Breaking News

தமிழ் மக்கள் பேரவை ஜனநாயக அமைப்பு என்பது சம்பந்தனுக்கு தெரியும்! சீ.வி.

தமிழ் மக்கள் பேரவை ஒரு ஜனநாயக ரீதியான அமைப்பு என்பதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் ஏற்றுக்கொண்டுள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தான் இரா.சம்பந்தனுக்கு தெளிவுபடுத்தியுள்ளதாகவும் அதனை அவர் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும்சீ.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் மக்கள் பேரவை தொடர்பில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தெரிவித்திருக்கும் கருத்துகள் தொடர்பில் நேற்று வடமாகாணசபை வளாகத்தில் வைத்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கூட்டமைப்பில் உள்ள சில முக்கிய உறுப்பினர்களுக்கு இது எரிச்சலூட்டும் வகையில் அமைந்திருந்தால் தன்னால் ஏதும் செய்ய இயலாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.கடந்த சில தினங்களுக்கு முன்னதாக தான் இரா.சம்பந்தனை கொழும்பில் சந்தித்தபோது, இந்த அமைப்பு குறித்து தெளிவுபடுத்தியதாகவும் அவர் கூறியுள்ளார். 

மேலும் இந்த சந்திப்பின்போது தான் கூறிய விடயங்களை அவர் முழுமையாக செவிமடுத்ததாகவும், இதுவொரு கட்சி அல்ல என்பதை அவர் புரிந்துகொண்டுள்ளதாகவும் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளார்.