Breaking News

கூட்டமைப்பை பலப்படுத்துவதற்கான அரிய வாய்ப்பு!: சம்பந்தன் பயன்படுத்திக் கொள்வாரா? – யதீந்திரா

தமிழ் மக்கள் பேரவை – இன்றைய அர்த்தத்தில், தமிழ் அரசியல் சூழலில் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் ஒரு பெயர். தற்போதைக்கு இது ஒரு பெயர் மட்டுமே. இதன் அடுத்த கட்ட நகர்வுகளை பொறுத்துத்தான், இதன் அரசியல் இருப்பை மதிப்பீடு செய்யமுடியும்.

பொதுவாக தமிழ்ச் சூழலில் ஒரு நோய் உண்டு. அதாவது, புதிதாக ஏதாவது முன்னெடுப்புக்கள் தெரிந்தால், உடனடியாக அது பற்றி எவ்வித ஆதாரங்களுமற்று, அவதூறுகளை பரப்புவது. தமிழ்த் தேசிய அரசியல் பரம்பரையில் இது ஒரு வாழையடி வாழை வியாதி.

இத்தனை அழிவுகளுக்கு பின்னரும் கூட, இதிலிருந்து மீணடெழும் மார்க்கங்கள் காண எவரும் முயற்சிக்கவில்லை. இந்த வியாதி அரசியல் வாதிகளுக்கு மட்டும் உரித்தான ஒன்றல்ல மாறாக, புத்திஜீவிகள், இலக்கிய வாதிகள் என்று அனைவரையும் பாரபட்சமில்லாமல் இது தொற்றியிருக்கிறது.

தமிழ் மக்கள் பேரவை தொடர்பில் என்னுடன் பேசிய ஆளுமைகள் என்போர் இரண்டு விதமாக பேசினர்: ஒன்று, இது குட்டையை குழப்பிற வேலை என்றனர். இன்னும் சிலரோ, இதுக்கு பின்னால் யார் இருக்கினம் என்பதை முதலில் கண்டுபிடிக்க வேணும், நிச்சயமாக யாரோ இருக்கினம் என்றனர்.

சில இணையத்தளங்கள் இந்த பேரவை தொடர்பில் அவசர அவசரமாக புலனாய்வு அறிக்கைகளையும் வெளியிட்டன. அடிப்படையில் சம்பந்தன் இது போன்றதொரு விடயத்தை சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை. குறிப்பாக தமிழ் மக்கள் பேரவை என்னும் அமைப்பு ஆரம்பிக்கப்பட்டதாக செய்தி வெளிவந்தவுடன், இது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிளவாகவே நோக்கப்பட்டது.

இது தொடர்பில் இந்திய ஊடகம் ஒன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் பிளவு ஏற்பட்டிருப்பதாக, செய்தியிட்டிருந்தது. இதனைத் தொடர்ந்தே சம்பந்தன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் எவரும் பிளவை ஏற்படுத்த முடியாது என்று தெரிவித்திருந்தார்.

உண்மையில் அப்படியொரு பிளவு இதுவரை ஏற்படவில்லை ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் கருத்து ரீதியான பிளவு இருப்பது இரகசியமான ஒன்றுமல்ல. அதனை சம்பந்தன் வார்த்தையில் கூறுவதானால், ஒரு ஜனநாயக அமைப்புக்குள் அது சர்வ சாதாரணமாகும்.

தமிழ் மக்கள் பேரவை தொடர்பில் இப்பத்தியிடம் எவ்வித பிரமிப்புக்களோ, சந்தேகங்களோ இல்லை. ஏனெனில் இது, ஜனநாயகத்தில் சாதாரணமானது. சிலரது அரசியல் பார்வை தொடர்பில் இப்பத்தியாளர் ஆச்சரியப்படுவதுண்டு.

சிலர் ஜனநாயகம் பற்றி பேசுவர். மாற்றுக் கருத்துக்கள் பற்றி பேசுவர். இதில் பலர் இன்றுவரை விடுதலைப் புலிகள் மாற்றுக் கருத்துக்களை மதிக்கவில்லை என்று தொடர்ச்சியாக பேசி வருபவர்கள். ஆனால் அவ்வாறானவர்களே இப்போது இந்த பேரவை எதற்கு என்கின்றனர்.

