Breaking News

யாழிசை: ஒரு பெண் போராளியின் வாழ்க்கைப் போராட்டம்

இலங்கையில் யுத்தம் முடிவடைந்து 7 ஆண்டுகளாகவுள்ளன. இந்த நிலையில் போருக்குப் பின்னரான வாழ்க்கை மற்றும் சமூக நிலைமைகள் பற்றி பேசுகின்ற இலக்கியப் படைப்புகள் பல வெளிவருகின்றன.

அந்த வகையில், முன்னாள் போராளிகளான பெண்களின் வாழ்க்கைப் போராட்டத்தை சித்தரிக்கும் விதத்தில் யாழிசை என்ற நாவல் ஒன்று வெளிவந்துள்ளது.யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்ட இந்த நாவல், இலக்கிய உலகில் பலருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளதுடன் பரபரப்பையும் ஏற்படுத்தியிருக்கின்றது.

இந்த நாவலை எழுதிய சிவ ஆரூரன் என்ற சிவலிங்கம் ஆரூரன் ஒரு பொறியியல் பட்டதாரி.மெகசின் சிறைச்சாலையில் கடந்த 8 ஆண்டுகளாக 'அரசியல்' கைதியாக தடுத்துவைக்கப்பட்டுள்ள சிவ ஆரூரனின் முதல் இலக்கிய முயற்சி இந்த நாவல் தான்.

சிறைச்சாலையில் நூல் வாசிப்பு மூலம் பெற்ற இலக்கிய அறிவையும் வாழ்க்கை அனுபவத்தையும் கொண்டு அவர் இந்த நாவலை எழுதியுள்ளார்.இந்த நாவல் பற்றி பிபிசி தமிழோசையிடம் கருத்து வெளியிட்ட வவுனியாவில் உள்ள தேசிய கல்வியியல் கல்லூரியின் முதுநிலை விரிவுரையாளரும் திறனாய்வாளருமாகிய நடராஜா பார்த்தீபன், 'அண்மைக் காலத்திலே நான் வாசித்த நாவல்களிலேயே இந்த நாவல் எனக்கு மிகவும் பிடித்த நாவல் என்று கூற விரும்புகிறேன்' என்றார்.

'யாழிசை நாவலின் கதாநாயகி சமூகத்திலே படுகின்ற துன்பங்களையும், கஸ்டங்களையும் இந்தக் கதையின் ஊடாகக் காட்டுகின்ற நாவலாசிரியர், போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களின் இன்றைய சமூக வாழ்க்கையை குறியீடாக சித்தரித்திருக்கின்றார் என்பதை மறுக்க முடியாது' என்றார் பார்த்திபன்.

எம் மண்ணின் மைந்தர்கள் பற்றி தத்ரூபமான கதையை நாவலாசியர் அமைத்துள்ளார் என்றார் பார்த்திபன்.