந்து பெரும் புகைமண்டலத்தை எழுப்பின. பின்னால் வந்த டாங்கியின் மேல் ஒரு எறிகணை விழுந்து சுடுகுழலைத் தூக்கி எறிந்தது.

படையினர் பலர் இறந்தும், காயப்பட்டும் விழுந்ததையும், ஏனையோர் நிலைகுலைந்து ஓடுவதையும் காண முடிந்தது. போராளிகளின் எறிகணை வீழ்ச்சி வரிசை மெல்ல மெல்ல முன்னகர ஆரம்பித்தது. திடீரென முன்னேறும்படி கட்டளை வந்தது. எறிகணைவீச்சு நின்றுவிடவே புகை மண்டலத்திற்குள்ளால் புகுந்து சிவத்தின் அணியினர் முன்னேற ஆரம்பித்தனர்.

அப்போது தான் முன்னால் வந்த இராணுவ அணியை விட இன்னொன்று முன்வந்து கொண்டிருப்பதை சிவம் அறிந்து கொண்டான். சிவத்தின் அணி மிக நெருக்கமாக முன்னேறி அவர்கள் மேல் தாக்குதலைத் தொடுத்தது. அதே வேளையில் போராளிகளின் எறிகணைகள் துல்லியமாக படையினர் நடுவே விழுந்து வெடித்தன. ஆனால் படையினரின் எறிகணைகளோ சிவத்தின் அணியினருக்குப் பின்புறமாகவே விழுந்து வெடித்தன.

முற்பகல் பதினொரு மணியளவில் படையினர் பின்வாங்க ஆரம்பித்தனர். அதே நேரத்தில் தாக்குதலை மேலும் மூர்க்கமாக நடத்தும்படி சிவத்துக்கு கட்டளை வந்தது. பிற்பகல் இரண்டு மணியளவில் தம்பனை முழுமையாகவே போராளிகளின் கட்டுப்பாட்டில் வந்துவிட்டது.

அப்போது தான் தங்களைப் போல் மேலும் நான்கு அணிகள் சண்டையில் பங்கு கொண்டதை அறிந்து கொண்டான். காவலரண்களில் மட்டும் சில போராளிகளை நிறுத்திவிட்டு ஏனையோரை வெவ்வேறு பாதைகளால் காடுகளுடாகப் பின்வாங்கும்படி கட்டளை வந்தது.

எல்லோரும் சாப்பிட்டு விட்டு ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் போது கண்ணிவெடிப் பிரிவுப் பொறுப்பாளர் செல்வம் சிவத்தின் அருகில் வந்தான்.

“எப்பிடியண்ணை எங்கடை விளையாட்டு?” எனக் கேட்டான் அவன்.

“இண்டைக்கு வெற்றியே உங்களால தானே… சண்டைக்குத் திட்டம் வகுக்கிறதிலை எங்கடை சிறப்புத் தளபதிக்கு நிகர் எவருமில்லை”, என்றான் சிவம்.

“ஓமண்ணை.. எனக்கும் முதல் விளங்கேல்லை.. கண்ணியை விதைச்சுப்போட்டு ஒரேயடியாய்ப் பின்வாங்கப்போறமோ எண்டு தான் நானும் யோசிச்சன்”. “நானும் சாடையாய் அசுமாத்தம் கண்டிட்டு ஆமியெண்டு நினைச்சு சுடத்தான் நினைச்சனான்.

அவர் தன்ரை ஓடர் இல்லாமல் தாக்குதல் நடத்தக் கூடாது எண்டு கண்டிப்பாய் கட்டளையிட்டதாலை தான் விட்டனான். உருமறைப்பிலை வர ஆமியையும் எங்கடை ஆக்களையும் வித்தியாசம் தெரியுமே?”

“அப்பாடா.. தப்பினம்!” என்றான் செல்வம் சிரித்தவாறே! “நீங்கள் தப்பினபடியால் தான் ஆமியாலை தப்ப முடியேல்லை”, என்றுவிட்டு சிவமும் சிரித்தான்.

“அண்ணை.. நாங்கள் பிடிச்ச இடத்திலையிருந்து முற்றாகப் பின்வாங்கியிட்டம். இதிலை ஏதும் திட்டம் இருக்குமெண்டு நினைக்கிறன்”, என்றான் செல்வம்.

“ஓமோம்.. இருக்கும்”, எனச் சிவமும் ஆமோதித்தான்.

-தமிழ்லீடருக்கு அரவிந்தகுமாரன்-

(தொடரும்)

நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 01
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 02
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 03
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 04
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 05
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 06
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 07
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 08
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 09
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 10
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 11
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 12
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 13
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 14
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 15
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 16
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 17
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 18
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 19