விக்னேஸ்வரன் பிரிவினையை ஏற்படுத்துகிறாராம்! - விமல் கூறுகிறார்
வட மாகாண சபையும் வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரனும் நாட்டில் பிரிவினையை தோற்றுவிப்பதாகவும், அதனை தடுத்து நிறுத்தாவிட்டால் நாட்டில் மீண்டும் ஒரு ஆயுத போராட்டம் ஏற்பட வழிவகுக்கும் என்றும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஒன்றிணைந்த எதிரணியின் செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். விமல் தொடர்ந்து கூறுகையில்-
”விடுதலைப் புலிகளுடனும் புலம்பெயர் புலி அமைப்புக்களுடனும் இணைந்து தேர்தலில் வெற்றிபெற்றவர்களுக்கு புலிகளால் ஒருபோதும் அச்சுறுத்தல் இல்லை. குறிப்பாக ஜனாதிபதி மைத்திரி, பிரதமர் ரணில், அமைச்சர் சரத் பொன்சேகா ஆகியோருக்கு அச்சுறுத்தல் இல்லை. ஆனால், புலிகளுக்கு எதிராக போராடிய மஹிந்த ராஜபக்ஷவுக்கே அச்சுறுத்தல் உள்ளது.
ஆனால், மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு தற்போதைய அரசாங்கத்திற்கு வேடிக்கையாக உள்ளது. நாட்டில் எவ்வித அச்சுறுத்தலும் இல்லையென கூறுகின்றனர். இவர்கள் அனைவரும் புலிகளுடனும் புலம்பெயர் புலி அமைப்புகளுடனும் கைகோர்த்து அரசியல் செய்தவர்கள். ஆகையால் இவர்களுக்கு அச்சுறுத்தல் இல்லை. ஆரம்பத்திலிருந்தே புலிகளை பலப்படுத்தும் வேலையையே இவர்கள் செய்து வருகின்றனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் வட மாகாண சபையும் புலிகளுடன் கைகோர்த்து அரசியல் செய்பவர்கள். இன்று வடக்கில் நடக்கும் சம்பவங்கள் அனைத்தும் மக்களுக்கு நன்கு தெரியும். வடக்கில புலிகளின் ஆதிக்கம் தலைதூக்கியுள்ளது. வட மாகாண சபையும் வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரனும் பலமான பிரிவினைவாத கொள்கையுடையவர்கள். இவர்களுக்கு தொடர்ந்தும் இடம்கொடுத்தால் நாட்டில் மீண்டும் ஆயுதப் போராட்டம் தலைதூக்கும். ஆகவே இவற்றை எதிர்த்து போராட மக்கள் எம்முடன் கைகோர்க்க வேண்டும்” என்றார்.