இந்தப் பத்தியை பொறுத்தவரையில் நூறு பூக்கள் பூக்கட்டுமே, என்பதில் எவ்வித கருத்து முரண்பாடும் கொள்ளவில்லை. அப்பூக்கள் பிஞ்சுகளாக உருப்பெற்று காயாகி, பின் கனியாகுமா அல்லது முளையிலேயே கருகி சிதைவுறுமா என்பதெல்லாம், அந்த அமைப்பை உருவாக்கியிருப்பவர்களின் புத்தி சாதுரியத்திலும், புதிய சூழ்நிலைகளை கையாளும் திறனிலும் தங்கியிருக்கிறது.

ஒன்றில் பேரவை செழிக்கும், அல்லது கருகிச் சிதையும். 2009ல் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு அழிவுற்ற போது, எஞ்சியிருந்த மிதவாதிகளில் மூத்த தலைவரான சம்பந்தன், தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலத்தை கையாளும் தலைவரானார்.

அதுவரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத் தலைவராக இருந்த சம்பந்தன், விடுதலைப் புலிகளின் அரசியல் அஸ்தமனத்திற்கு பின்னர், தமிழ் மக்களின் தலைவரானார்.

சம்பந்தன் கூட்டமைப்பின் தலைவராக இருந்த கடந்த ஆறு வருடங்களில், கூட்டமைப்பை தன்னுடைய எண்ணத்திற்கு ஏற்பவே கொண்டு நடத்தி வருகின்றார். தான் நினைப்பதையே செய்து வருகின்றார்.

இத்தனைக்கும் சம்பந்தன் ஒரு கட்சியை பிரதிநிதித்துவப்படுத்துவர் மட்டுமே, ஆனால் ஏனைய மூன்று கட்சிகளாலும் சம்பந்தனை தங்களின் எண்ண ஓட்டத்திற்குள் இழுத்துவர முடியவில்லை.

உள்ளுக்குள்ளும் வெளியிலும் பல்வேறு தடவைகள் சம்பந்தனுடன் முரண்பட்ட போதும், விமர்சித்த போதும், மூன்று கட்சிகளாலும் சம்பந்தனை கட்டுப்படுத்த முடியவில்லை.

பிரபாகரன் ஏனைய இயக்கங்களை தடைசெய்து தன்னுடைய மேலாதிக்கத்தை நிறுவ முற்பட்ட காலத்திலும் கூட, அனைத்து இயக்கங்களும் ஒன்றுபட்டிருந்தால் பிரபாகரன் கதை அன்றே முடிந்திருக்கும்.

ஆனால் அது நிகழவில்லை. ஏனெனில் ஒருவருக்கு நிகழும் போது, அது நாளை தங்களுக்கு நிகழாது என்னும் ஒரு மாயைக்குள் ஏனைய இயக்கங்கள் மூழ்கியிருந்தன. ஆனால் பிரபாகரனுக்கு ஒவ்வொரு இயக்கங்களின் பலவீனமும் நன்கு தெரிந்திருந்தது. ஆனால் பிரபாகரனை ஏனைய இயக்கங்களுக்கு தெரிந்திருக்கவில்லை.

அதே போன்றுதான் கடந்த ஆறு வருடங்களாக ஒரு கூட்டமைப்பாக செயற்பட்ட போதிலும் கூட, சம்பந்தன் கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளை நன்கு தெரிந்து வைத்திருந்தார். இவர்கள் மூவரும் ஒன்றுசேர முடியாத புள்ளிகளை நன்றாக தெரிந்து வைத்திருந்தார். அந்த புள்ளிகளை பெருப்பித்து துவாரமாக்கினார்.

இடைவெளிகளை கச்சிதமாக கையாண்டு, மிகவும் கெட்டித்தனமாக ஏனைய இயக்கங்களின் வழியாக, கூட்டமைப்புக்குள் வரும் திறமையான நபர்கள் அனைவரையும் தமிழரசு கட்சிக்குள் இழுத்துக் கொண்டார்.

