Breaking News

முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி எங்கே? பொதுமக்கள் கேள்வி



இறுதி யுத்தத்தில் உயிரிழந்த மக்களின் நினைவாக முள்ளிவாய்க்காலில் நினைவுத் தூபி அமைப்பதற்கு மாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதற்காக குழுவும் நியமிக்கப்பட்ட போதும் முள்ளிவாய்க்கால் நினைவு தினம் நெருங்கி வருகின்ற நிலையில் அங்கு தூபி அமைக்கப்படாத நிலை குறித்து மக்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.

முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த மக்களின் நினைவாக அங்கு தூபியொன்று அமைக்கப்படுமென கடந்த வருட முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தில் போது தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கமைய அங்கு தூபியொன்று அமைப்பதென மாகாண சபையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. அத்தோடு இதற்காக பிரதி அவைத் தலைவர் தலைமையில் பதினொரு பேர் கொண்ட குழுவொன்றும் அமைக்கப்பட்டிருந்தது.

ஆயினும் இன்னும் சில தினங்களில் முள்ளிவாய்க்கால் படுகொலை தினம் அனுஷ்டிக்கப்படவிருக்கின்ற நிலையில் அங்கு தூபி அமைக்கப்படாத நிலையே இருக்கின்றது. இந் நிலையில் அங்கு தூபி அமைக்கப்படுவதோ அல்லது அமைக்கவில்லை என்பது தொடர்பிலோ சம்மந்தப்பட்ட தரப்பினர்கள் மௌனம் காத்து வருகின்றனர்.

இந் நிலையில் அங்கு அமைக்கப்படுவதாக இருந்த தூபி இதுவரையில் அமைக்கப்படாததற்கான காரணங்களும் தெரிவிக்கவில்லை. இவ் வேளையில் முள்ளிவாய்க்கால் நினைவு தூபி அமைக்கப்படுவதற்காக நியமிக்கப்பட்ட குழுவினர் என்ன செய்கின்றனர் என்று கேள்வியெழுப்பபட்டுள்ளது. ஆகவே அக்குழுவின் இயங்கா நிலையால் தான் இத் தூபி அமைக்க முடியவில்லையா என்று பலரும் கேள்வியெழுப்பியிருக்கின்றனர்