Breaking News

2016 தீர்வு கிடைக்கும் என்பது எனது கணிப்பு- எதிர் கட்சித்தலைர்

தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வை முன்வைப்பது தான் அல்ல என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் இன்று ஞாயிற்றுக்கிமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

2016 ஆம் ஆண்டு அரசியல் தீர்வு எட்டப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் வாக்குறுதியில் தெரிவிக்கப்பட்டது.

அதற்கான முயற்சிகள் எந்தக்கட்டத்தில் இருக்கின்றன என ஊடகவியலாளர் ஒருவர் இதன்போது கேள்வியெழுப்பினார்.

இதற்கு பதிலளித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர், 2016 ஆம் ஆண்டில் இனப்பிரச்சினைக்கான தீர்வு கிடைக்கும் என தான் கூறியது தனது கணிப்பு எனவும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரே இனப்பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

அத்துடன் அரசாங்கத்திற்கு 3 இல் 2 பெரும்பான்மை இல்லாவிட்டாலும் கூட்டமைப்பின் ஒத்துழைப்புடன் அதனை பெற்றுக் கொள்ள முடியும். 

எனவே இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் எல்லோரும் விசுவாசமாக நடந்து கொண்டால் தன்னுடைய கணிப்பீட்டின் படி இந்த ஆண்டு தீர்வினை பெற்றுக் கொள்ளலாம் என இரா. சம்பந்தன் தெரிவித்தார்.

மேலும் இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் கூட்டமைப்பு தீவிரமான ஈடுபாட்டை காட்டி வருகின்றோம்.

தமிழ் மக்கள் சமூக, பொருளாதார, கலாசார விடயங்களை பாதுகாத்து வாழ கூடிய நியாயமானதும் நிரந்தரமானதுமான ஒரு தீர்வை பெற்றுக் கொடுக்க நாங்கள் முயற்சித்துக் கொண்டிருக்கின்றோம். 

மேலும் நாங்கள் மக்கள் மீது தீர்வை திணிக்கப்போவதுமில்லை. இறுதி தீர்வு எட்டப்பட்டவுடன் மக்களிடம் வந்து அவர்களுடைய கருத்துக்களை அறிந்து கொண்டே அதற்கு உடன்பாட்டை தெரிவிப்போம் என குறிப்பிட்டார்.

இதேவேளை, ஜெனிவா தீர்மானம் நடைமுறைப்படுத்தப்படுகின்றமை குறித்து கருத்து தெரிவித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா. சம்பந்தன்,

உன்மைகள் கண்டறியப்படவேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் கிடைக்கவேண்டும். எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாது பார்த்துக் கொள்ளவேண்டும். இவற்றை பெற்றுக் கொள்வதற்கான வழி அரசியல் தீர்வு மட்டுமே என குறிப்பிட்டார்.

அத்துடன் எதிர்வரும் ஜூன் மாதம் 13 ஆம் திகதி ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 32 ஆவது கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது. இதில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் வாய்மொழி மூல அறிக்கையினை வழங்கவுள்ளார். 

அதற்காக 2015 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் நடைமுறைப்படுத்தப்படுகின்றதா? என்பதை அரசாங்கம் கூறவேண்டும் எனவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா. சம்பந்தன் குறிப்பிட்டார்.