சிங்களவர்களை விரட்டியடிக்க வடமாகாண சபை தீவிர முயற்சி
இன்று வடக்கு, கிழக்கு தமிழ் மாநிலங்கள் கேட்பவர்கள் நாளை வடக்கு, கிழக் கில் உள்ள சிங்களவர்களை வெளியேற்ற வேண்டும் என்பார்கள். தவிர்க்க முடியாத நிலையில் வடக்கில் உள்ள சிங்களவர்களை விரட்டியடிக்க முயற்சிபார்கள். வடக்கில் மீண்டும் பயங்கரவாத போக்கை ஆரம்பித்து விட்டனர் என பாராளு மன்ற உறுப்பினரும் முன்னாள் பாதுகாப்பு தரப்பு ஊடகப் பேச்சாளருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
வடமாகாண சபையின் நகர்வுகளும், புலம்பெயர் அமைப்புகளின் செயற் பாடுகளும் இன்று வடக்கில் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளன. ஆகவே வடக்கில் மீண்டும் இராணுவ பாதுகாப்பை பலப்படுத்த வேண்டிய காலம் வந்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.
தமிழ் மக்கள் வாழும் வடக்கு கிழக்கு மாகாணங்கள் ஒரு மாநிலமாகவும் சிங்கள மக்கள் வாழும் ஏனைய மாகாணங்கள் இன்னொரு மாநிலமாகவும் பிரகடனம் செய்யப்பட வேண்டும் என வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ள நிலையில் இது தொடர்பில் பொது எதிரணியின் நிலைப்பாட்டை கொழும்பு ஊடகம் ஒன்று வினவியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
நல்லாட்சி அரசாங்கம் நாட்டில் ஜனநாயகத்தையும் சமாதானத்தையும் பலப்படுத்துவோம் என்ற பெயரில் நாட்டில் பிரிவினையை தூண்டி வருகின்றது. எந்த சந்தர்ப்பத்திலும் வடக்கு மாகாணம் நாட்டில் பிரிவினை வாதத்தின் பக்கமே தொடர்ச்சியாக செயற்பட்டு வருகின்றது. வடமாகாண முதலமைச்சரும் வடமாகாண சபையினரும் எப்போதுமே நாட்டை துண்டாடும் நிலைப்பாட்டில் தான் உள்ளனர். இப்போது வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரனின் கருத்துகளும் வடமாகாண சபையின் தீர்வு திட்டங்களும் மீண்டும் நாட்டில் போராட்டத்தை உருவாக்கும் வகையிலேயே அமைந்துள்ளன.
தனி தமிழ் பிராந்தியங்களும் தனி சிங்கள பிராந்தியங்களும் நாட்டில் அமைக்கப்படுமாயின் நாட்டில் சிங்கள தமிழ் உறவிலும் பாரிய விரிசல் நிலைமை ஏற்படும். அது மாத்திரம் இன்றி வடக்கு பகுதிகளுக்கு சிங்கள மக்கள் செல்லவோ அல்லது வடக்கில் சிங்கள மக்கள் வாழவோ முடியாத நிலைமை ஏற்படும். இப்போது இருக்கும் சிங்கள மக்களையும் வடக்கில் இருந்து வெளியேற்ற இவர்கள் அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பார்கள். தவிர்க்கும் பட்சத்தில் சிங்களவர்களை விரட்டியடிக்கவும் தயங்கமாட்டார்கள். இவ்வாறன நிலைமையினால் மீண்டும் நாட்டில் பாரிய குழப்பங்களும் போராட்டங்களும் ஏற்படும்.
வடமாகாண சபையின் இந்த செயற்பாடு குறித்தும் முதலமைச்சரின் கருத்து தொடர்பிலும் இப்போது அரசாங்கம் என்ன செய்யப்போகின்றது. எவ்வாறான பதிலை முன்வைக்கப்போகின்றது என்பதே எமது கேள்வியாகும். எவ்வாறு இருபினும் இன்று நாடு மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றது. எமது அரசாங்கம் வென்றெடுத்த தேசிய ஐக்கியத்தையும், பாதுகாப்பையும் இந்த அரசாங்கம் முழுமையாக சீரழித்து விட்டது. தேசிய பாதுகாப்பில் பாரிய சந்தேகம் எழுந்துள்ளது.
வடக்கில் மீண்டும் புலிகளின் ஆதிக்கம் தலைதூக்கி வருகின்றது. கொழும்பிலும் புலிகளின் சீருடைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த நிலைமையை பார்க்கும்போது மீண்டும் நாட்டின் தேசிய பாதுகாப்பை பலப்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. ஆகவே வடக்கில் மீண்டும் இராணுவ பாதுகாப்பை பலப்படுத்த வேண்டிய காலம் வந்துள்ளது. வடமாகாண சபையின் நகர்வுகளும், புலம்பெயர் அமைப்புகளின் செயற்பாடுகளும் இன்று வடக்கில் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளன என்றார்.








