தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் சறுக்கல்களும் தமிழ் மக்கள் பேரவையின் உருவாக்கமும் - THAMILKINGDOM தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் சறுக்கல்களும் தமிழ் மக்கள் பேரவையின் உருவாக்கமும் - THAMILKINGDOM
 • Latest News

  தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் சறுக்கல்களும் தமிழ் மக்கள் பேரவையின் உருவாக்கமும்

  கடந்த வார இறுதியின் மாலைப்பொழுதொன்றில்
  உருவாகிய தமிழ் மக்கள் பேரவை பற்றிய செய்திகளும் அதை ஒட்டிய அரசியல் பரபரப்பும் இன்னமும் அடங்கியபாடாகத் தெரியவில்லை. இது தொடர்பில் ஆதரித்தும், எதிர்த்தும் பல்வேறு கருத்துக்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

  தமிழ் அரசியல் பெருவெளியில் அண்மைக் காலங்களில் இடம்பெற்ற ஓர் குறிப்பிடத்தக்க நிகழ்வு இது எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கான ஓர் மாற்று அரசியல் சக்தியாக இது  உருவாகும் எனவும் இதனை நோக்குபவர்களும் உண்டு. அதேநேரம் தமிழ் மக்கள் பேரவையின் உருவாக்கம் என்பது பத்தோடு பதினொன்றாக இன்னுமொரு நிகழ்வு எனவும் இதனைப் பெரிதுபடுத்தத் தேவையில்லை எனவும் சிலர் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். 

  குறிப்பாக தமிழரசு கட்சியினரும் அது சார்ந்த அச்சு மற்றும் இணையத்தள ஊடகங்களும் தமிழ் மக்கள் பேரவையின் உருவாக்கம் தொடர்பில் மிகக் கடுமையான அல்லது எதிர்மறையான கருத்துக்களை வெளியிட்டு வருவதைக் காணக்கூடியதாக உள்ளது. இதேவேளை இன்னொரு தரப்பினர் இந்த அரசியல் குழப்ப நிலையைப் பயன்படுத்தி தனிப்பட்ட  ரீதியில் தங்களை முதன்மைப்படுத்த என்னென்ன நகர்வுகளைச் செய்ய முடியுமென குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க முயல்வதை அவதானிக்கக் கூடிதாகவுள்ளது. 

  இவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையுடன் முறிந்துபோன தமது பழைய உறவுகளைப் புதுப்பிக்க அல்லது பலப்படுத்த  இதனைப் பயன்படுத்த திட்டமிட்டு வருவதாகவும் அறியமுடிகிறது.  இத்தகைய சூழ்நிலையில் தமிழ் மக்கள் பேரவை ஒன்று ஆரம்பிக்கப்படுவதற்கான சந்தர்ப்ப சூழ்நிலையையும் அதற்கான தேவை எவ்வாறு ஏற்பட்டது என்பதையும் ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.  

  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தென்னிலங்கை சக்திகளுடனான எதிர்ப்பு அரசியல் என்பதைக் கைவிட்டு இணக்க அரசியல் என்கின்ற பாதைக்குள் பிரவேசித்து ஏறத்தாழ ஒருவருடம் நிறைவடைந்துள்ளது. இந்த ஒரு வருட காலத்தில் தமிழ் மக்கள்  பெற்றுக்கொண்டவை எவை? இழந்தவை எவை? என்பதை அவதானிப்போமாயின் தமிழ் மக்கள் பேரவை உருவாக்கத்திற்கான சூழ்நிலையையும் தேவையையும் புரிந்துகொள்ள முடியும் என நான் நம்புகிறேன். 

  போருக்குப் பின்னரான காலப்பகுதியில் மிகவும் இறுக்கமாக அதிக கெடுபிடிகளுடன் நிலவிவந்த மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தினது ஆட்சியினை அகற்றி நல்லாட்சி என்று கூறப்படுகின்றன மைத்திரி பால  சிறிசேனவின் ஆட்சியை உருவாக்குவதற்கு பெருமளவில் பங்களித்தவர்கள் தமிழ் மக்கள் ஆவர். இந்த மாற்றத்திற்காக மைத்திரி, ரணில் மற்றும் சந்திரிகாவுடன் கைகோர்த்து அதனை தமிழ் மக்கள் மத்தியில் சிபார்சு செய்தவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர். 