இந்த இடத்தில் சம்பந்தனுக்கு ஏனைய கட்சிகளை நன்கு தெரிந்திருந்தது. ஆனால் ஏனைய கட்சிகளுக்கு சம்பந்தனை கணிக்கத் தெரியவில்லை. ஒரு சிலர் கணித்தாலும் அவர்களால் ஒரு கட்டத்திற்கு மேல் செல்ல முடியாதளவிற்கு, ஏற்கனவே கட்சிகளுக்கிடையிலான இடைவெளிகளை சம்பந்தன் பெருப்பித்திருந்தார்.

ஆனால் விடயம், முன்னர் பிரபாகரன் முந்தி, பிந்தி என்னும் வகையில் அனைத்து இயக்கங்களையும் தொடர்ச்சியாக பலவீனப்படுத்தி, அரசியல் அரங்கிலிருந்து அப்புறப்படுத்தியது போல, சம்பந்தனும் கூட்டமைப்பிலிருக்கும் அனைத்து கட்சிகளையும் தனித்தனியாக ஓரங்கட்டி, இறுதியில் தமிழரசு கட்சி ஒன்றை மட்டுமே நிலைபெறச் செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றார்.

ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து, புதிய அரசியல் யாப்பு, தேர்தல் முறையில் மாற்றம் போன்ற விடயங்கள் விவாதிக்கப்பட்டு வருகின்றன. அதில் எத்தகைய மாற்றங்கள் இடம்பெறும், அது தமிழ் மக்களுக்கு சாதகமானதாக அமையுமா என்னும் கேள்விகளுக்கு பதிலில்லா விட்டாலும், சில விடயங்கள் நிச்சயம் நிகழத்தான் போகின்றன.

அரசியல் யாப்பு எவ்வாறு அமையும் என்னும் கேள்விக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஓரளவிற்கு பதிலளித்தும் விட்டார். புதிய அரசியல் யாப்பு ஐரோப்பிய நாடான ஒஸ்ரியாவின் அதிகாரப்பகிர்வு முறைமையை (Austrian system of devolution) உள்ளடக்கியதாக இருக்கும் என்று தெரிவித்திருக்கின்றார்.

அது என்ன ஒஸ்ரியன் மாதிரி? இதனை படித்து, தெரிந்து கொள்ள தமிழர்களுக்கு எவ்வளவு காலம் ஆகும்? ரணில் இவ்வாறு பகிரங்கமாக கூறுகின்றார் என்றால் நிச்சயமாக, இது தொடர்பில் சம்பந்தனுடன் பேசியிருப்பார், சுமந்திரன் உடனிருந்திருப்பார்.

இது எவ்வாறான நன்மைகளை கொண்டிருக்கும்? ஏற்கனவே நடைமுறையில் இருக்கின்ற 13வது திருத்தச்சட்டத்தின் அதிகாரங்களை முழுமையாக உறுதிப்படுத்தும் அதேவேளை, அவற்றை மீளவும் கையேற்காத வகையில் இருக்குமா அல்லது அதனை விடவும் கூடுதலான அதிகாரங்களை கொண்டிருக்குமா?

இது தொடர்பில் வடக்கு கிழக்கிலுள்ள தமிழ் புத்திஜீவிகள், சிவில் சமூக செயற்பாட்டாளர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளதா? இதற்கெல்லாம் பதில் இல்லை. இதற்கெல்லாம் பதில் இல்லைமையால்தான், தாம் ஒரு அமைப்பாக இயங்க வேண்டிய தேவையிருப்பதாக தமிழ் மக்கள் பேரவையினர் கூறுகின்றனர்.

நான் மேலே சம்பந்தன் கட்சிகளை திறமையாக பிரித்தாண்டு, வெற்றிகரமாக தன்னுடைய எண்ணங்களை செல்படுத்திய முறைமையைப் பற்றி குறிப்பிட்டிருந்தேன். ஆனால் சம்பந்தன் சறுக்கிய ஒரு இடமும் உண்டு. அதுதான் வடக்கு முதலமைச்சர் விக்கினேஸ்வரன் விவகாரம்.

