Breaking News

தமிழ் மக்களின் எதிர்பார்ப்பை அரசாங்கம் நிறைவேற்றவில்லை : சித்தார்த்தன்

நல்லாட்சி அரசாங்கத்திடம் தமிழ் மக்கள் எதிர்பார்த்த விடயங்கள் இன்னும் நிறைவேற்றப்படாத நிலையிலேயே உள்ளதென, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

தமது விடுதலையை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டுவரும் தமிழ் அரசியல் கைதிகளை, நேற்று (சனிக்கிழமை) கொழும்பு புதிய மகசீன் சிறைச்சாலைக்கு சென்று பார்வையிட்டதன் பின்னர் அவர் இக்கருத்தினை வெளியிட்டார்.

அரசியல் கைதிகள் மீது வழக்குத் தொடர்ந்து அவர்களை விடுவிக்கவேண்டும், அல்லது புனர்வாழ்வளிக்கவேண்டும். ஆனால் எவ்வித முடிவும் இன்றி தடுத்துவைத்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாதென அவர் இதன்போது தெரிவித்தார்.

இதுகுறித்து, சட்டமா அதிபருடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கலந்துரையாடி வருவதாக தெரிவித்த அவர், தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் தொடர்ந்தும் அரசாங்கத்திற்கு கூட்டமைப்பினர் அழுத்தம் கொடுத்து வருவதாக தெரிவித்தார்.

அரசியல் கைதிகளின் விடுதலை மட்டுமன்றி, காணிப்பிரச்சினை, காணாமல் போனோர் தொடர்பான பிரச்சினை குறித்தும் அரசாங்கத்திடம் கலந்துரையாடி வருவதாக தெரிவித்த சித்தார்த்தன், எனினும் இவற்றிற்கு இன்னும் தீர்வு கிடைக்கப்பெறாத நிலையே காணப்படுவதாக குறிப்பிட்டார்.