  ஆனால் இம்மாற்றத்தின் பெறுபேறுகளை அல்லது நன்மைகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தமிழ் மக்களுக்குப் பெற்றுக்கொடுக்க தவறிவிட்டனர் என குற்றம் சாட்டுபவர்களும் உண்டு. குறிப்பாக தமிழ் மக்களது உடனடி மற்றும் உணர்வு பூர்வ பிரச்சினைகளான இராணுவ ஆக்கிரமிப்பிலிருந்து காணிகளை விடுவித்துக்கொள்வது, அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல்போனோர் தொடர்பான விடயங்கள், இறுதிக்கட்ட யுத்தக் குற்றங்கள் தொடர்பான விசாரணை என பல்வேறுபட்ட விடயங்கள் காணப்பட்டாலும் கூட அது தொடர்பில் இதுவரை எதுவித ஆக்கபூர்வமான விடயங்களும் நிறைவேற்றப்படாமை தமிழ் மக்கள் மத்தியில் அதிருப்தி நிலை ஒன்றை உருவாக்கிவிட்டுள்ளது எனக் குறிப்பிடமுடியும். 

  குறிப்பாக தமிழ் அரசியல் கைதிகள்  விடுதலை தொடர்பில் அரசாங்கம் நடந்துகொண்ட முறைமையும் அது தொடர்பிலான விடயங்களைக் கூட்டமைப்பினர் கையாண்ட முறைமையும் தமிழ் மக்களை கோபம் கொள்ள வைத்துள்ளது.  யாழ். மாவட்டத்தின்  வலி. வடக்குப் பிரதேசத்தில் இன்னமும் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விஸ்தீரணமான பொதுமக்களின் நிலங்கள் இராணுவத்தினரின் ஆக்கிரமிப்பில் உள்ளதுடன், சில நூறு ஏக்கர்களின் விடுவிப்பைத் தவிர இன்னமும் விடுவிக்கப்படாமல் ஆறாயிரம் ஏக்கருக்கு அதிகமான நிலங்கள் காணப்படுகின்றன. 

  இது தொடர்பில் எதுவித காத்திரமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்பதுடன், அம்மக்கள் இன்னமும் முகாம்களிலேயே வாழவேண்டிய அவல நிலை காணப்படுகின்றது.  காணாமல் போனோர் விடயத்திலும் இதுபோன்றே எதுவிதமான உருப்படியான நடவடிக்கைகளும் எடுத்ததாகத் தெரியவில்லை. புதிய அரசாங்கமும் வெறுமனே ஆணைக்குழு, விசாரணை என கால இழுத்தடிப்பினையே செய்து வருகின்றது. 

  இவ்விடயங்கள் தொடர்பில் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அரசிற்கு போதியளவு அழுத்தத்தினைக்கொடுக்கவில்லை என்கின்ற ஆதங்கம் தமிழ் மக்கள் மத்தியில் எழ ஆரம்பித்துள்ளது. இது தவிரவும் வேறு பல விடயங்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மீது தமிழ் மக்கள் மத்தியில் வெறுப்பினையும் சந்தேகத்தினையும் உருவாக்கியுள்ளன. குறிப்பாக ஜெனீவா மனிதவுரிமை மாநாட்டில் கலந்துகொண்ட கூட்டமைப்பின் உறுப்பினர்கள் அரசிற்குச் சார்பான நடவடிக்கைகளையே மேற்கொண்டிருந்தனர் என்றும் தமிழ் மக்கள் தொடர்பில் விசுவாசமாக நடந்துகொள்ளவில்லை எனவும் செய்திகள் இணையத்தளங்கள் வாயிலாக வெளிவந்தன. 