இன்று சம்பந்தன் குறித்த பேரவை தொடர்பில் சற்று பதட்டமடைந்திருப்பதும் கூட, முதலமைச்சர் விக்கினேஸ்வரன் அங்கிருக்கிறார் என்பதால்தான். சம்பந்தன் இந்த விடயத்தை எவ்வாறு கையாளப் போகின்றார்? கூட்டமைப்பை பலப்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பாக இதனை பயன்படுத்திக் கொள்வாரா?

அல்லது கருணாவுடனான முரண்பாட்டின் போது, தனது பலத்தின் மீது மட்டுமே நம்பிக்கை கொண்டிருந்த பிரபாகரன், கருணாவின் மீது தனது இராணுவத்தை பிரயோகித்து, இறுதியில் கிழக்கில் நாலாயிரம் பேரை இழந்தது போன்று, சம்பந்தனும் தன்னுடைய அதிகாரத்தின் மூலம், விக்கினேஸ்வரனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முயற்சித்து, கூட்டமைப்பின் பிளவை உறுதிப்படுத்துவாரா?

எனது அவதானத்தில் சம்பந்தன் பெருமளவிற்கு விக்கினேஸ்வரனிடம் இறங்கிச் செல்வதற்கான வாய்ப்பு இல்லை அதேவேளை, நிலைமைகள் மேலும் மோசமடையாத வகையில் விக்கினேஸ்வரனை அவரது போக்கில் விட்டுவிட்டு, அமைதியாக இருக்கக் கூடும். கொக்கு மீனுக்காக காத்திருப்பது போன்று சம்பந்தன் சந்தர்ப்பத்திற்காக காத்திருக்கக் கூடும். சம்பந்தன் இப்படியான விடயங்களில் கைதேர்ந்தவர்.

அண்மையில் தமிழரசு கட்சியின் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் உறவினரான, ஆங்கில பத்திரிகையாளர் ஒருவர் எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டிருக்கும் விடயங்களை உற்று நோக்கினால், ஒரு கட்டத்தில் சம்பந்தன், சுமந்திரன், மாவை ஆகிய முக்கூட்டு, விக்கினேஸ்வரனை பதிவியிலிருந்து அகற்றுவதற்கான முயற்சியை பொருத்தமான தருணத்தில் மேற்கொள்ளக் கூடுமென்றே தெரிகிறது.

சம்பந்தனை பொறுத்தவரையில் இந்த ஆண்டு முக்கியமானது, ஏனெனில் இந்த ஆண்டுதான் நான் மேலே குறிப்பிட்ட மறுசீரமைப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. தேர்தல் முறைமை திருத்தப்பட்டு, தொகுதிவாரி முறைமை வந்த பின்னர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்னும் அரசியல் கூட்டிற்கு அவசியமில்லாது போகும்.

அதன் பின்னர் கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் கட்சிகள் ஒன்றில் தனித்து போட்டியிட வேண்டும் அல்லது தங்களுக்குள் ஒரு கூட்டை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். தனித்து போனால் தமிழரசு கட்சியை எதிர்கொள்வது மிகவும் சவாலானது. இயக்கங்களுக்கு தமிழ் மக்கள் மத்தியில் தனித்துவமான செல்வாக்கில்லை, என்னும் பொதுவான அபிப்பிராயம் நிலவுகிறது.

அது உண்மைதான் ஆனால் இதற்கு காரணம் தமிழ் மக்கள் இந்த முன்னாள் இயக்கங்களை வெறுக்கிறார்கள் என்பதல்ல. இன்று இருக்கும் மாகாண சபை கூட இயக்கங்களின் போராட்டத்தின் விளைவுதான். ஆனால், கடந்த முப்பது வருடங்களாக இயக்க அரசியல் என்பது விடுதலைப் புலிகள் சார்ந்ததாகவே இருந்தது.

இந்தக் காலத்தில் தற்போது கூட்டமைப்பிற்குள் அங்கம் வகிக்கும் முன்னாள் போராட்ட அமைப்புக்கள் அனைத்தும், இயக்கங்கள் என்னும் அடைமொழியால் தமிழ் மக்களின் புதிய தலைமுறைக்கு அறிமுகமாகியிருக்கவில்லை. உண்மையில் மேற்படி இயக்கங்கள் அனைத்தும், ஒரு கூட்டமைப்பாக இயங்கிய கடந்த ஆறு வருடங்களில், தங்கள் இயக்க பெயர்களை மாற்றி, புதிய பெயர்களுடன் மக்களை எதிர்கொண்டிருக்க வேண்டும்.

