Breaking News

முள்ளியவளை மத்தி தமிழ் மக்களின் காணிகளின் வன இலாகா திடீர் அத்துமீறல்

முல்லைத்தீவு - முள்ளியவளை மத்தி ஜயனார் குடியிருப்புக்கு எதிர்ப்புறப்பகுதியில் மக்களுடைய காணிகளில் வன இலாகா அதிகாரிகள் திடீர் அத்துமீறல்களை மேற்கொள்வதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரனிடம் முறையிட்டுள்ளனர். குறித்த பகுதிகளுக்கு மாகாண சபை உறுப்பினர் மக்களினால் நேரடியாகவும் அழைத்துச்செல்லப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குறித்த பகுதியில் மக்கள் தமக்குச் சொந்தமான காணிகளில் இருந்து வருகின்றார்கள். பல காலமாக தமது வேலிகளை அமைத்த இடங்களிலெல்லாம் வன இலாகா பகுதியினர் அவ் வேலிகளை பிடுங்கி எறிந்தும் பல வருடங்களாக எல்லைகளுக்கு இடப்பட்ட கிழுவை மரங்களை அரிந்தும் தமது காணிகளுக்குச் செய்த அட்டூழியங்களையும் தம்மோடு தகாத வார்த்தைப்பிரயோகங்களை பிரயோகித்ததாகவும் ரவிகரனிடம் மக்கள் முறைப்பாடு தெரிவித்தனர்.

மேற்குறித்த சம்பவங்கள் பற்றி வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரனின் கவனத்திற்கு கொண்டு சென்றதின் பேரில் நேரடியாக அவ்விடத்திற்கு சென்று அப்பகுதி மக்களின் குறைகளை கேட்டு அறிந்து கொண்டார்.

தொடர்ந்து மக்களின் காணிகளில் சென்று பார்வையிட்டு சம்பவங்களை உறுதிப்படுத்தியதோடு அந்த மக்களுக்கு ஆறுதல் கூறி இது விடயத்தில் சம்மந்தப்பட்டவர்களுடன் தொடர்பு கொண்டு ஆவன செய்வதாக உறுதியளித்துள்ளார்.