  இவற்றின் உண்மை, பொய் என்பவற்றிற்கு அப்பால் இவை தமிழ் மக்கள் மத்தியில் கூட்டமைப்பினர் மீதான வெறுப்பைச் சம்பாதித்துக் கொடுத்திருந்தன. இந்நிலையில் தமிழ் மக்கள் மீது இடம்பெற்றது இனப்படுகொலை எனக் கூறமுடியாதென கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஜெனீவாவில் கூறியதாக வெளிவந்த கருத்தும் மக்களை மேலும் விசனத்துக்கு ஆளாக்கியது. தேர்தல் காலங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்களுக்கு இடையில் இடம்பெற்ற அநாகரீகமான சம்பவங்களும் தேர்தலின் விருப்பு வாக்கு எண்ணுதல் தொடர்பில் வெளிக்கிளம்பிய வதந்திகளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் மீது தமிழ் மக்களை அருவருப்புக்கொள்ளச் செய்துள்ளன. இவை எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தாற்போல சுமந்திரன் விக்னேஸ்வரன் முரண்பாடும் மக்கள் மத்தியில் அதிருப்தியை உருவாக்க வழிவகுத்துள்ளது. 

  சரி பிழை என்பவற்றிற்கு அப்பால் விக்னேஸ்வரன் என்கின்ற தனிமனித ஆளுமையை தமிழ் மக்கள் மிகவும் விரும்புகின்றனர் என்பதே உண்மையாகும். செல்வநாயகத்திற்கு இணையாக விக்னேஸ்வரன் மீது தமிழ் மக்கள் அன்பு கொண்டுள்ளார்கள் என்பது அப்பட்டமான உண்மையாகும்

  இந்நிலையில் தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் அவருக்கு பல்வேறு நெருக்கடிகளைக் கொடுத்தமையும் அவரைக் கட்சியிலிருந்தும் முதல்வர் பதவியிலிருந்தும் அகற்றக் கோரியமையும், அதற்காக நேரடியாகவும் மறைமுகமாகவும் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டமையும் கூட்டமைப்பினர் மீது தமிழ் மக்களுக்கு உருவாகியிருந்த அதிருப்தியினை அதிகப்படுத்தின எனலாம்.  

  இவை எல்லாம் இவ்வாறிருக்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைக்கு நெருக்கமான பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் 1990 இல் முஸ்லிம் மக்களை வடக்கிலிருந்து வெளியேற்றியமை ஓர் இனச் சுத்திகரிப்பு நடவடிக்கை என வியாக்கியானம் செய்ததுடன் தமிழ் மக்கள் இதற்குப் பொறுப்பேற்க வேண்டும் எனவும் கூறியிருந்தமையானது தமிழ் மக்களை மிகவும் கோபத்திற்குள்ளாக்கிய நடவடிக்கையாகப் பார்க்கப்படுகின்றது.  

  இது தவிர நயினாதீவு பெயர் மாற்றம், கொக்கிளாய் விகாரை கட்டுமானம், முல்லைத்தீவு காடழிப்பு போன்ற விடயங்களில் கூட்டமைப்பினர் காட்டிய அசிரத்தையும் மெத்தனப் போக்கும் தமிழ் மக்களை "போதும்' என்ற நிலைமைக்கு கொண்டுவந்துவிட்டன என்று கூறப்படுகின்றது.  தமிழ் மக்கள் தொடர்பில் இத்தகைய சறுக்கல்களை தொடர்ச்சியாக ஏற்படுத்தி வந்த கூட்டமைப்பினர் மறுபுறத்தில் தமக்கான பதவிகளையும் சலுகைகளையும் தென்னிலங்கை அரசாங்கத்திடம் கோரிப் பெற்றுவந்துள்ளனர். 

  சம்பந்தருக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி, அடைக்கலநாதனுக்கு குழுக்களின் பிரதித்தலைவர் பதவி,  மாவை சேனாதிராஜா, சிறிதரன், சிவமோகன், சார்ள்ஸ், அடைக்கலநாதன், சிறினேசன் போன்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மாவட்ட அபிவிருத்திக் குழுக்களின் இணைத்தலைமைப் பதவிகள் மற்றும் ஏனையோருக்கு இதர பல பதவிகளும் சலுகைகளும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அரசாங்கத்தின் சலுகைகளில் திளைத்துக்கொண்டிருக்கிறார்கள். 

