Breaking News

கலையரசனை பொலிஸாரிடம் ஒப்படைத்தது,மனித உரிமைகள் ஆணைக்குழுவினர்

தனது கணவர் கலையரசனை பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் துரத்தி வந்ததை மனித உரிமைகள் ஆணைக்குழு அதிகாரிகள் நேரடியாக அவதானித்ததாக கலையரசனின் மனைவி தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பாக ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை பதிவுசெய்துள்ளதாகவும் கூறினார்.திருகோணமலை மாவட்டத்தின் புலனாய்வுத் துறைப் பொறுப்பாளர் கலையரசன் பயங்கரவாத விசாரணைப்பிரிவின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

கடந்த 24 ஆம் திகதி அதிகாலை தொலைபேசி அழைப்பு வந்தாக தெரிவிக்கும் கலையரசனின் மனைவி, உரையாடியவர்கள் சிங்கள மொழியில் கதைத்ததால் அச்சத்தில் தனது கணவர் அழைப்பினைத் துண்டித்ததாக தெரிவித்தார்.

இதன்பின்னர் குறித்த தினம் காலை 9.30 மணிக்கு சிங்கள மொழி பேசிய இருவர் வீட்டிற்கு வந்தாகவும், குறித்த வீடு உங்கள் சொந்த வீடா அல்லது வாடகைக்கு இருக்கிறீர்களா? போன்ற பல்வேறு கேள்விகளை எழுப்பியதாகவும் தாம் வாடகை வீட்டில் வசிப்பதாக அவர்களிடம் தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

இவ்வாறு வீட்டிற்கு வந்த இருவரும் வீட்டு உரிமையாளரிடம் தாம் சொந்த வீட்டில் இருப்பதாக தம்மிடம் தெரிவித்ததாகவும், பல்வேறு விடயங்களை வினவிச் சென்றதாகவும் வீட்டின் உரிமையாளர் தம்மிடம் கூறியதாக அவர் தெரிவித்தார்.

இதுமாத்திரமன்றி கிராமசேவகருக்கு அழைப்பை மேற்கொண்டு தனது கணவர் தொடர்பில் விசாரித்துள்ளதாகவும் மனைவி தெரிவித்தார்.இதனைத் தொடர்ந்து குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த அருட்சகோதரர் ஒருவரின் ஆலோசனைக்கு அமைவாக திருகோணமலையில் உள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு சென்றதாகவும் தெரிவித்த அவர்,

மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடுசெய்ய தனது கணவருடன் முச்சக்கரவண்டியில் சென்ற நிலையில், பயங்கரவாத விசாரணைப்பிரிவினர் தம்மை இடைமறித்து, துரத்தியதாகவும் கூறினார்.

துரத்திச் சென்ற பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் திருகோணமலையில் உள்ள மனித உரிமைகள் ஆணைக்குழு அலுவலகத்திற்குள் நுழைந்ததாகவும், இந்த நிலையில், ஆணைக்குழு அதிகாரிகள் பயங்கரவாத விசாரணைப் பிரிவினருடன் கலந்துரையாடி பொலிஸாரிடம் ஒப்படைத்ததாகவும் மேலும் கூறினார்.