Breaking News

தர்சனனை மீண்டும் கொண்டுவர முயற்சி! தீவிர முனைப்பில் வசந்தி அரசட்ணம்!


 யாழ்.பல்கலைக்கழகத்தின் நுண்கலைப்பீடத்தின் இசைத்துறைத் தலைவராக செயற்பட்டபோது மாணவிகள் மீது தொடர்ந்து மேற்கொண்ட பாலியல் துஸ்பிரயோக முயற்சியின் காரணமாக இடைநிறுத்தப்பட்ட ஸ்ரீதர்சனனை மீளவும் பல்கலைக்கழகத்துக்குள் கொண்டுவதற்கான முயற்சியில் உயர்நிலை அதிகாரிகள் சிலர் ஈடுபட்டிருப்பதாக தெரியவந்திருக்கிறது. 

இதுகுறித்து மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணப்பல்கலைக்கத்தின் இசைத்துறையில் பயில்கின்ற மாணவிகள் மீது பாலியல் இலஞ்சம் உட்பட்ட பாலியல் ரீதியிலான தொடர் கெடுபிடிகளிலும் பல்கலைக்கழக சட்ட விதிமுறைகளை மீறுகின்ற முறையில் நடந்துகொண்ட குற்றச்சாட்டின் அடிப்படையிலும் இசைத்துறையின் முன்னாள் தலைவர் ஸ்ரீதர்சனன் கடந்த ஆண்டு மாணவி ஒருவர் மேற்கொண்ட முறைப்பாட்டின் அடிப்படையில் பல்கலைக்கழக நிர்வாகத்தினால் இடைநிறுத்தப்பட்டிருந்தார். 

பாலியல் இலஞ்சம் கோரியதாக மாணவி முன்வைத்த குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே அவர் இடைநிறுத்தப்பட்டிருந்தார். குறித்த குற்றச்சாட்டுத் தொடர்பில் விசாரிப்பதற்கென யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பேரவையால் விசாரணைக்குழு ஒன்று நியமிக்கப்பட்டிருந்தது. விசாரணைக்குழு மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் தர்சனன் தொடர்பில் மாணவி தெரிவித்த குற்றச்சாட்டு உண்மை என நிரூபணமாயுள்ள போதிலும் மாணவி மீது உடல்ரீதியான தீண்டுதலில் ஈடுபடவில்லை என்பதால் அவர் குற்றவாளி இல்லை என அறிக்கை இறுதி செய்யப்பட்டு பேரவையிடம் கையளிக்கப்பட்டிருப்பதாக தெரியவருகிறது. 

இதனிடையே பேரவையில் அங்கம் பெறுகின்ற நேர்மையான அதிகாரிகள் சிலர், குறித்த அறிக்கையினை ஏற்றுக்கொள்ளமுடியாது என்றும் தர்சனன் இவ்வாறான ஏராளமான சம்பவங்களில் கடந்தகாலங்களில் ஈடுபட்டிருப்பதாகத் தெரிவித்து வருவதாகத் பல்கலைக்கழக உயர்மட்டத்தகவல்கள் தெரிவிக்கின்றன. இசைத்துறையில் பயில்கின்ற நூறுக்கும் மேற்பட்ட மாணவிகளிடமும் தர்சனன் தொடர்பிலான குற்றச்சாட்டுக்களை வைத்திருந்ததாகத் தெரிவித்திருந்த வெளியாரிடமும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

இதேவேளை தர்சனனை மீளவும் இசைத்துறையினுள் கொண்டுவருவதற்கான முயற்சியில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம் ஈடுபட்டிருப்பதாகவும் அவருக்கு துணையாக சில பேராசிரியர்களும் பாடுபட்டுவருவதாகவும் அந்தத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன. தர்சனன் இசைத்துறைத் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதன் பின்னர், மாணவர்களைப் பழிவாங்கும் நோக்கில் பல்கலைக்கழகத்தினர் நுண்கலைத்துறையின் அனைத்துத்துறைத் தலைவர்களும் துறை சாராதவர்களாக நியமிக்கப்பட்டிருப்பதாக மாணவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். 

இசைத்துறையின் தலைவராக விஞ்ஞான பீடத்தைச் சேர்ந்த ஒருவரும், நடனத் துறைத் தலைவராக முகாமைத்துவப்பீடத்தைச் சேர்ந்த ஒருவரும் ஓவியத் துறையின் தலைவராக இசைத்துறையைச் சேர்ந்த ஒருவரும் நியமிக்கப்பட்டிருக்கின்றமையால் கற்றல் நடவடிக்கைகள் முற்றாக பாதிக்கப்பட்டுவருவதாக மாணவர்கள் கவலை வெளியிட்டுள்ளதுடன் இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறும்பட்சத்தில் எதிர்காலத்தில் தமது கல்வி நடவடிக்கைகளில் பாரிய பாதிப்புக்களை சந்திக்க நேரிடும் என்றும் தெரிவித்துள்ளனர். 

முன்னாள் இசைத்துறைத் தலைவர் ஸ்ரீதர்சனன் மாணவிகளிடம் பாலியல் இலஞ்சம் கோருதல் மற்றும் தொலைபேசி ஊடான துர்பிரயோக நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்தமை தொடர்பிலான ஒலி ஆதாரங்கள் ஊடகங்களின் கைகளில் சிக்கியிருந்தமை தெரிந்ததே.