  தென்னிலங்கைத் தலைவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களை, பாராளுமன்றத்தில் புகழ்ந்துரைக்கும் அளவிற்கு கூட்டமைப்பின் அடிமை விசுவாசம் கோலோச்சுகிறது.  இத்தகைய சூழ்நிலையில் தமிழ்த் தேசியக்  கூட்டமைப்பினர் தமிழ் மக்களுக்குரிய நியாயமான தீர்வினைப் பெற்றுத்தருவார்களா? என்கின்ற ஐயம் தமிழ் மக்களிடையே உருவாகியுள்ளது. எதிர்வரும் வருடம் அரசியல் தீர்வொன்றிற்கான முன்னெடுப்பினை தென்னிலங்கை மேற்கொள்ளலாம் என்கின்ற நிலையில் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை பிரதிபலிக்கும் வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் செயற்படுவார்களா? என்கின்ற சந்தேகம் பொதுமக்கள் மத்தியில் உருவாகியுள்ளதுடன் கவலைகொள்ளவும் செய்துள்ளது.  

  இந்நிலையில் தான் வடக்கு, கிழக்கின் சிவில் அமைப்புகளைச் சேர்ந்த கல்விமான்கள், தொழில்வல்லுநர்கள், சமூகப் பிரதிநிதிகள், சமயத் தலைவர்கள் என பல்வேறுபட்ட தரப்பினர் இணைந்து புதிய அமைப்பான தமிழ் மக்கள் பேரவையை உருவாக்கியுள்ளனர். இவர்களது பிரதான நோக்கம் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு தொடர்பான ஓர் வரைபினை முன்வைப்பதாகச் சொல்லப்படுகிறது. உண்மையில் இது ஓர் வரவேற்கத்தக்க விடயமென்றே சொல்லவேண்டும். 

  இதுவரையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரோ அல்லது வேறு தமிழ் அமைப்பினர்களோ தமிழ் மக்களுக்கு எந்த வகையான அரசியல் தீர்வு தேவை என்பதனை விரிவாக முன்வைக்கவில்லை. எமக்கு என்ன வேண்டும் என உலகிற்கு எடுத்துரைப்பது காலத்தின் கட்டாயம். அதனை தமிழ் மக்கள் பேரவை முன்னெடுக்க முனைந்திருப்பது உண்மையிலேயே வரவேற்கத்தக்க விடயமாகும்.  ஆனால், இந்நோக்கத்தைப் புரிந்துகொள்ளாத சிலர் அல்லது புரிந்துகொண்டும் தமது எதிர்கால இருப்புக்கு இப் புதிய அமைப்பு இடைஞ்சலாக இருக்கும் எனக் கருதி  அதன் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்த வண்ணம் உள்ளனர். 

  ஆனால் மறுபுறத்தில் கற்றறிந்த சமூகத்திடையே இப்புதிய அமைப்பிற்கு நல்ல வரவேற்று காணப்படுவதாக அறியக்கூடியதாக உள்ளது. நான் முன்னர் கூறியதைப்போல கூட்டமைப்பின் சறுக்கல்களும் காலத்தின் தேவையும் தமிழ் மக்கள் பேரவையின் உருவாக்கத்திற்கு வழிவகுத்துள்ளன. அது மக்களின் அரசியல் சக்தியாக பரிமளித்து வெற்றிநடை போடுவதை காலமும் மக்களும் அதன் செயற்பாடுகளும் தீர்மானிக்கும் என எண்ணத் தோன்றுகின்றது.  

  -தினக்குரல்-
  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் சறுக்கல்களும் தமிழ் மக்கள் பேரவையின் உருவாக்கமும் Rating: 5 Reviewed By: Tamilkingdom LK
  Scroll to Top