சித்திரவதை முகாம் - அரசாங்கத்தின் மறுப்பு அறிக்கை ஜெனீவாவுக்கு
திருகோணமலை சித்திரவதை முகாம் மற்றும் பரணகம ஆணைக்குழுவின் செயற்பாடுகள் குறித்து ஐக்கிய நாடுகள் சிறப்பு குழுவினரால் வெளியிடப்பட்ட அதிருப்பதிக்கு பதிலளிக்கும் வகையில் அறிக்கை ஒன்றை ஸ்ரீலங்கா வெளிவிவகார அமைச்சு தயாரித்து வருகின்றது.
பரணகம ஆணைக்குழுவுடன் இணைந்து இந்த அறிக்கையை வெளிவிவகார அமைச்சு தயாரித்து வருவதாகவும், ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவின் அடுத்த அமர்வில் அதனை சமர்பிக்கவிருப்பதாகவும் உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஸ்ரீலங்காவிற்கு அண்மையில் விஜயம் செய்த ஐ.நா சிறப்பு குழுவினர் திருகோணமலைக்கு விஜயம் செய்து அங்கு உள்ளதாக கூறப்படும் இரகசிய சித்தரவதை முகாம் பகுதிக்கும் சென்று ஆய்வுகளை நடத்தியிருந்தனர்.
திருகோணமலை கடற்படை முகாமுக்குள் இரகசிய தடுப்பு முகாம் ஒன்று இருப்பதை தாம் அவதானித்ததாகவும், 2010ஆம் ஆண்டு வரை அந்த முகாமில் ஆட்கள் தடுத்து வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கிப்பதாகவும், காணாமல் போனோர் குறித்த ஐக்கிய நாடுகளின் சிறப்புக் குழுவினர் தெரிவித்திருந்தனர்.
இதனையடுத்து கொழும்பு திரும்பிய சிறப்புக்குழுவினா் விசேட ஊடகவியலாளர் மாநாடு ஒன்றை நடத்தி இது சம்பந்தப்பட்ட தகவல்களையும் வெளியிட்டிருந்தனர்.
அதேவேளை ஐ.நா சிறப்பு அதிகாரிகளது விஜயத்தின்போது குறித்த இரகசிய முகாமில் கைப்பற்றப்பட்ட எச்சங்கள் இரகசிய பொலிஸாரினால் மீட்கப்பட்டதோடு பகுப்பாய்விற்கும் அவை அனுப்பப்பட்டிருந்தன.
இதேவேளை அரசாங்கத்தின் கடந்த கால நடவடிக்கைகள் தொடர்பில் சந்தேகம் வெளியிட்ட குறித்த குழுவினர் பரணகம ஆணைக்குழுவையும் தொடர்புபடுத்தி கருத்துக்களை வெளியிட்டிருந்தனர்.
இந்த நிலையில் ஐ.நா சிறப்பு குழுவினரது இந்தக் கருத்துக்களுக்கு பதிலளிக்கும் வகையிலான அறிக்கை ஒன்றை ஜெனீவா மாநாட்டில் தாக்கல் செய்வதற்கு எதிர்பார்ப்பதாக பரணகம ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் ஐ.பி.சி தமிழ் செய்திகளுக்குத் தெரிவித்தார்.
இந்த செயற்பாட்டில் ஸ்ரீலங்கா வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகளும் ஈடுபட்டுள்ளனா். அத்துடன் தமது ஆணைக்குழுவினால் தெளிவுபடுத்தும் விடயங்களை அறிக்கையாக வெளிவிவகார அமைச்சிடம் ஒப்படைத்திருப்பதாகவும் அந்த பேச்சாளர் கூறினார்.
எவ்வாறாயினும் இறுதி அறிக்கையை தயாரிக்கும் பணியை வெளிவிவகார அமைச்சு ஏற்றிருப்பதோடு அறிக்கை எதிர்வரும் ஜெனீவா மாநாட்டில் சமர்பிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.








