மஹிந்த அரசாங்கத்தின் நிகழ்ச்சிநிரலே நல்லாட்சியிலும் தொடருகிறது: சுரேஸ் காட்டம்
நீண்ட கால ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்த பின்னரும் தமக்கு விடிவு கிடைக்காத நிலையில், ஆட்சி மாற்றத்திற்காக வாக்களித்த மக்களுக்கு இன்னும் எவ்வித நன்மையும் பெற்றுக்கொடுக்காத அதே சந்தர்ப்பத்தில், தமிழ் மக்களது பிரதேசத்தில் இராணுவ குடியிருப்புக்களை ஏற்படுத்தப்படுவதானது, கடந்த அரசாங்கம் முன்னெடுத்த நிழ்ச்சிநிரலே நல்லாட்சியிலும் முன்னெடுக்கப்படுகின்றதென்பதை காட்டுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற, ரெலோ அமைப்பின் முன்னாள் தலைவர் சிறி சபாரத்தினத்தின் நினைவு தின நிகழ்வில் அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
கடந்த ஆட்சிகாலத்தில் காணப்பட்ட மக்களின் காணிகளை பறித்தெடுக்கும் செயற்பாடு இந்த ஆட்சியிலும் தொடர்கின்றதென சுட்டிக்காட்டிய அவர், முல்லைத்தீவில் தமிழர் காணிகளில் சிங்கள மீனவர்களை குடியேற்றுவதும், அதனை தட்டிக்கேட்பவர்கள் இராணுவத்தினரால் தாக்கப்படுவதும் எவ்வளவு தூரம் சரியாதென சிந்தித்து பார்க்கவேண்டுமென இதன்போது குறிப்பிட்டார்.
இவ்வாறான ஒரு சூழ்நிலையில், புதிய அரசியல் சாசனத்தில் தமிழ் மக்கள் எதிர்பார்த்த விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருக்கின்றனவா என, தமிழ் மக்கள் மத்தியில் பாரிய எதிர்பார்ப்பு காணப்படுவதாக சுரேஸ் பிரேமச்சந்திரன் மேலும் தெரிவித்தார்.