தமிழரசு கட்சியின் மிதவாத தோற்றத்தை பிரதியீடு செய்திருக்க வேண்டும். ஆனால் கூட்டமைப்பை மட்டும் நம்பி, தமிழரசு கட்சியின் சின்னத்தில் தங்கியிருந்தனர். இதனை தமிழரசு கட்சி தங்களுடை அரசியல் பகடைக்கு பயன்படுத்திக் கொண்டது.

எனவே தொகுதிவாரி முறைமை வந்தால், கூட்டமைப்பு என்பது, அவசியம் இல்லாது போவது நிச்சயம், எனவே அதனை எதிர்கொள்வதற்கான உபாயங்களை அவர்கள் யோசிக்காமல் இருந்தால், அது அவர்களின் அறியாமையாகவே இருக்கும்.

குறிப்பாக அடுத்து வரவுள்ள உள்ளுராட்சி தேர்தலின் போது கூட, அனைத்து கட்சிகளுக்குமான வட்டாரங்களை பிரிப்பது, மிகவும் சிக்கலான பிரச்சினையாக மாறும். இதன்போதும் புதிய கூட்டுக்களுக்கு வாய்ப்பிருக்கிறது.

மொத்தத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஒரு தமிழ்த் தேசிய அரசியல் கட்சியாக பதிவு செய்வதன் மூலம் மட்டுமே இந்த பிரச்சினைகளை நிவர்த்தி செய்ய முடியும். ஆனால் அதற்கு தமிழரசுக் கட்சியின் முக்கூட்டு அணி, அனுமதிக்கப் போவதில்லை.

ஆனால் சம்பந்தன் தனது வாழ்நாளின் இறுதியிலாவது, இந்த பிரச்சினைகளை உணர்ந்து, கூட்டமைப்பை சட்டரீதியாக பலப்படுத்துவதற்கு இணங்கி, அதற்கான முயற்சிகளை மேற்கொண்டால் மட்டுமே, இந்த பிரச்சினை தீரும்.

தமிழ் மக்கள் பேரவை என்பது எழுமா, விழுமா என்பதற்கு அப்பால், இதனை ஒரு நல்ல வாய்ப்பாக கொண்டு, சம்பந்தன் நிலைமைகளை சாதகமாக கையாள முடியும். அதேவேளை தமிழ் மக்கள் பேரவையாக இணைந்திருப்பவர்களும், சம்பந்தன் மற்றும் சுமந்திரன் என்னும் தனிநபர்கள் மீதான தன்முனைப்பு வாதங்களுக்குள் அகப்படாமல் செயலாற்றுவது அவசியம்.

வெறும் சுலோகங்களை மட்டும் வைத்துக் கொண்டும் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வையோ அல்லது அவர்களின் வாழ்வில் முன்னேற்றங்களையோ ஏற்படுத்திவிட முடியாது.

ஒரு உயர்ந்த கோரிக்கையை முன்வைக்கின்ற அதேவேளை, ஒரு சில சாதகமான விடயங்கள் கைகூடிய வருமானால் அதனையும் தட்டிவிடாத வகையில்தான் தமிழ் சூழலிலுள்ள அமைப்புக்கள் சிந்திக்க வேண்டும்.

அதேவேளை சம்பந்தன் ஒரு விடயத்தை நம்புவாராயின் அது தொடர்பில் தமிழ் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். அவர் அமைதியாக இருப்பதுதான் பல்வேறு பிரச்சினைகள் தலைநீட்டுவதற்கான காரணம்.

தமிழ் மக்கள் இன்று எந்த நிலையில் இருக்கின்றனர் என்பதை துல்லியமாக உணராது முன்வைக்கப்படும் சுலோகங்கள் நிச்சயமாக தமிழ் மக்களுக்கு நன்மையளிக்கப் போவதில்லை.

இதில் பல முன்னைய தவறுகளை எண்ணிப் பார்க்கவும் வேண்டும். இது சம்பந்தனுக்கும் பொருந்தும் ஏனையவர்களுக்கும் பொருந்தும்.

யதீந்திரா